புத்தளம் IFM முன்பள்ளி பாலர் பாடசாலையின் 52வது ஆண்டு விழாவும் விளையாட்டு நிகழ்வும் புத்தளம் மாவட்ட விளையாட்டரங்கில் எதிர்வரும் 30 ஆம் திகதி மாலை 3.45 மணிக்கு விமர்சையாக இடம்பெறவுள்ளது.
இந்நிகழ்வுக்கு விசேட அதிதியாக பஹன மீடியா பிரைவெட் லிமிட்டெட் நிறுவனத்தின் பணிப்பாளர் அஷ்ஷெய்க் அப்துல் முஜீப் அவர்கள் கலந்து சிறப்பிக்கவுள்ளார்.
புத்தளம் நகரில் தமிழ் மொழி மூலம் முதன் முதலாக ஸ்தாபிக்கப்பட்ட புத்தளம் மூன்றாம் குறுக்குத் தெருவில் இயங்கும் ஐ.எப்.எம். முன்பள்ளியின் 52 வது ஆண்டு நிறைவு மற்றும் அதன் வருடாந்த “டைனி டொட்ஸ்” இல்ல விளையாட்டு போட்டிகள்
பொறுப்பாசிரியை திருமதி எம்.எஸ்.பௌசுல் ரூஸி தலைமையில் இடம்பெறவுள்ளது.
புத்தளம் நகரில் தமிழ் மொழி மூல முன்பள்ளிகள் எதுவுமே இல்லாத ஒரு கால கட்டத்தில் 04.02.1972 ம் ஆண்டு இந்த ஐ.எப்.எம். முன்பள்ளி புத்தளத்தில் முதன் முதலாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இந்த இல்ல விளையாட்டு போட்டியில் “மா” மற்றும் “பலா” ஆகிய இரண்டு இல்லங்களை சேர்ந்த 25 மழலை சிறார்கள் தமது திறமைகளை மைதானத்தில் வெளிக்கொணர உள்ளார்கள்.
“நாம் இல்லையேல் நாளை என்பதும் இல்லை” என்பது இந்த வருட விளையாட்டு போட்டியின் தொனிப்பொருளாகும்.
50 மீட்டர் ஓட்டம், பழம் சேகரித்தல், பலூன் உடைத்தல், பூ கோர்த்தல், போத்தலில் நீர் நிறைத்தல், சாக்கு ஓட்டம், கால் கட்டி ஓட்டம், சீருடை அணிதல் உள்ளிட்ட பல போட்டிகள் இடம்பெறவுள்ளன.
போட்டிகளில் முதலாம், இரண்டாம், மூன்றாம் இடம் பெறும் பிள்ளைகளுக்கு பரிசில்கள் வழங்கப்படவுள்ளதோடு நிகழ்வில் பங்கேற்கும் அனைத்து பிள்ளைகளுக்கும் பெறுமதியான பரிசு, வெற்றிக் கிண்ணம், சான்றிதழ்கள் வழங்கப்படவுள்ளதோடு பதக்கங்களும் அணிவிக்கப்படவுள்ளன.
இல்ல அலங்கரிப்பு போட்டி, 03 ம் தரத்துக்கு உட்பட்ட ஐ.எப்.எம்.பழைய மாணவ மற்றும் மாணவிகளுக்கான போட்டி, பெற்றோர் மற்றும் அதிதிகளுக்கான போட்டிகளும் இடம்பெறவுள்ளன.
இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர்கள், புத்தளம் நகர சபையின் முன்னாள் தலைவர் கள் மற்றும் உறுப்பினர்கள் உள்ளிட்ட அரசியல் பிரமுகர்கள், இந்த முன்பள்ளியின் பழைய மாணவர்களான அரசியல் பிரபலங்கள், கல்வியியலாளர்கள், சமூக ஆர்வலர்கள், நகர சபை செயலாளர், சமூக அபிவிருத்தி அதிகாரி, முன் பிள்ளை பருவ அபிவிருத்தி அதிகாரி உள்ளிட்ட நகர சபையின் அதிகாரிகள், சமய தலைவர்கள், புத்தி ஜீவிகள், ஏனைய முன்பள்ளிகளின் ஆசிரியைகள் பலர் கலந்து கொள்ள உள்ளனர்.
பிரபல விளையாட்டு துறை நடுவர்களான எம்.ஓ.எம்.ஜாக்கிர், எம்.எஸ்.எம்.ஜிப்ரி தலைமையிலான நடுவர் குழாம் போட்டிகளில் நடுவர்களாக பங்கேற்க உள்ளனர்.
இந்த ஐ.எப்.எம். முன்பள்ளியானது புத்தளம் நகரில் பல உயர் பதவிகளை வகிக்கின்ற பலரை உருவாக்கிய பெருமையோடு இன்றும் சேவையாற்றி கொண்டிருப்பதானது இதன் வரலாற்று சாதனையை பறை சாட்டுகிறது.