உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுக்கு 6 ஆண்டுகள்: உண்மை வெளிப்படுத்தப்படவுமில்லை, நீதி நிலைநாட்டப்படவுமில்லை!

Date:

-முன்னாள் உளவுத்துறைத் பிரதானி மாஹில் டோல்

ஏப்ரல் 21, 2019 உயிர்த்த ஞாயிறன்று நம் நாட்டில் பல இடங்களில் மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல்களின் ஆறாவது ஆண்டு நிறைவு நெருங்கி விட்டது.

ஆனால் அத்ததாக்குதல் சம்பவம் இன்னும் தீர்க்கப்படாத மர்மமாகவே உள்ளதுடன் அக்கொடூரமான தாக்குதலுக்கு காரணமான குற்றவாளிகள் இன்னும் நீதியின் முன் நிறுத்தப்படவுமில்லை.

மேலும் இந்த நிர்வாக அசமந்தத்தின் பின்னால் அரசியல் செல்வாக்கு இருப்பதாகவும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன. இதன் விளைவாக, சமூகங்கள் இடையே உள்ள மணகச்சப்பும் தொடர்கின்றது.

சரியாக ஆறு ஆண்டுகளுக்கு முன் ஏப்ரல் 21 அன்று, இலங்கையின் பல இடங்களில் தொடர்ச்சியான கொடூரமான தற்கொலைத் தாக்குதல்கள் கட்டவிழ்த்து விடப்பட்டதை நம்மில் யாராலும் மறக்க முடியாது.

கிறிஸ்தவத்தின் ஒரு முக்கிய தினத்தைக் கோயில்களில் அமைதியாக கொண்டாடிக் கொண்டிருந்த கத்தோலிக்க பக்தர்கள் பலரும், கொழும்பில் உள்ள சில ஐந்து நட்சத்திர ஹோட்டல்களில் காலை உணவு அருந்திக் கொண்டிருந்த வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் சிலரும் இத்தாக்குதல்கள் காரணமாக பரிதாபமாக உயிர் இழந்தனர்.

பாதிக்கப்பட்டவர்கள் உட்பட நம் நாடடினரிடையே அது ஏற்படுத்திய உளவியல், அரசியல் மற்றும் இன ரீதியான தாக்கம் இன்றுவரையும் நம் இதயங்களில் எதிரொலித்துக்கொண்டே இருக்கின்றது.

ஜனாதிபதி ஆணைக்குழுக்கள் உட்பட பல உள்நாட்டு வெளிநாட்டு விசாரணைகள் மேற்கொளள்ளப்பட்ட போதிலும், சம்பவத்தின் சில பகுதிகளைத் தவிர, சம்பவம் குறித்த முழு உண்மையை அரசாங்கத்தால் இன்னும் வெளிக்கொண்டு வர முடியவில்லை. அதில் சில உண்மைகள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன.

மேலும் சில முரண்பாடானவையாக உள்ளன. இந்நிலைமை, இந்தப் பாரிய தாக்குதல் பற்றி விசாரனை செய்யும் பணியில் ஈடுபட்டவர்களின் நேர்மை மற்றும் நம்பகத்தன்மை குறித்து கடுமையான சந்தேகங்களை எழுப்பியுள்ளன.

காலம் கடந்த நிலையில் ஒரு விடயம் தெளிவாகியுள்ளது. அதாவது மேற்படி தாக்குதலானது யாராலும் கற்பனை செய்து பார்க்க முடியாததொரு மிக சூட்சுமமான மற்றும் செல்வாக்கு மிக்க பலருடைய அனுசரனை பெற்ற ஒரு கொடூரமான சதி என்பதாகும். மேற்படி தொடர் தாக்குதல்களால் பயன் அடைந்த பலர் பின்னர் வெளிப்பட்டனர்.

அத்துடன் அரசின் உயர் பதவிகளில் இருந்த பலர் இச்சம்பவத்தை கண்டும் காணாதது பொலிருந்தமை, அவர்களுக்கும் இதில் தொடர்பிருக்குமோ என்ற சந்தேத்தை எழுப்பியுள்ளது.

ஒரு முன்னாள் உளவுத்துறை அதிகாரி என்ற வகையில் என்னைப் பொறுத்தமட்டில் இந்தத் தாக்குதலை; தொடர்பான மிகவும் வியக்கத்தக்க சில விடயங்கள் உள்ளன. அதில் ஒன்று, அத்தாக்குதல்களை தடுத்திருக்கக்கூடிய ஏராளமான தகவல்களும் தடயங்களும் தாக்குதலுக்கு முன்பே கிடைக்கப் பெற்றமையாகும்.

