பாராளுமன்ற பெண் உறுப்பினர்களின் ஒன்றியம் அதன் தலைவர் அமைச்சர் சரோஜா சாவித்ரி போல்ராஜ் தலைமையில் நேற்று செவ்வாய்க்கிழமை (21) பாராளுமன்றத்தில் கூடியது.
இக்கூட்டத்தில் ஒன்றியத்தின் பிரதி இணைத் தலைவர்களான பாராளுமன்ற உறுப்பினர்களான சமிந்திரானி கிரிஎல்லே மற்றும் சமன்மலி குணசிங்க ஆகியோரும் கலந்துகொண்டனர்.
பத்தாவது பாராளுமன்றத்திற்கான பெண் உறுப்பினர்களின் ஒன்றியத்தின் செயற்திட்டத்தை தயாரிப்பது குறித்து ஒன்றியத்தின் உறுப்பினர்களுடன் கலந்துரையாடுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்ட இந்தக் கூட்டத்தில், இலங்கையில் திருமண வயது எல்லையை திருத்துவது தொடர்பாக ஒன்றியத்தின் தலைவர் அமைச்சர் சரோஜா சாவித்ரி போல்ராஜ் ஒன்றியத்தின் கவனத்திற்குக் கொண்டுவந்தார்.
இலங்கையில் தற்பொழுது காணப்படும் பல்வேறு திருமண சட்டங்களுக்கு அமைய காணப்படும் திருமண வயது எல்லையை பொது எல்லையாகக் கொண்டுவருவதற்குத் தேவையான திருத்தத்தை மேற்கொள்ள சிவில் சமூகம் மற்றும் சம்பந்தப்பட்ட தரப்பினரின் முன்மொழிவுகளைப் பெற்றுக்கொள்வதற்கும், அதன் ஊடாக ஒன்றியத்தின் மூலம் இறுதிப் பரிந்துரையை வழங்குவதற்கும் இதன்போது முன்மொழியப்பட்டது.
அத்துடன், “பிள்ளை” என்பதை சரியான முறையில் வரைவிலக்கணம் செய்வதற்குத் தேவையான திருத்தங்களை மேற்கொள்வதற்கும் பெண் உறுப்பினர்களின் ஒன்றியத்தின் கவனம் செலுத்தப்பட்டது.
பெண்களை வலுப்படுத்தும் நோக்கில் பாராளுமன்ற பெண் உறுப்பினர்களின் ஒன்றியத்தினால் மேற்கொள்ளக்கூடிய அனைத்து செயற்பாடுகளையும் மேற்கொள்ள பத்தாவது பாராளுமன்றத்தில் நடவடிக்கை எடுப்பதாக ஒன்றியத்தின் தலைவர் இதன்போது தெரிவித்தார்.
இந்தக் கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களான தீப்தி வாசலகே, (சட்டத்தரணி) துஷாரி ஜயசிங்ஹ, ஒஷானி உமங்கா, (கலாநிதி) கெளஷல்யா ஆரியரத்ன, கிருஷ்ணன் கலைச்செல்வி, (சட்டத்தரணி) கீதா ஹேரத், (சட்டத்தரணி) ஹிருனி விஜேசிங்ஹ, (சட்டத்தரணி) அனுஸ்கா திலகரத்ன, (சட்டத்தரணி) சாகரிகா அதாவுத, எம்.ஏ.சீ.எஸ். சத்துரி கங்கானி, நிலூஷா லக்மாலி கமகே, ஏ.எம்.எம்.எம். ரத்வத்தே, (சட்டத்தரணி) நிலந்தி கொட்டஹச்சி, (சட்டத்தரணி) ஹசாரா லியனகே, அம்பிகா சாமிவெல், (சட்டத்தரணி) லக்மாலி ஹேமசந்திர ஆகியோர் கலந்துகொண்டனர்.