நாட்டில் கொழும்பு உள்ளிட்ட 16 மாவட்டங்களில் மனித உடலில் உணரப்படும் வெப்பநிலை அவதானத்துக்குரிய மட்டத்தில் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
எனவே குழந்தைகள் மற்றும் சிறுவர்களை வாகனங்களில் தனித்து விட வேண்டாம் என்றும், வெளியிடங்களில் மேற்கொள்ளக் கூடிய செயற்பாடுகளை இயன்றளவுக்கு மட்டுப்படுத்திக் கொள்ளுமாறும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
இந்த வெப்பநிலை எதிர்வரும் மே மாதம் வரை நிலவக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
மேல் மாகாணத்தில் கொழும்பு, கம்பஹா, களுத்துறை மாவட்டங்களிலும், வடமத்திய மாகாணத்தில் அநுராதபுரம், பொலன்னறுவை மாவட்டங்களிலும், வடமேல் மாகாணத்தில் குருணாகல், புத்தளம் மாவட்டங்களிலும், வடக்கில் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, வவுனியா, முல்லைத்தீவு, மன்னார் மாவட்டங்களிலும், தெற்கில் காலி, மாத்தறை, அம்பாந்தோட்டை மாவட்டங்களிலும், சப்ரகமுவ மாகாணத்தில் இரத்தினபுரி மாவட்டத்திலும் இவ்வாறு அதிகூடிய வெப்பநிலை நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
பெரியோர் நாளொன்றுக்கு குறைந்தபட்சம் 2 லீற்றர் நீரை அருந்த வேண்டும் என்றும், அதிக உடல் பருமனுடையவர்கள் 3 லீற்றர் நீரையும், 5 வயதுக்கு மேற்பட்ட சிறுவர்கள் ஒன்றரை லீற்றர் நீரையும், 5 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் ஒரு லீற்றர் நீரையும் பருக வேண்டும் என்றும் வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.