ஈதுல் பித்ர் என்னும் நோன்பு பெருநாளை கொண்டாடும் இலங்கை வாழ் முஸ்லிம்கள் அனைவருக்கும் ஈத் தின நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வதில் இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமி பெருமகிழ்ச்சி அடைகிறது.
மனித சமூகத்துக்கு வழிகாட்டும் அல்குர்ஆன் அருளப்பட்ட ரமழான் மாதத்தை கௌரவிக்கும் வகையில் அல்லாஹ்வினால் விதிக்கப்பட்ட நோன்பின் பிரதான இலக்கு இறை அச்சத்தை வளர்த்துக்கொள்வது என்பதை நாம் அறிவோம்.
நோன்பு நோற்று இரவு வணக்கங்களில் ஈடுபட்டு தக்பீர் சொல்லி இறைவனுடைய நெருக்கத்தை வலுப்படுத்திக் கொள்ளும் நாம் சகாத்துல் ஃபித்ராவை முறையாக வழங்கி பரஸ்பரம் ஒருவருக்கொருவர் சலாம் கூறி வாழ்த்துத் தெரிவித்து மனிதர்களுக்கிடையிலான உறவை மேம்படுத்திக் கொள்கின்றோம்.
நாம் ரமழானில் பெற்ற தொடரான பயிற்சியை வாழ்வில் எந்த அளவுக்கு நிலைநாட்டுகிறோம் என்பதிலேயே வாழ்க்கையின் வெற்றி தங்கியுள்ளது.