எலான் மஸ்க்கின் கனடா குடியுரிமையை ரத்து செய்ய வேண்டும் என கனடா மக்கள் ஒன்று திரண்டுள்ளனர்.
அமெரிக்காவின் புதிய ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் பதவியேற்றது முதல் அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறார்.
நட்பு நாடுகள், பகை நாடுகள் என பாரபட்சமின்றி அமெரிக்கா மீது அதிக வரி விதிக்கும் நாடுகள் மீது வரிவிதிக்கப் போவதாக ட்ரம்ப் அறிவித்துள்ளார். மிக முக்கியமாக அமெரிக்காவின் அண்டை நாடான கனடா மீது 25% வரியை டொனால்ட் ட்ரம்ப் அதிரடியாக அறிவித்தார்.
இனிமேல் அமெரிக்காவிற்கு கனடா தேவையில்லை என்று ஆவேசமாக பேசிய டொனால்ட் ட்ரம்ப் , கனடாவை அமெரிக்காவின் இன்னொரு மாகாணமாக மாற்றுவேன் என்று தெரிவித்தார்.
அமெரிக்காவுக்கு பதிலடியாக கனடாவும் அமெரிக்கா பொருட்கள் மீது வரி விதித்ததால் இரு நாடுகளுக்கும் இடையே வர்த்தகப் போர் மூண்டுள்ளது.
டொனால்ட் ட்ரம்பின் அதிரடி நடவடிக்கையால் அமெரிக்காவுக்கும், கனடாவுக்கும் இடையே பகை பற்றி எரிந்து வரும் நிலையில், எலான் மஸ்க்குக்கு எதிராக கனேடியர்கள் ஒன்று திரண்டுள்ளனர்.
அதாவது கனடாவைச் சேர்ந்த 2,00,000க்கும் மேற்பட்ட மக்கள் எலான் மஸ்க்கின் கனேடிய குடியுரிமையை ரத்து செய்யக் கோரும் நாடாளுமன்ற மனுவில் கையெழுத்திட்டுள்ளனர்.
பிரிட்டிஷ் கொலம்பியா எழுத்தாளர் குவாலியா ரீட் கனடாவின் ஹவுஸ் ஆஃப் காமன்ஸில் எலான் மஸ்க்குக்கு எதிரான மனுவைத் தொடங்கினார். எலான் மஸ்குக்கு எதிரான இந்த மனுவை கனடாவின் ஹவுஸ் ஆஃப் காமன்ஸில் ஒப்படைப்பார்கள்.
இதனைத் தொடர்ந்து எலான் மஸ்கின் கனடா குடியுரிமையை ரத்து செய்வது குறித்து கனடா அரசாங்கம் முடிவெடுக்கும்.
கனேடிய சட்டத்தின்படி, பல்வேறு காரணங்களுக்காக ஒருவர் தனது குடியுரிமையையும் கைவிடலாம். மோசடி, தங்கள் மக்களை தவறாக சித்தரித்தல் அல்லது குடியேற்றம் அல்லது குடியுரிமை விண்ணப்பத்தில் வேண்டுமென்றே தகவல்களை மறைத்தல் உள்ளிட்ட சில சந்தர்ப்பங்களில் கன்டா ஒருவரின் குடியுரிமையை ரத்து செய்யலாம்.