மேற்படி தாக்குதல் நடப்பதற்கு முன்பே, உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு உளவுத்துறை சேவைகள் மறறும் சில அமைப்புக்கள் இது குறித்து நமது அரசாங்கத்தை எச்சரித்தன. ஆனால் பொறுப்புமிக்க பதவிகளில் இருந்த எவரும் அதை பொருட்படுத்தவுமில்லை அவற்றைத் தடுக்க நடவடிக்கை எடுக்கவுமில்லை.

இது ஒரு அதிகார மட்ட திறமையின்மையா, அல்லது அவர்களுடைய கரங்கள் கட்டப்பட்டிருந்தனவா, அல்லது இதற்குக் காரணம் அரச பாதுகாப்பு மற்றும் உளவு நிறுவனங்களுக்கு இடையேயான போட்டியும் இழுபறியுமா அல்லது இது வேண்டுமென்றே புறக்கணிக்கப்பட்டதா? என்ற பல கேள்விகள் எழுகின்றன.
தாக்குதல்களைத் திட்டமிட்டு நடத்தியதில் வெளிநாட்டு சக்திகளின் தொடர்பு இருந்தமைக்கான பல வலுவான சமிக்ஞைகள் உள்ளன.

இவை, சூத்திரதாரிகள் நமது உள்ளக பலவீனங்களை பயன்படுத்திக் கொள்ளும் திறனை கொண்டிருந்தார்கள் என்பதை மட்டுமன்றி அத்தகையதொரு தாக்குதலை செயற்படுத்தும் ஆற்றலையும் கொண்டிருந்தனர் என்பதைக் காட்டுகின்றது.

எந்த வித தடுப்பு நடவடிக்கை கூட எடுக்கப்படாமல் இவ்வளவு மோசமான மற்றும் நாடளாவிய விதத்திலான மற்றும் பல சாரார் சேரந்து நடத்திய ஒரு சதித்திட்டம் எவ்வாறு சாத்தியமாகியது என்பது பெரும் விந்தையே.

முன்னர் ஓரளவு மதிக்கப்பட்டு வந்த சட்ட அமலாக்க, உளவு மற்றும் தேசிய பாதுகாப்பு நிறுவனங்கள் பின்னர் பொதுமக்களால் எவ்வாறு கடுமையாக விமர்சிக்கப்பட்டன என்பதை நாம் கண்டோம். இந்த நிறுவனங்கள் மீது கூறப்படும் சில குற்றச்சாட்டுகள் நியாயமானவை என்ற போதிலும் ஏனைய சில தவறானவையாகும்.

இருப்பினும் ஒட்டுமொத்தமாக, இக்குற்றச்சாட்டுகள் நமது பாதுகாப்பு நிறுவனங்களுக்குள்ளும் அவற்றுக்கிடையேயும் உள்ள நம்பிக்கை மற்றும் ஒத்துழைப்பைக் கேள்விக்குள்ளாக்கியுள்ளன.

இவற்றில் மிக மோசமானதாக புலனாய்வு அமைப்புகளை அரசியல் மயமாக்குதலை குறிப்பிடலாம். மேலும் தீய ஆனால் செல்வாக்கு மிக்கவர்களினால் இயற்றப்படும் முடிவுகளை நியாயப்படுத்த வேண்டிய சங்கடமான நிலைக்கு சில வேளை நேர்மையான அதிகாரிகளும் தள்ளப்படுகின்றனர்.

இந்த நிறுவனங்கள் எவ்வாறு, ஏன் தமக்கிடையே ஒத்துழைத்துககொள்ளத் தவறின என்பது குறித்து பாரபட்சமற்ற, அரசியல் சார்பற்ற விசாரனை ஒன்றை நடாத்த வேண்டிய அவசரத் தேவை தற்போது எழுந்துள்ளது.

இதற்குக் காரணம் அந்நிறுவனங்கள் இடையே இருந்த அதிகார போட்டியா, அளவு கடந்த ஆர்வக் கோளாறா, முயற்சியின்மையா? அல்லது சலுகைகளைப் பெற அரசாங்கத்திலட் உள்ள செல்வாக்கு மிக்கவர்களுக்கு ஜால்ரா போடுதலா? எது எவ்வாறிருந்த போதிலும், உண்மையை அறிய வேண்டுமாயின் நாம் ஒருவரையொருவர் குற்றம் சாட்டுவதை நிறுத்திவிட்டு, இனியேனும் சரியான கேள்விகளை முறையாகக் கேட்க ஆரம்பிக்க வேண்டும்.

