இஸ்ரேலின் தாக்குதலுக்கு மத்தியிலும் காசாவில் ‘முழு அளவில் பஞ்ச’ அபாயம்!

Date:

இஸ்ரேல் தொடர்ந்து நடத்தும் தாக்குதல்களில் காசாவில் மேலும் பலர் கொல்லப்பட்டிருக்கும் நிலையில் இஸ்ரேலின் முற்றுகைக்கு மத்தியில் ‘முழு அளவில் பஞ்சம் ஒன்று ஏற்படும்’ சூழல் தொடர்பில் தொண்டு அமைப்புகள் எச்சரித்துள்ளன.

காசாவுக்கான உதவிகள் செல்வதை இஸ்ரேல் கடந்த இரண்டு மாதங்களாக முடக்கி இருக்கும் நிலையில் அங்கு உணவு, மருந்து, எரிபொருள் உட்பட அனைத்து அடிப்படை தேவைகளும் தீர்ந்து வருவதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.

‘காசாவில் எதிர்வரும் நாட்கள் தீர்க்கமானதாக அமையவுள்ளன. குண்டுகள் மற்றும் ரவைகளால் கொல்லப்படாதவர்கள் மெதுவாக உயிரிழந்து வருகின்றனர்’ என்று ஐ.நாவின் மனிதாபிமான நிறுவன தலைவர் ஜொனதன் விட்டோல் எச்சரித்துள்ளார்.

‘மனிதாபிமான உதவியாளர்களாக உதவிகள் மறுக்கப்படுவதை ஓர் ஆயுதமாக பயன்படுத்தப்படுவதை எம்மால் பார்க்க முடிகிறது. மனிதாபிமான உதவிகள் மறுக்கப்படுவதற்கு எந்த நியாயமும் கூற முடியாது’ என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

காசாவில் உலக உணவுத் திட்டத்தின் கையிருப்புகள் தீர்ந்து வருவதை உறுதி செய்த விட்டோல் அர்த்தபூர்வமான உணவு விநியோகங்கள் எதுவும் தற்போது இடம்பெறவில்லை என்றும் தெரிவித்தார்.

உலக உணவுத் திட்டம் வெளியிட்ட அறிவிப்பில், காசா பகுதியில் விநியோகிப்பதற்கு ‘சரிட்டி கிட்சன்’ அமைப்புக்கு கடைசி விநியோகங்களை வழங்கியதாகவும், அந்த உணவுகள் சில நாட்களுக்குள் தீர்ந்துவிடும் என்றும் எச்சரித்தது.

மா  மற்றும் சமையல் எரிவாயு தீர்ந்த நிலையில் கடந்த மார்ச் 31 ஆம் திகதி உலக உணவுத் திட்டத்தின் ஆதரவுடனான காசாவில் உள்ள 25 பேக்கரிகளும் மூடப்பட்டதோடு குடும்பங்களுக்கு வழங்கப்படும் இரண்டு வாரங்களுக்கு போதுமான உணவுப் பொதிகளும் தீர்ந்துள்ளன.

பஞ்சம் அச்சுறுத்தல் நிலையை தாண்டி உண்மையாகி வருவதாக காசா ஊடக அலுவலகம் வெள்ளிக்கிழமை (25) வெளியிட்ட அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. ‘தமது குழந்தைகளுக்கு ஒரு வேளை உணவைக் கூட வழங்க முடியாத நிலையில் ஆயிரக்கணக்கான பலஸ்தீன குடும்பங்கள் பட்டினியை எதிர்கொண்டுள்ளன’ என்று அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

காசா பகுதியை முழுமையாக முடக்கிய நிலையிலேயே இஸ்ரேல் அங்கு தொடர்ந்து உக்கிர தாக்குதல்களை நடத்தி வருகிறது.

இந்நிலையில் காசாவில் கொல்லப்பட்ட பலஸ்தீனர்கள் எண்ணிக்கை 51,495 ஆக அதிகரித்திருப்பதோடு மேலும் 117,524 பேர் காயமடைந்திருப்பதாக காசா சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இரண்டு மாத போர் நிறுத்தத்தின் பின்னர் கடந்த மார்ச் நடுப்பகுதியில் இஸ்ரேல் மீண்டும் தாக்குதல்களை ஆரம்பித்ததை அடுத்தே போர் நிறுத்தம் முடிவுக்கு வந்தது. மீண்டும் போர் நிறுத்தம் ஒன்றை எட்டுவதற்கான முயற்சிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றபோதும் இதுவரை குறிப்பிடத்தக்க முன்னேற்றம் எட்டப்படவில்லை.

Popular

More like this
Related

கொழும்பு பல்கலைக்கழகத்தில் நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களை கௌரவிக்கும் சிறப்பு...

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகள் வெளியானது

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகளைக் கல்வி அமைச்சு...

டிரம்பின் ‘அமைதித் திட்டம்’ வெற்றியளிக்குமா?

உண்மையில் காசா பகுதியை உள்ளடக்கிய மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் மோதல் அக்டோபர்...

பிரதமர் சீனாவிற்கு விஜயம்

“பெண்கள் மீதான உலகளாவிய தலைவர்கள் கூட்டத்தில்” கலந்து கொள்வதற்காக பிரதமர் கலாநிதி...