பெருந்திரளானோரின் முன்னிலையில் அப்துல்லாஹ் ஹஸ்ரத்தின் ஜனாஸா நல்லடக்கம்..!

Date:

நேற்று கொழும்பில் காலமான புத்தளம் காசிமிய்யா அரபுக்கல்லூரியின் முன்னாள் அதிபரும் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா நிறைவேற்றுக்குழுவின் உறுப்பினரும் புத்தளம் மாவட்ட முன்னாள் ஜம்இய்யதுல் உலமா தலைவரும் புத்தளம் சர்வ மத அமைப்பின் இணைத் தலைவருமான அஷ்ஷெய்க் அப்துல்லாஹ் மஹ்மூத் ஆலிம் அவர்களுடைய ஜனாஸா (14) புத்தளம் நகரிலுள்ள  பகா மஸ்ஜித்  ஜும் ஆ பள்ளி மையவாடியில் பெருந்திரளான மக்கள் மத்தியில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

இதில் கலந்துகொள்வதற்காக நாட்டில் பல பாகங்களையும் சேர்ந்த உலமாக்கள் புத்திஜீவிகள், அன்னாரிடம் கல்வி கற்ற மாணவர்கள் என பலர் மழையையும் பொருட்படுத்தாது பங்கேற்றனர்.

இந்த ஜனாஸா நிகழ்வில் முக்கிய அம்சம் யாதெனில் அஷ்ஷெய்க் அப்துல்லாஹ் மஹ்மூத் ஆலிம் அவர்கள் இந்தநாட்டில் முஸ்லிம்கள் முன்னெடுக்க வேண்டிய பாரிய பணிகளில் ஒன்றான சகவாழ்வு என்ற பணியை கடந்த 30 ஆண்டுகாலமாக அமைதியாகவும் வெற்றிகரமாகவும் செய்திருக்கின்றார்கள் என்ற நிதர்சனமான உண்மை ஜனாஸா நிகழ்வுக்கு வந்திருந்தோருக்கு வெளிப்படையாக தென்படக்கூடியதாக இருந்தது.

அன்னாருடன் கடநத 30 வருடங்களாக சகவாழ்வு பணிகளில் கைகோர்த்து இயங்கிய பல்வேறு முஸ்லிமல்லாத சமூகத்தவர்கள் வருகைத்தந்திருந்தது மாத்திரமல்ல அன்னாருடைய சகவாழ்வு தொடர்பான பணிகளில் அவர் எவ்வளவு தூரம் ஈடுபட்டார் என்பதற்கான பல்வேறு உதாரணங்களோடு நேற்று நடைபெற்ற இரங்கல் நிகழ்வில் தெரிவித்தனர்.

புத்தளம் மாவட்ட சர்வமத அமைப்பின் இணைத்தலைவர் புத்தியாகம ரத்ன தேரரும் தேசிய சமாதான பேரவையின் இயக்குநர் கலாநிதி ஜெஹான் பெரேரா அருட்தந்தை மேர்வின்,  புத்தளம் நகரக் கிளை ஜம்மிய்யதுல் உலமா சபைத் தலைவர், மெளலவி ஜிப்னாஸ், காஸிமிய்யா பழைய மாணவர் அமைப்பின் தலைவர், மெளலவி ரூமி (காசிமி) ஆகியோரின் உரையிலிருந்து அஷ்ஷெய்க் அப்துல்லாஹ் மஹ்மூத் ஆலிம் அவர்களுடைய சகவாழ்வு தொடர்பான  விடயங்கள் மிகத்தெளிவாக விளங்கக்கூடியதாக இருந்தது.

இந்நாட்டில் சிறுபான்மை இனங்கள் தங்களுடைய இருப்பை பலப்படுத்துவதை காட்ட வேண்டிய மிகமுக்கியமான பகுதியாக சகவாழ்வு காணப்படுகிறது.

