மலேசிய முதலீட்டாளர்களை (FDI) நாட்டுக்குள் ஈர்த்துத் தருவது, கல்வியியலாளர்களையும் கல்வி நிறுவனங்களையும் பலப்படுத்துவது, தூதரக உறவுகளைப் பலப்படுத்துவது என்ற நோக்கங்களிலேயே இலங்கை முஸ்லிம் தொழில் வல்லுநர்கள் மற்றும் வணிக சங்கம் ( Sri Lankan Muslim Professionals and Business Association – SLAMP) உருவாக்கப்பட்டதாக அதனுடைய ஸ்தாபகத் தலைவர் கலாநிதி இஸ்மத் ரம்ஸி தெரிவித்தார்.
இந்த நோக்கங்களின் அடிப்படையில் ஒரு வருட காலம் செயற்பட்டதன் பின்னர் இந்தச் சங்கம் உருவாக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
மலேசியாவில் வசிக்கும் இலங்கை கல்வியியலாளர்கள், தொழில்வாண்மையாளர்கள், தொழில் முயற்சியாளர்கள் பலரும் இந்தச் சங்கத்தில் இணைந்திருக்கின்றனர்.
மலேசியாவிலுள்ள இலங்கை உயர்ஸ்தானிகர் அலுவலகத்துடன் இணைந்து இதனுடைய பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
மலேசியாவுக்கு வரும் இலங்கையர்களின் நலன் தொடர்பில் ஈடுபடுவதும் இந்த சங்கத்தின் பணியாகும். இந்தத் தொடரில் தற்போது மலேசியாவுக்கு சுற்றுலா மேற்கொண்டுள்ள 19 வயதின் கீழான இலங்கை மகளிர் அணியையும் இந்தச் சங்கம் தொடர்பு கொண்டதாகவும் சங்கத்தின் தலைவர் கலாநிதி இஸ்மத் ரம்ஸி தெரிவித்தார்.