துருக்கியுடன் நாற்பது வருடகாலமாக போரிட்ட குர்திஷ் அமைப்பான பி.கே.கே (PKK) யுத்த நிறுத்தத்தை அறிவித்துள்ளது.
சிறையில் உள்ள அதன் தலைவர் அப்துல்லா ஒகலான் ஆயுதங்களை கைவிடுமாறு வேண்டுகோள் விடுத்து இரண்டு நாட்களின் பின்னர் அந்த அமைப்பு யுத்த நிறுத்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
தங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டாத வரை, இனி ஆயுதம் ஏந்தி போராட மாட்டோம் என்று குர்திஷ் தொழிலாளர் கட்சி அறிவித்துள்ளது.
குர்திஸ்தான் தொழிலாளர்கள் கட்சி பிகேகே (pkk) நெருக்கமான பிராட் செய்தி நிறுவனம் அமைப்பு யுத்த நிறுத்த அறிவிப்பை முதலில் வெளியிட்டுள்ளது.
1999 முதல் துருக்கியின் சிறையில் வாடும் பி.கே.கே அமைப்பின் தலைவரை மேற்கோள்காட்டி பிராட் செய்தி நிறுவனம் இந்த யுத்த நிறுத்த அறிவிப்பு குறித்து செய்தி வெளியிட்டுள்ளது.
சமாதான ஜனநாயக சமூகத்தினை ஏற்படுத்துவதற்காக பி.கே.கே தலைவர் விடுத்த வேண்டுகோளை ஏற்று யுத்த நிறுத்தத்தை அறிவிப்பதாக தெரிவித்துள்ளது.
தாக்குதல் மேற்கொள்ளப்படாத பட்சத்தில் எங்கள் படைப்பிரிவினர் ஆயுதத்தை பயன்படுத்த மாட்டார்கள் என அவ்வமைப்பு அறிவித்துள்ளது.
மத்தியகிழக்கில் அடிப்படை மாற்றங்கள் பல நிகழ்ந்துகொண்டுள்ள சூழ்நிலையிலேயே குர்திஷ் அமைப்பு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
துருக்கியின் அயல்நாடான சிரியாவில் பஷர் அல் ஆஷாத் அரசாங்கம் பதவி கவிழ்க்கப்பட்ட பின்னர் அதிகார மறுசீரமைப்பு இடம்பெறுகின்றது. லெபானில் ஹிஸ்புல்லா அமைப்பு பலவீனமடைந்துள்ளது மேலும் காசாவில் இஸ்ரேலும் ஹமாஸ் அமைப்பும் போரிடுகின்றன.
1984 இல் ஆரம்பித்த துருக்கி அரசாங்கத்திற்கும் பி.கே.கே அமைப்பிற்கும் இடையிலான மோதல்கள் காரணமாக ஆயிரக்கணக்கானவர்கள் உயிரிழந்துள்ளனர்.
2015 இல் இரு தரப்பிற்கும் இடையிலான யுத்த நிறுத்தம் முடிவடைந்ததும் குறிப்பிடத்தக்கது.
முன்னதாக ஒகலானை தனிமைதீவு சிறையில் சந்தித்த பின்னர் அவரது அறிவிப்பை வெளியிட்ட குர்திஷ் அரசியல்வாதிகள், குர்திஷ் போராளிகள் ஆயுதங்களை கைவிடவேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார்.
இதேவேளை தங்கள் தலைவரின் அறிவிப்பு குர்திஷ்தானிலும் மத்திய கிழக்கிலும் புதிய வரலாற்று செயற்பாடுகள் ஆரம்பமாகியுள்ளதை வெளிப்படுத்துவதாக பி.கே.கே அமைப்பின் மத்திய குழு தெரிவித்துள்ளது.
இந்த அறிவிப்பு துருக்கி ஜனாதிபதி தையிப் ரசப் அர்தூகானிற்கு சாதகமாக அமையலாம்.
1978 இல் ஒகலானால் நிறுவப்பட்ட இந்த அமைப்பு துருக்கியின் தென்கிழக்கில் ஒரு சுதந்திர குர்திஷ் மாநிலத்தை நிறுவுவதற்காக பல தசாப்தங்களாக போராடி வருகிறது.
ஆனால் சமீபத்தில், அவர்கள் துருக்கிக்குள் அதிக சுயாட்சியை கோரியுள்ளனர். 2013 இல் ஒகலான் இதேபோன்ற அறிக்கையை வெளியிட்டார்.
ஆனால் அமைதி செயல்முறை தோல்வியடைந்தது. இப்போது, துருக்கியின் வலதுசாரி அரசியல்வாதி தெவ்லெட் பஹ்செலியின் அணுகுமுறையால், அமைதி வாய்ப்புகள் மீண்டும் உருவாகியுள்ளன.