ஆனால் இந்த பகுதி அவ்வவ்போது செய்யப்பட்டாலும் கூட தூர நோக்கோடு செய்யப்படுகின்ற சூழ்நிலை போதியளவு இன்னும் இல்லாத நிலையில் கடந்த 30 ஆண்டு காலமாக புத்தளம் மாவட்டத்தில் குறிப்பாக அஷ்ஷெய்க் மஹ்மூத் அப்துல்லாஹ் ஆலிம் அவர்கள் சர்வமத பிரமுகர்களோடு இணைந்து இத்தகைய நீண்டதொரு பயணத்தை மேற்கொண்டிருந்தார் என்பதற்கு நேற்றைய ஜனாஸா நிகழ்வு சான்றாக அமைந்தது.

அதேவேளையில் அஷ்ஷெய்க் மஹ்மூத் அப்துல்லாஹ் ஆலிம் அவர்கள் முஸ்லிம் சமூகத்துக்குள்ளேயும் எல்லோருடைய மனதையும் வென்ற ஒரு அறிஞராக இருந்திருக்கின்றார்கள் என்பதற்கு அந்த ஜனாசாவில் கலந்துகொண்ட அனைத்து அமைப்பையும் சார்ந்த பிரமுகர்களுடைய பிரசன்னத்தை சுட்டிக்காட்ட முடியும்.

உலமா சபை பிரமுகர்கள், இஸ்லாமிய இயக்கங்களுடைய தலைவர்கள், நாடளாவிய ரீதியில் உள்ள பல பிரமுகர்கள் எனப் பலர் கலந்துகொண்டனர்.

பெரும்பான்மை சமூகத்தில் சகவாழ்வை கட்டியெழுப்புகின்ற பணியை அவர்கள் எவ்வாறு செய்தார்களோ அதேபோல முஸ்லிம் சமூகத்திலும் கருத்து முரண்பாடுகளுக்கு மத்தியில் எல்லோருடனும் இணைந்து வேலைசெய்திருக்கின்றார் என்பதற்கான ஒரு சான்றாக குறித்த ஜனாசா நிகழ்வு அமைந்திருந்தது.

இந்த ஜனாஸா நிகழ்விலே அகில இலங்கை ஜம்மிய்யதுல் உலமாவின் உப தலைவர்களுள் ஒருவரான அஷ் ஷேய்க் புர்ஹான் (பஹ்ஜி)  இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் முன்னாள் தலைவர் அஷ்ஷேய்க் ஹஜ்ஜுல் அக்பர், ஜமாஅதுஸ் ஸலாமா தலைவர் ஆஸாத் முஈஸ்,  பறகஹதெனிய அன்சார் சுன்னத்துல் முகம்மதிய்யா தலைவர் அஷ் ஷேய்க் அபூபக்கர் சித்தீக் (மதனி) உட்பட பலர் கலந்துகொண்டனர்.

ஜனாஸா நல்லடக்கத்தின் பின்னர் இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் முன்னாள் தலைவர் அஷ்ஷெய்க் ஹஜ்ஜுல் அக்பர் உரையாற்றும் போது, அஷ்ஷெய்க் அப்துல்லாஹ் மஹ்மூத் ஆலிம் அவர்கள் ஒரு மாமனிதராக வாழ்ந்து காட்டியிருக்கிறார்கள். அவருடைய வாழ்வுமிகப்பெரிய முன்மாதிரியாகும். அவர் செய்துகாட்டிய சகவாழ்வு பணி அனைவருக்கும் முன்மாதிரியாகும் எனவும் தெரிவித்தார்.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Popular

More like this
Related

தொடர்ந்தும் தலைமறைவானால் ராஜிதவின் சொத்துக்கள் பறிமுதலாகும்: இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுஆணைக்குழு

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன தொடர்ந்தும் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவானால் அவரது...

முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த காலமானார்!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான...

யானைகள் இறப்பு விகிதத்தில் உலகளவில் இலங்கை முதலிடம்!

யானைகள் இறப்பு விகிதத்தில் இலங்கை தற்போது உலகிலேயே முதலிடத்தில் உள்ளதாக வனவிலங்கு...

நாட்டின் சில இடங்களில் அவ்வப்போது மழை

இன்றையதினம் (15) நாட்டின் மேல், சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி,...