2023 ஆம் ஆண்டில், இலங்கை உச்ச நீதிமன்றம், தாக்குதல்களைத் தடுக்கத் தவறியதற்கு அப்போதைய ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவும் பல உயர் மட்ட அதிகாரிகளும் பொறுப்பு என்று தீர்ப்பளித்ததுடன், பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்கவும் உத்தரவிட்டது.

ஆனால் அசல் குற்றவாளிகளை கண்டுபிடிக்கும் ஏனைய முக்கியமான சட்ட செயல்முறைகள் தொடர்ந்து செயலற்றே இருக்கின்றன.

சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட பலர் இன்னும் வழக்கு தொடுக்கப்படாது தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளனர். ஆனால் பிரதான வழக்கின் விசாரணை தொடர்ந்தும் தாமதமாகி வருகின்றது. புதிய அரசாங்க மாற்றத்திட்குப் பிறகு, இதற்கான அரசியல் விருப்பம் பெருமளவில் குறைந்துள்ளது போலவே தென்படுகின்றது.

மேலும் விசாரணைகளும் சரியான பாதையில் செல்லாமல் புதிய திசைகளை நோக்கிச் செல்கின்றன. அதிகாரத்தில் இருப்பவர்கள் சில முக்கிய சந்தேக நபர்களை விட்டு வைத்திருப்பதுடன் அவர்களை பாதுகாக்கவும் நடவடிக்கை எடுப்பது போலத் தெரிகின்றது.

இதே வேளை, பாதிக்கப்பட்டவர்களும் அவர்களது குடும்பத்தினரும் இழப்பீடு பெறவும், உண்மைகளை அறியவும் காத்திருக்கின்றார்கள். ‘தாமதிக்கப்பட்ட நீதி மறுக்கப்பட்ட நீதி’ என்று கூறப்படுவதுண்டு. இந்த விடயத்தில் நீதி மிக நீண்ட காலமாக தாமதமாகி வருகிறது என்றுதான் கூற வேண்டும்.

இருப்பினும், பேராயர் மால்கம் ரஞ்சித்தோ அல்லது கத்தோலிக்க திருச்சபையோ நீதிக்கான தங்கள் போராட்டத்தில் தளரவில்லை. வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புக்கூறலை அவர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

மேலும் செயலற்றிருந்ததன் மூலம் மேற்படி பயங்கரவாதத் தாக்குதல்கள் நடக்க இடமளித்த நிறுவன திறமையின்மையை அடையாளம் காண உள்நாட்டிலும் சர்வதேச அளவிலும் அழுத்தம் அதிகரித்து வருகிறது.

பாதிக்கப்பட்டவர்களின் சார்பாக மேற்கொள்ளப்படும் முயற்சிகள் மற்றொரு வேதனையான யதார்த்தத்தை எடுத்துக்காட்டுகின்றன. அது, இந்தப் பிரச்சினைக்கு ஒருங்கிணைந்த தேசிய முயற்சி எதுவும் இல்லை என்பதாகும்.

சோகத்தில் பங்கெடுத்தல் மற்றும் நல்லிணக்க முன்னெடுப்புக்கள் இருந்த போதிலும், தாக்குதல்களுக்குப் பல ஆண்டுகளுக்குப் பிறகும், சமூகங்கள் இடையே சந்தேகமும் கசப்பும் தொடர்ந்தும் இருந்து வருவதால் அவர்கள் விலகியே இருக்கின்றனர்.

உயிரத்த ஞாயிறு தாக்குதல்கள் பல அப்பாவி மக்களை கொன்றதை விட, இந்த நாட்டிற்கு அதிக சேதத்தை ஏற்படுத்தியது என்பதை ஒப்புக் கொள்ள வேண்டும். அத்தொடர் தாக்குதல்கள் நமது நாட்டின் சமூகக் கட்டமைப்பையே சிதைத்துள்ளன.

குண்டுவெடிப்பாளர்களின் அடையாளம் காரணமாக சந்தேகத்தின் கீழ் வந்துள்ள இலங்கை முஸ்லிம் சமூகம் -இதற்கு தமது சமூகத்தின் எந்தத் தொடர்பும் இல்லை என அவர்கள் எவ்வளவு எடுத்துக் கூறியும்- பகிரங்கமாகவே ஒதுக்கப்பட்டு வருகின்றனர்.

