ஐம்பது ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்களை ஈவிரக்கமற்ற முறையில் கொன்றொழித்த இஸ்ரேலிய பாசிச அரசு தன் இன ஒழிப்பு தாக்குதல்களை மீண்டும் தொடங்கியுள்ளதை இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமி வன்மையாக கண்டித்துள்ளது.
இது தொடர்பாக ஜமாஅத்தே இஸ்லாமி விசேட அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.
குறிப்பாக கடந்த இரண்டு நாட்களில் குழந்தைகள் உட்பட சுமார் 600 நிரபராதிகளின் உயிர்களை பலியாக்கி அப்பாவிப் பொதுமக்கள் மீது நடத்தப்படும் கடுமையான தாக்குதல்கள், குண்டுவீச்சுக்கள், மருத்துவமனைகள் மற்றும் சிகிச்சை நிலையங்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்கள் என்பவை மனிதாபிமானமற்றதும், இஸ்ரேல் அரசின் வன்முறைக் கொள்கையின் வெளிப்பாடுமாகும்.
இதேவேளை சியோனிச அரசினை ஆதரிக்கும். குறிப்பாக மேற்கத்திய அரசுகள், இஸ்ரேல் நடத்தும் போர் நடவடிக்கைகளை நேரடியாக அல்லது மறைமுகமாக ஆதரிக்கும் வகையில் செயற்படுவதையும் ஜமாஅத் வன்மைமையாக கண்டிக்கிறது.
இலங்கை அரசாங்கம் இஸ்ரேல் மேற்கொள்ளும் கொடூர இனஒழிப்பை கண்டிக்க வேண்டும் என்றும் பலஸ்தீனப் பிரச்சினைக்கு நிரந்தரமானதும் நீதியானதுமான தீர்வை வழங்க சர்வதேச சமூகம் கடமைப்பட்டுள்ளது என்பதையும் ஜமாஅத் அழுத்திக் கூற விரும்புகிறது என குறித்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.