தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்தால் நடத்தப்பட்ட “குடிசன மற்றும் வீட்டு வசதிகள் தொகைமதிப்பு 2024” இன் முதற்கட்ட அறிக்கை நேற்றுமுன்தினம் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவிடம் ஒப்படைக்கப்பட்டது.
2024 ஒக்டோபர் முதல் டிசம்பர் வரை சேகரிக்கப்பட்ட தரவுகளின் அடிப்படையில் இந்த தொகைமதிப்பு முதற்கட்ட அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டது.
அதன்படி, முழுமையான அறிக்கை ஆகஸ்ட் மாதத்தில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளதாகவும், அதற்கான தேவையான ஏற்பாடுகள் தற்போது செய்யப்பட்டு வருவதாகவும் மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்கள பணிப்பாளர் நாயகம் டி.டி.ஜி.ஏ. செனவிரத்ன தெரிவித்தார்.
இந்த ஆரம்ப அறிக்கையில் இலங்கையின் குடிசனம், குடிசன வளர்ச்சி மற்றும் மாவட்ட அடிப்படையிலான சனத்தொகை பரவல் பற்றி அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் விரிவான அறிக்கையில் மக்கள் தொகை கணக்கெடுப்பின் மற்ற அனைத்து பகுப்பாய்வுகளையும் உள்ளடக்கி தயாரிக்கப்பட உள்ளது.
இலங்கையின் அபிவிருத்திச் செயல்முறைக்கான கொள்கைகள் மற்றும் திட்டங்களை வகுக்க அரசாங்கம் அல்லாத ஏனைய நிறுவனங்களுக்கு இந்த குடிசன கணக்கெடுப்பின் மூலம் சேகரிக்கப்படும் தகவல்கள் மிகவும் முக்கியமானவை.
குடிசன தொகைமதிப்பு வரலாற்றில் முதல் முறையாக, டெப்லெட் கணினிகள் மற்றும் கைபேசிகளைப் பயன்படுத்தி தரவு சேகரிப்பு மேற்கொள்ளப்பட்டது விசேட அம்சமாகும்.