கோவிட் தொற்றால் இறந்த முஸ்லிம்களை அவர்களின் மத வழக்கப்படி அடக்கம் செய்வதற்குப் இடமளிக்காமல் தகனம் செய்ய வேண்டும் என்று அரசாங்கம் வற்புறுத்தியமை மற்றும் அதற்கு மதகுருக்கள் உட்பட பெருன்பான்மை இனத்தின் பூரண அங்கீகாரம் கிடைத்தமை, தாக்குதலுக்கு இலங்கை முஸ்லிம் சமூகத்தின் முழு ஆதரவு இருந்ததாக எழுந்த சந்தேகத்தின் பேரில் ஏற்பட்ட கோபத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கையாகவே கருதப்பட வேண்டியுள்ளது.

அந்த முடிவு விஞ்ஞான பூர்வமாக தவறானது என்று நிரூபிக்கப்பட்டாலும், உலக அமைப்புக்கள் அதை கண்டித்த போதிலும் ஒரு சமூகம் என்ற வகையில் இலங்கை முஸ்லிம்களின் அனுமதி இத்ததாக்குதளுக்கு இருக்கவில்லை என தெளிவான பிறகும், அரசாங்கம் முறையான மன்னிப்மை முஸ்லிம் சமூகத்திடம் இதுவரை கேட்கவுமில்லை அவர்களை ஆறுதல் படுத்தவேனும் இழப்பீடுகளை வழங்கவுமில்லை.

உணர்வுகளை மதிக்காமல் அரசாங்கம் மேற்கொண்ட அத்தகைய நடவடிக்கைகள் நாட்டில் ஒரு சிறுபான்மை மக்களை தனிமைப்படுத்தியுள்ளது.

மேலும் அரசாங்கத்தின் மனித உரிமைகள் பதிவுக்கும் அது அவப்பெயரை ஏற்படுத்தியுள்ளது. மேலும், பெரும்பான்மையினரை மகிழ்விக்கும் பாரபட்ச நீதி மற்றும் அரசியல் சித்தாந்தம் குறித்த கவலைகளையும் இது ஏற்படுத்தியுள்ளது.

உயிர்த்த ஞாயிறு படுகொலைகளின் ஆறாவது ஆண்டு நிறைவு நெருங்கி வரும் இத்தருணத்தில் தற்போதைய புதிய அரசாங்கம் ஒரு வரலாற்றுப் பொறுப்பை எதிர்கொண்டுள்ளது.

இந்தப் பிரச்சினையை அரசியல் ஆதாயத்திற்காகவோ அல்லது ஏனைய பிரச்சினைகளில் இருந்து மக்களை திசைதிருப்பலுக்காகவோ பயன்படுத்துவதற்கான வேட்கையை அரசு அடக்கிக்கொள்ள வேண்டும்.

அதற்கு பதிலாக, இந்த அரசாங்கம் இது வரை இவ்வியடத்தில் நடந்த தவறுகளை சரி செய்வதற்கும், பொதுமக்களின் நம்பிக்கையை வெல்வதற்கும், இதுபோன்ற அசம்பாவிதங்கள் மீண்டும் ஒருபோதும் ஏற்படாமல் இருப்பதற்குமான வலுவான அரசியல் விருப்பத்தை வெளிப்படுத்த வேண்டும்.

இந்த விருப்பம் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்குவதையும் கமிஷன் அறிக்கைகளை வெளியிடுவதையும் விட அதிகமானவற்றை உள்ளடக்கியதாக இருத்தல் வேண்டும்.

இதன் கருத்து நம்பகமான, பல சாரார் உட்பட்ட உண்மையைக் கண்டறியும் ஒரு பொறிமுறையை நிறுவுதல் மற்றும் உளவுத்துறை மேற்பார்வையை சீர்திருத்துதல், அத்துடன் சந்தேக நபர்களின் செல்வாக்கை பொருட்படுத்தாது அவர்கள் அமீது வழக்குத் தொடர்வதை விரைவுபடுத்துதல் ஆகியவை ஆகும்.

மேலும், நீண்டகாலமாக தடைபட்டு வரும் நல்லிணக்கத் திட்டங்களையும் மீண்டும் தொடங்க வேண்டும். இங்கு மிக முக்கியமான விடயம் என்னவென்றால், அதிகாரத்துவ வாய்வீச்சுகள் அல்லது அரசியல் சாக்குகளுக்குப் பின்னால் ஒளிந்து கொள்ளாமல் கடந்த கால சொதப்பல்களை நேர்மையாக ஒப்புக்கொள்வதாகும்.

அரசியல் நோக்கங்களுக்காக தேசிய பாதுகாப்பை ஒரு ஆயுதமாகப் பயன்படுத்துவதற்கும் நாம் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.

