மாஸ்கோவில் மின்சார ஸ்கூட்டரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த வெடிகுண்டு வெடித்ததில், ரஷ்யாவின் அணுசக்தி பாதுகாப்பு படையின் பொறுப்பதிகாரியான மூத்த ஜெனரல் இன்று கொல்லப்பட்டதாக அந்நாட்டு புலனாய்வு குழு தெரிவித்துள்ளது.
இந்தச் சம்பவம் பெரும் சர்வதேச அளவில் பேசுபொருளாகியுள்ளது.
ரஷ்யா உக்ரைன் இடையேயான போர் கடந்த 2022ம் ஆண்டு முதல் நடந்து வருகிறது. அப்போது திடீரென உக்ரைன் மீது ரஷ்யா சிறப்பு பாதுகாப்பு நடவடிக்கையை எடுத்தது. அப்போது தொடங்கிய முதல் இப்போது வரை தொடர்கிறது.
இடையில் சில காலம் மோதல் சற்று குறைந்து இருந்தது. ஆனால், எப்போது அமெரிக்கா உள்ளிட்ட மேற்குலக நாடுகள் தங்கள் அதிநவீன தாக்குதல் ஆயுதங்களைப் பயன்படுத்த உக்ரைனுக்கு அனுமதி அளித்ததோ அப்போது முதலே மீண்டும் போர் தீவிரமடைந்துவிட்டது.
இந்தச் சூழலில் யாரும் எதிர்பார்க்காத வகையில் ரஷ்யாவில் ஒரு தாக்குதல் நடந்துள்ளது. அதாவது இன்று மின்சார ஸ்கூட்டரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த வெடிகுண்டு வெடித்ததில், ரஷ்யாவின் அணுசக்தி பாதுகாப்புப் படை நடவடிக்கைகளைக் கவனித்து வரும் ரஷ்ய ஆயுதப்படையின் மூத்த ஜெனரல் கொல்லப்பட்டுள்ளார்.
அவர் தனது அடுக்குமாடி குடியிருப்பில் வெளியேற முயன்ற போது மின்சார ஸ்கூட்டர் வெடித்ததில் அவர் உடல் சிதறி கொல்லப்பட்டதாக ரஷ்ய அதிகாரிகள் தெரிவித்தனர்.
குண்டுவெடிப்பில் கொல்லப்பட்ட அந்த நபர் ரஷ்யாவின் அணுசக்தி, பயாலஜிக்கல் மற்றும் கெமிக்கல் பாதுகாப்புப் படைகளின் தலைவரான லெப்டினன்ட் ஜெனரல் இகோர் கிரில்லோவ் என்று அடையாளம் காணப்பட்டுள்ளது.
சரியாக அவர் கட்டடத்திலிருந்து வெளியே வந்த போது வெடிகுண்டு வெடித்ததில் அவரும் அவரது உதவியாளரும் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இது தொடர்பாக ரஷ்ய விசாரணை அதிகாரிகள் கூறுகையில்,
“ரஷ்ய ஆயுதப் படைகளின் கதிர்வீச்சு, கெமிக்கல் மற்றும் பயோ ஆயுத பாதுகாப்புப் படைகளின் தலைவர் இகோர் கிரில்லோவ் மற்றும் அவரது உதவியாளர் வெடிகுண்டு விபத்தில் கொல்லப்பட்டனர்” என்று கூறப்பட்டுள்ளது.
அங்கு அடுக்குமாடிக் குடியிருப்பிற்கு அருகே மிக மோசமான குண்டுவெடிப்பு ஏற்பட்டுள்ளது தொடர்பான போட்டோக்களும் இணையத்தில் இப்போது வெளியாகியுள்ளன. அதில் அடுக்குமாடிக் குடியிருப்பின் நுழைவாயில் இரண்டு உடல்கள் இரத்த வெள்ளத்தில் இருப்பதும் தெளிவாகத் தெரிகிறது. இந்தச் சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள ரஷ்ய அதிகாரிகள் குற்றவியல் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.
இகோர் கிரில்லோவ் கடந்த ஏப்ரல் 2017ம் ஆண்டு இந்த பயோ மற்றும் கெமிக்கல் ஆயுதப் படைப் பிரிவின் தலைவரா நியமிக்கப்பட்டு இருந்தார்.
அப்போது முதல் கெமிக்கல் ஆயுதங்கள் தொடர்பாக பல்வேறு பணிகளை ஜெனரல் இகோர் கிரில்லோவ் கவனித்து வந்தார்.
இந்தச் சூழலில் அவர் திடீரென எதிர்பாராத விதமாகக் கொல்லப்பட்டுள்ளது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தத் தாக்குதலுக்கு யார் காரணம் என்பது குறித்து அதிகாரப்பூர்வமாக எந்தவொரு தகவலும் இல்லை.
அதேநேரம் உக்ரைன் பாதுகாப்புப் படையின் (SBU) வட்டாரங்கள் அல் ஜசீராவிடம் தாங்கள் தான் இந்த தாக்குதலை நடத்தியதாகக் கூறியுள்ளது.
“ரஷ்யக் கதிரியக்க, கெமிக்கல் மற்றும் பயோ பாதுகாப்புப் படைகளின் தலைவர் இகோர் கிரிலோவ் மீதான குண்டுவெடிப்புக்கு நாங்கள் பொறுப்பேற்கிறோம்” என்று கூறியதாக அல் ஜசீரா குறிப்பிட்டுள்ளது.
இரு நாடுகளுக்கும் இடையேயான பதற்றம் மீண்டும் மெல்ல அதிகரித்து வரும் நிலையில், ரஷ்ய மண்ணில் வைத்தே முக்கிய புள்ளியை உக்ரைன் கொன்றுள்ளது. இதனால் இரு நாடுகளுக்கும் இடையேயான மோதல் மேலும் அதிகரிக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.