பலஸ்தீன மக்களின் மனிதாபிமான தேவைகளுக்கு ஆதரவளிக்கும் நோக்கில், கண்டி பள்ளிவாசல்கள் சம்மேளனம் சேகரித்த, 2 மில்லியன் ரூபாவை கொழும்பில் உள்ள பலஸ்தீன தூதுவருக்கு நன்கொடையாக வழங்கியுள்ளது.
கண்டி பள்ளிவாசல்கள் சம்மேளனத்தின் தலைவர் கே.ஆர்.ஏ. சித்தீக், செயலாளர் என்.எம்.எம். மன்சூர், துணைத் தலைவர்களான அஷ்ஷேக் ஃபாயிஸ், ரீசா வாஹித், உதவிச் செயலாளர் அஷ்ஷேக் ஸக்கி உள்ளிட்ட சம்மேளனப் பிரதிநிதிகள் குழுவினருடன், இலங்கைக்கான பாகிஸ்தானின் வதிவிடப்பிரதிநிதி அப்சல் மரிக்கார் அவர்களும், கொழும்பில் உள்ள பலஸ்தீன தூதுவர் இஹாப் ஐ.எம். கலீல் அவர்களிடம் இந்த நன்கொடையை வழங்கினர்.
இந்த நன்கொடை கடந்த ஆண்டில் வழங்கப்பட்ட ரூ. 2.5 மில்லியன் நன்கொடையின் தொடர்ச்சியாகும்.
சுதந்திரம், கண்ணியம் மற்றும் நீதிக்கான பலஸ்தீன மக்களின் தொடர்ச்சியான போராட்டங்களுக்கு மத்தியில் அவர்களுக்கு ஆதரவளிக்கும் வெளிப்பாடின் இரண்டாவது கட்டமாக இந்த நன்கொடை வழங்கப்பட்டது.
இந்த நிதி, கண்டி மாவட்டம் முழுவதிலும் உள்ள பள்ளிவாசல்களின் இணைந்த முயற்சியில் திரட்டப்பட்டதாக சம்மேளனம் தெரிவித்துள்ளது.
இது, உலகளாவிய ஒடுக்குமுறை மற்றும் மனிதாபிமான நெருக்கடியை எதிர்கொள்பவர்களுக்கு இலங்கை முஸ்லிம்களின் உறுதியான ஆதரவை எடுத்துக்காட்டுகிறது.