இலங்கையின் டிஜிட்டல் சந்தைக்கு புதிய விளம்பர தீர்வுகளை வழங்க
Aleph உடன் கைகோர்க்கும் TikTok
உலகின் முன்னணி குறுகிய வீடியோ பகிர்வு தளமான TikTok, டிஜிட்டல் விளம்பர தீர்வுகளில் உலகளாவிய முன்னோடியாக உள்ள Aleph நிறுவனத்தை இலங்கையின் உத்தியோகபூர்வ மறுவிற்பனை பங்காளராக தேர்ந்தெடுத்துள்ளது.
இலங்கையின் வர்த்தகநாமங்கள், முகவர் நிலையங்கள் மற்றும் வணிகங்களுக்கான தனித்துவமான வளர்ச்சியைக் குறிக்கும் இந்த கூட்டாண்மை, TikTok தளத்திற்குள் தனித்துவமான விளம்பர வடிவங்களை அறிமுகப்படுத்துவதற்கும், உள்ளூர் பயனாளர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் வாய்ப்பை வழங்கும்.
TikTok இல் உள்ள இந்த தனித்துவமான விளம்பர தீர்வுகள் மூலம், புதுமையான மற்றும் தாக்கம் நிறைந்த வழிகளில் இலங்கை பார்வையாளர்களை சென்றடைய உள்ளூர் வணிகளுக்கு ஆதரவளிக்கும். சிறு வணிகங்கள் முதல் நிறுவப்பட்ட வர்த்தகநாமங்கள் வரை, TikTok இன் ஆக்கப்பூர்வமான உள்ளடக்கம், நாடு முழுவதும் உள்ள பார்வையாளர்களுடன் வணிகங்களை இணைக்கவும், விளம்பரதாரர்களுக்கு இணையற்ற பலன்களைப் பெறவும் உதவும்.
இது குறித்து Aleph Holding இன் தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் பங்குதாரர் Ignacio Vidaguren கருத்துத் தெரிவிக்கையில், ‘இலங்கையில் TikTok உடனான எமது கூட்டாண்மை மூலம் குறுகிய வடிவ கையடக்க தொலைபேசி காணொளிகளுக்கான முன்னணி தளமாக TikTok இன் நிலையை மேலும் வலுப்படுத்துகிறோம்.
அனைத்து அளவிலான முகவர் நிலையங்கள், சிறு மற்றும் நடுத்தர வணிகங்கள் மற்றும் விளம்பரதாரர்களுக்கு TikTok இன் ஆக்கப்பூர்வமான உள்ளடக்கத்தைப் பயன்படுத்துவதற்கும், அதன் தனித்துவத்தை சமூகத்துடன் பகிர்ந்து கொள்வதற்கும் பணியாற்றி வருகின்றோம்.
மேலும், உள்ளூர் திறன்கள், கல்வி மற்றும் தனித்துவமான ஆதரவின் மூலம், இலங்கையில் உள்ள அனைவருக்கும் டிஜிட்டல் சந்தையில் நுழையும் வாய்ப்பை வழங்க நாங்கள் செயல்படுகிறோம்’. என்றார்.
இது குறித்து கருத்து தெரிவித்த TikTok இன் பாகிஸ்தான், பங்களாதேஷ் மற்றும் இலங்கைக்கான உலகளாவிய வர்த்தக தீர்வுகளின் கூட்டாண்மை முகாமையாளர் Faiza Zafa, ‘இலங்கையில் TikTok இன் திறன்களை மேலும் விரிவுபடுத்துவதற்கு நம்பகமான பங்காளியான Aleph உடன் இணைந்து கொள்வதில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம்.
TikTok ஏனைய சமூக ஊடகத் தளங்களை விட அதிக ஈடுபாடு கொண்ட உள்ளடக்கத்தை வழங்குவதன் மூலம் இலங்கையில் பிரபலமடைந்துள்ளது. எனவே, உள்ளூர் படைப்பாற்றல் மற்றும் வணிகச் சூழலை மேம்படுத்துவதில் நாங்கள் தொடர்ந்து கவனம் செலுத்தி வருகிறோம்’ என தெரிவித்தார்.
