புத்தளம் காசிமிய்யா அரபுக்கல்லூரியின் முன்னாள் அதிபரும் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா நிறைவேற்றுக்குழுவின் உறுப்பினருமான அஷ்ஷெய்க் அப்துல்லாஹ் மஹ்மூத் ஆலிம் அவர்களின் மறைவு குறித்து கலாநிதி. எம்.எஸ்.எம். அனஸ் அவர்கள் பேஸ்புக்கல் பதிவிட்டுள்ள ஆக்கம்..
பெரியவர் அப்துல்லா ஹஸரத் அப்துல்லா ஹஸரத் மறைந்துவிட்டார் . கண்களுக்குள் அவர் உருவம்.
பேச்சு, செயல் எல்லாவற்றிலும் நிதானம், பொறுமை. பொது சேவையில் ஏதாவது
சாதிக்க வேண்டும் என்ற நெஞ்சுரம். தொடர்ச்சியான மக்கள் சேவை. குடும்ப அல்லது முரண்பட்ட பிரிவுகளுக்கிடையிலான சமரச முயற்சிகள், மத்ரஸா தலைமைத்துவம் ,
கல்விப் பணிகள்.
அரசியல் பிரச்சினைகளுக்குத் தீர்வுகள் , ஆலோசனைகள் . இன ஒருமைப்பாட்டு முன்னெடுப்புக்கள் , சர்வமத சமாதான பேச்சு வார்த்தைகள், வாரந்தவறாத
பயான்கள், கொத்துபா பிரசங்கங்கள். மத்ரஸா மார்க்க கல்விப் போதனைகள் .
இவற்றிற்கும் இன்னும் பல வற்றிற்கும் முழு நாளும் வருடம் பூராவும் தன்னை
அர்ப்பணித்து சேவையாற்றி வந்த மக்கள் சேவகர் அப்துல்லா ஹஸரத்.
அவர் ஒரு ஆலிம் , மார்க்க அறிஞர். அதே நேரம் அவர் வெளிப்படையான சமூக –
அரசியல் செயற்பாட்டாளர். புத்தளம் மக்களின் நல்லது கெட்டது புத்தளத்தின்
கல்வி எதிர்காலம், அரசியல் எதிர் காலம் பொருளாதார மீட்சி எல்லாவற்றிலும்
அப்துல்லா ஹஸரத்தின் தலையீடும் ஆலோசனைகளும் செயல் திட்டங்களும்
இருந்தன. அவரது பிரசன்னம் இன்றி இத்தகைய காரியங்கள் எதுவும் நடந்ததாக எனக்கு நினைவில்லை.
புத்தளத்தின் தற்கால வரலாறு ஒளிவு மறைவின்றி எழுதப்படுமானால் அதன்
தவிர்க்க முடியாத தலைவர்களில் ஒருவராக அவர் இனங்காணப்படுவார்.
அதுவும் கடந்த மூன்று பத்தாண்டுக்கால அரசியல், சமுக , சமய செயற்பாடுகளின்
சுழற்சியில் ஒரு அச்சாணியாக அவர் செயற்பட்டார். என்ன சாதித்தார் எப்படிக் களங்களை உருவாக்கினார். நடந்த பேச்சு வார்த்தைகள் என்ன என்பதைப்
பேசாமல் புத்தள வரலாற்றை நாம் எவ்விதத்திலும் பூர்த்தி செய்ய முடியாது.
தற்காலப் புத்தளம் சமூக – அரசியல் வரலாற்றில் அவரது தலைமைத்துவம்
தனித்துவம் வாய்ந்தது. அதை வடிவமைப்பதில், குறைபாடுகளைத்
தீர்ப்பதில், மக்களுக்கும் இளைஞர்களுக்கும் நம்பிக்கை அளிப்பதில்
அவர் இடையறாது பணியாற்றியுள்ளார்.
