ஜம்மு காஷ்மீரில் உள்ள பகல்காமில் நடந்த தாக்குதலுக்கு பின்னால் பாகிஸ்தானும் இருக்கிறது என்று பரவலாக கூறப்படும் வேளையில், ‘எங்களுக்கும் இந்த சம்பவத்திற்கும் தொடர்பில்லை’ என்று பாகிஸ்தான் மறுத்துள்ளது.
இன்று பாகிஸ்தான் பாதுகாப்புத் துறை அமைச்சர் கவாஜா ஆசிப் இந்தத் தாக்குதல் குறித்து பாகிஸ்தான் ஊடகங்களிடம் பேசியுள்ளதாவது,
“பாகிஸ்தானுக்கும், இந்தத் தாக்குதலுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இது இந்தியாவில் வளர்க்கப்பட்ட அமைப்பு ஆகும். நாகலாந்தில் இருந்து காஷ்மீர் வரையில், தெற்கில், சத்தீஸ்கர் மற்றும் மணிப்பூரில் என இந்தியாவிற்கு எதிராக ஒன்று அல்ல… இரண்டு அல்ல… டஜன் கணக்கான மாநிலங்களில் புரட்சிகள் உள்ளன. இந்த இடங்களில் இந்திய அரசாங்கத்திற்கு எதிரான புரட்சிகள் இருக்கின்றன.
இவை எல்லாம் சொந்த மண்ணிலேயே வளர்க்கப்பட்ட அமைப்புகள் ஆகும். மக்கள் அவர்களின் உரிமைகளை கேட்கிறார்கள். இந்துத்துவா மக்களை சுரண்டி, சிறுபான்மையினர்களை அடக்குகின்றன மற்றும் கிறிஸ்துவர்கள் மற்றும் புத்த மதத்தை சேர்ந்தவர்களை சுரண்டுகின்றனர்.
அவர்கள் கொல்லப்படுகிறார்கள். அதற்கு எதிரான கிளர்ச்சி இது. இதனால் தான், இந்த மாதிரியான நடவடிக்கைகள் அங்கு நடக்கின்றன.
பலுஜிஸ்தானில் நிலவும் அமைதியின்மைக்கு இந்தியா தான் காரணம். இந்தியா அதற்காக நிதி வழங்கி வருகிறது. இதுக்குறித்து பலமுறை நாங்கள் ஆதாரங்களை வழங்கியுள்ளோம்” என்று பேசியுள்ளார்.