2024 ஆம் ஆண்டின் முற்பகுதியில் உருவாக்கப்பட்ட இந்த கூட்டாண்மை, உலகில் வேகமாக வளர்ந்து வரும் சமூக ஊடகத் தளங்களில் ஒன்றான TikTok இல் புதுமையான மற்றும் அற்புதமான பிரச்சாரங்களைத் தொடங்குவதற்கான வாய்ப்பாகவும் குறிப்பிடலாம்.
இதற்கு உள்ளூர் ஆதரவுடன், TikTok இன் பாரிய பயனர் தளத்திற்குள் நுழைய இலங்கையின் வர்த்தகநாமங்களுக்கு சந்தர்ப்பம் கிடைக்கும்.
Aleph பற்றி டிஜிட்டல் துறையில் வளர்ச்சிக்காக செயல்படும் தொழில்நுட்ப நிபுணத்துவத்துடன் கூடிய சிறப்பு வலையமைப்பான Aleph, பில்லியன் கணக்கான பார்வையாளர்களுடன் ஆயிரக்கணக்கான விளம்பரதாரர்களை ஒன்றிணைத்து, உள்ளூர் புது நிறுவனங்களுக்கு சந்தையை உருவாக்குவதில் முக்கிய பங்காற்றுகிறது.
130க்கும் மேற்பட்ட வளர்ந்து வரும் நாடுகளில் செயல்படும் Aleph, Google, Meta, Microsoft, Pinterest, Reddit, Snap, Spotify, TikTok, Twitch, Uber, X உள்ளிட்ட 45க்கும் மேற்பட்ட முன்னணி டிஜிட்டல் தளங்களுடன் பயனர்களை இணைக்கும் வாய்ப்பை விளம்பரதாரர்களுக்கு ஏற்படுத்திக் கொடுக்கிறது.
உள்ளூர் தீர்வுகளை இணைத்து தனது தொழில்நுட்ப திறன்களை மேம்படுத்துவதுடன், Aleph விளம்பரதாரர்களுக்கு சேவைகளை வழங்குவதில் முக்கிய பங்கு வகிக்கிறது.
மேலும், உள்ளூர் தொழில்துறை குழுக்கள், சமூக ஊடக நிபுணர்கள் மற்றும் டிஜிட்டல் விளம்பர நிபுணர்களுக்கு இலவசமாக டிஜிட்டல் விளம்பர அனுபவங்களை வழங்கும் ஒரு சமூக சேவை திட்டத்தையும் அறிமுகப்படுத்தியுள்ளது.
அதன் சமீபத்திய சேவையான Aleph Payments மூலம், உலகின் முன்னணி டிஜிட்டல் தளங்களின் வாடிக்கையாளர்களை அணுகி ஆரம்பம் முதல் இறுதி வரை கட்டண தீர்வுகளை வழங்குகிறது.
இது, வளர்ந்து வரும் நாடுகளில் முன்னணி கொடுப்பனவு சேவை வழங்குநராகவும் கடன் பாதுகாப்பாளர் (credit underwriter) ஆகவும் சேவைகளை வழங்குகிறது. உள்ளூர் டிஜிட்டல் துறையை மேலும் விரிவுபடுத்தி, அதனை உலகளாவிய தரத்துடன் இணைக்க வேண்டும் என்பதே Aleph இன் நோக்கமாகும்.
2005 ஆம் ஆண்டில் ஸ்தாபிக்கப்பட்ட Aleph நிறுவனத்தின் ஆரம்ப பிரதம நிறைவேற்று அதிகாரி Gaston Taratuta ஆவார். 2022ஆம் ஆண்டில், ஆண்டின் சிறந்த தொழில்முனைவோர் விருதைப் பெற்ற அவர், வேகமான இணைய சேவைகளை மேம்படுத்தும் மற்றும் நீண்டகால பொருளாதார வளர்ச்சியை நோக்கமாகக் கொண்ட முயற்சிகளை முன்னெடுத்தார்.
இன்று, Aleph 65க்கும் மேற்பட்ட அலுவலகங்களுடன் 1,500க்கும் மேற்பட்ட ஊழியர்களின் வலுவான குழுவுடன் உலகளாவிய சேவைகளை வழங்கி வருகிறது. Mercado Libre, Sony, Twitter, Snap ஆகிய நிறுவனங்கள் அதன் முக்கிய பங்காளர்களாக முதலீடு செய்துள்ளனமை குறிப்பிடத்தக்கது.