நான் ஒரு ஆலிம், காசிமியா அதிபர் என்ற பந்தாக்கள் எதுவுமின்றி ஒரு சாமானியனாக , நண்பனாக , சகோதரனாகப் பழகத் தெரிந்திருந்தார் . மக்களோடு மக்களாக மக்கள் பிரச்சினைகளில் ஒரு தொண்டனைப் போல் நின்ற சம்பவங்கள்
ஒன்றல்ல இரண்டல்ல.
பாராளுமன்ற உறுப்பினர்கள் இன்றி புத்தளம் தடம் புரண்டு கிடந்த காலத்தில் மாற்றுத் திட்டங்களையும் நம்பிக்கைகளையும் உருவாக்கி மக்களின்
ஏமாற்றத்தை தணித்த கதைகள் , மீண்டும் புத்தளம் ஒரு முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினரை உருவாக்க மக்களை ஒரணியில் திரட்ட முன்வைத்த
திட்டங்களின் கதைகள் , புத்தளம் ஒரு தொழில் நுட்பக் கல்லூரியைப் பெறுவதில் இருந்த தடைகளை உடைப்பதற்கு எடுத்த தொடர் முயற்சிகளின் கதைகள் ,
வடபுல இடப்பெயர்வு புத்தளத்தில் ஏற்படுத்திய பிரச்சினைகளுக்குத்தீர்வு
காண்பது ,மக்களிடையே ஒற்றுமையை ஏற்படுத்தும் திட்டங்களை அறிமுகப்படுத்த எடுத்த முயற்சிகளின் கதைகள் எல்லாவற்றிலும் இன்னும் பல கதைகளிலும் கதாநாயகனாக வீற்றிருந்தவர் அப்துல்லா ஹஸரத்தான்.
காசிமியா மத்ரஸா மத்ரஸா மட்டுமல்ல, அது புத்தளம் ஐ. நா . சபை என்று
கூறுமளவு நல்லிணக்க, சமாதான மற்றும் சமூக அரசியல் பிரச்சினைகளைக்
கலந்துரையாடித் தீர்வு தேடும் இடமாகவும் விளங்கியது.
அவர் ஆலிம், மார்க்க அறிஞர் ஆனால் செக்கியூலர் மனோபாவம் கொண்டவர். நவீன யுகத்தையும் நவீன கல்வியையும் நன்கறிந்தவர். 1979 அளவில் நான் அவரைச் சந்தித்தேன். புத்தளம் மீலாது விழா போட்டிகளை ஒரு இளம் ஆலிமாக அவர் வழி நடத்திக் கொண்டிருந்தார் .
மீலாது விழாக் கட்டுரைப் போட்டியில் கரைத்தீவு அந்தகப் புலவர் செய்கலாவுதீனை
உட்படுத்திப் போட்டியை அமைப்பது எப்படி என்பதை என்னிடம் கேட்டுத்
தெரிந்து கொள்வதாக அந்த சந்திப்பு அமைந்தது.
அன்று தொடங்கிய அறிமுகம் பெரிய நட்பாகவே மாறியது. புத்தளம் முஸ்லிம்களின் வரலாறு எழுதப்பட வேண்டும் என்று வலியுறுத்தி வந்ததோடு அது ஒரு நூலாக வெளியிடப்படும் வரை எனக்கும் எனது குழுவினருக்கும் தடை யற்ற ஒத்துழைப்பை வழங்கி இறுதி வரை எங்களோடிருந்ததை எப்படி மறக்க முடியும்.
புத்தளத்தில் ஒரு காலத்தில் நானும் எனது நண்பர் குழாமும் எடுத்து வந்த
எல்லாப் புரட்சிகர முயற்சிகளுக்கும் கல்விப் பணிகளுக்கும் பச்சைக் கொடி
காட்டி அதன் ஆதரவாளராக இருந்ததை எப்படி மறக்க முடியும்.
எல்லா வளங்களையும் பெற்ற ஒரு நவீன புத்தளத்தை அவர்
கனவு கண்டார். எதிர்காலத்தைப் புத்தளம் இளைஞர்களின் கைகளில் கொடுத்து விட்டு ஒய்வெடுக்கச் சென்று விட்டார் எங்கள் நேசத்துக்குரிய அப்துல்லா ஹஸரத்.