நிச்சயமற்ற தன்மை, போட்டி அல்லது அரசியல் தலையீடுகளால் முடங்கிப் போகாமல், அச்சுறுத்தல்களுக்கு எதிராக அச்சமின்றியும் சுதந்திரமாகவும் செயல்படும் அதிகாரம் புலனாய்வு அமைப்புகளுக்கு இருப்பதை அரசாங்கம் உறுதி செய்ய வேண்டும். இல்லையெனில், தேசிய பாதுகாப்பின் முழு கட்டமைப்பும் அதன் முரண்பாடுகளின் எடையின் காரணமாகவே நொறுங்கி விடுவது நிச்சயம்.

உயிரத்த ஞாயிறு தாக்குதல்கள் ஆழமான சீர்திருத்தம், நல்லிணக்கம் மற்றும் காயங்களை குணப்படுத்துதலில் நமக்கு ஒரு திருப்புமுனையாக இருந்திருக்க வேண்டும்;. ஆனால் அவ்வாறு நடக்கவில்லை. மாறாக அந்தத் தொடர் தாக்குதல்கள் நமது அமைப்புகள், நிறுவனங்கள் மற்றும் சமூகத்தில் அழிவின் நினைவுச் சின்னங்களாகவே மாறின.

கொல்லப்பட்ட கத்தோலிக்கர்கள், சுற்றுலாப் பயணிகள், முஸ்லிம்கள் மற்றும் அத்தகைய அனைத்து இலங்கையர்களுக்கும் நாங்கள் என்றென்றும் கடன்பட்டுள்ளோம். இவர்கள் அனைவரும் பாதிக்கப்பட்டவர்களே.

அவர்களை வெறுமனே சம்பிரதாயமாக நினைவுகூர்வது போதுமானதாகாது. ஈஸ்டர் தாக்குதல் போன்ற ஒரு சம்பவம் மீண்டும் ஒருபோதும் நடக்காமல் இருப்பதை உறுதி செய்வது அவர்களுக்கு அளிக்கக்கூடிய மிகப்பெரிய அஞ்சலியாகும்.

எனவே, ஈஸ்டர் தாக்குதல்களின் ஆறாவது நினைவுகூரல் வெறும் பெயரளவிலான சடங்காக இருக்கக்காமல் உண்மை, நீதி மற்றும் நல்லிணக்கத்திற்கு நாம் உண்மையாகவும் உறுதியாகவும் நம்மை அர்ப்பணித்துக் கொள்ளும் ஒரு முன்னெடுப்பாக அது இருக்க வேண்டும்.

(கட்டுரை ஆசிரியர் இலங்கை போலிஸ் திணைக்கத்தில் 40 ஆண்டுகளுக்கும் மேலாகப் பணியாற்றியுள்ளார். பயங்கரவாத எதிர்ப்பு, மாநில புலனாய்வுப் பிரிவின் முன்னாள் தலைவராகவும் அவர் இருந்துள்ளார்.

தாய்லாந்தில் உள்ள இலங்கைத் தூதரகத்தில் முதல் செயலாளராகவும் (பாதுகாப்பு) பணியாற்றியுள்ள அவர் தற்போது இலங்கை வக்ஃப் சபையின் ஒரு முக்கிய உறுப்பினராக கடமையாற்றி வருகின்றார்).

Popular

More like this
Related

நாட்டில் சில இடங்களில் ஓரளவு பலத்த மழை பெய்யலாம்

வடக்கு, கிழக்கு, வடமத்திய, மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களின் பல...

சுகாதாரத் துறையில் பணிபுரியும் முஸ்லிம் பெண்களின் ஹிஜாப் விவகாரம் தொடர்பில் ரிஷாத் பதியுதீன் அமைச்சருக்கு கடிதம்!

திருகோணமலையில்  சுகாதாரத் துறையில் பணிபுரியும் முஸ்லிம் பெண்களின் அரசியலமைப்பு உரிமைகளைப் பாதுகாக்க...

காலாவதியான பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்த முன்னணி பல்பொருள் அங்காடிக்கு அபராதம்

காலாவதியான உணவுப் பொருட்களை விற்பனை செய்ததாக குற்றத்தை ஒப்புக்கொண்டதால், முன்னணி பல்பொருள்...

உள்ளூராட்சி நிறுவனங்களின் செயற்பாடுகளில் பிரஜைகளின் பங்களிப்பை விரிவுபடுத்துவது தொடர்பில் கவனம் 

உள்ளூராட்சி நிறுவனங்களின் செயற்பாடுகளில் பிரஜைகளின் பங்களிப்பை விரிவுபடுத்துவது தொடர்பில் திறந்த பாராளுமன்ற...