பாகிஸ்தானை அழிக்க வேண்டாமா என வட இந்திய ஊடக நிறுவனத்தின் செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு, “இல்லை. அங்கும் மனிதர்கள்தான் இருக்கிறார்கள்” என சொல்லி மனித நேயத்திற்கு எடுத்துக்காட்டாக திகழ்ந்துள்ளார் பீகாரை சேர்ந்த சிறுவன் ஒருவன்.
இந்தியாவும் பாகிஸ்தானும் மாறி மாறி தாக்குதல் நடத்தி வரும் நிலையில், “போர் வேண்டாம்” என சொல்லி செய்தியாளருக்கு சிறுவன் கொடுத்த பதிலடி அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் இந்திய பாதுகாப்பு படை நேற்று தாக்குதல் நடத்தியது. பாகிஸ்தான் மற்றும் காஷ்மீரில் உள்ள 9 இடங்களில் நிலைகள் மீது இந்திய நடத்திய தாக்குதல் சர்வதேச அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இதையடுத்து, எல்லைப் பகுதிகளில் பாகிஸ்தான் தாக்குதல் நடத்தி வருகிறது.
இந்திய, பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே போர் பதற்றம் உச்சத்தை தொட்டுள்ள நிலையில், செய்தியாளர் ஒருவரிடம் சிறுவன் பேசும் காணொளி ஒன்று வைரலாகி வருகிறது.
அதில், பாகிஸ்தானுடன் போர் வேண்டாம் என்றும் அங்கும் மனிதர்கள்தான் இருக்கிறார்கள் என சிறுவன் பேசுவது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
இப்படி பேசுவதற்கு உனக்கு வெட்கமாக இல்லையா? என செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு, இந்து முஸ்லிம் என வெறுப்பு பரப்பும் செய்திகளை போட உங்களுக்கு வெட்கமாக இல்லையா என சிறுவன் பதிலடி கொடுத்துள்ளார். இருவருக்கும் இடையே நடந்த விரிவான உரையாடல் பின்வருமாறு:-
செய்தியாளர்: பாகிஸ்தானை அழிக்க வேண்டாமா?
சிறுவன்: அழிக்கக் கூடாது.
செய்தியாளர்: இந்தியாவுக்கு வாழ்க சொல்வாயா மாட்டாயா?
சிறுவன்: வாழ்க என சொல்வேன்.
செய்தியாளர்: பாகிஸ்தானுக்கு வாழ்க சொல்வாயா மாட்டாயா?
சிறுவன்: சொல்வேன். அவரவருக்கான இடத்தில் அவரவர்கள் நீண்ட நாள்களுக்கு வாழ வேண்டும். நீங்களும் உங்களின் இடத்தில் நீண்ட நாள்களுக்கு வாழ வேண்டும்.
செய்தியாளர்: உன் பெயர் என்ன?
சிறுவன்: முகமது கைப்
செய்தியாளர்: நீங்கள் எந்த ஊரை சேர்ந்தவர்?
சிறுவன்: பீகார்.
செய்தியாளர்: உனக்கு கொஞ்சம் கூட வெட்கமாக இல்லையா? இந்தியாவில் இருந்து கொண்டு பாகிஸ்தானுக்கு ஆதரவு கொடுக்கிறாய்? ஏன் பாகிஸ்தானை அழிக்கக் கூடாது என் சொல்கிறாய்?
சிறுவன்: இந்து முஸ்லீம் என (வெறுப்பு) குறித்து செய்தி போடுகிறாயே. உங்களுக்கு வெட்கமாக இல்லையா? இந்தியாவை ஏன் ஆதரிக்க வேண்டும் என நீங்கள் முதலில் சொல்லுங்கள்.
பின்னர், நான் பதில் சொல்கிறேன். அங்கும், மனிதர்கள் தான் இருக்கிறார்கள். இங்கும், மனிதர்கள்தான் இருக்கிறார்கள். அங்கும், முஸ்லீம்கள், இந்துக்கள் இருக்கிறார்கள். இங்கும், முஸ்லீம்கள், இந்துக்கள் இருக்கிறார்கள். அனைவரும் மனிதர்கள்தான். பின்னர், ஏன் அனைவரையும் கொல்ல வேண்டும். சொல்லுங்கள். ஏன், அந்த நாட்டை அழிக்க வேண்டும். அனைவருக்கும் வாழ உரிமை உண்டு. ஏன், அவர்களை அழிக்க வேண்டும்.
செய்தியாளர்கள்: பாகிஸ்தானுக்கு ஆதரவு கொடுக்கிறாயா?
சிறுவன்: ஆம், தருகிறேன்.
செய்தியாளர்: நீ, இந்தியன் இல்லையா?
சிறுவன்: நான், இந்தியன்தான். ஆனால், நீங்கள் அந்த நாட்டை அழிக்க வேண்டும். இந்த நாட்டை அழிக்க வேண்டும் என சொல்கிறீர்கள். எல்லா இடத்திலும் மனிதர்கள்தான் இருக்கிறார்கள்.
செய்தியாளர்: எனக்கு ஒரு விஷயத்தை தெரிந்து கொள்ள வேண்டும். உனக்கு இதை சொல்லி கொடுத்தது யார்?
சிறுவன்: எனக்கு மூளை இருக்கிறது.
Muslim Indian Boy Shuts Down Reporter. pic.twitter.com/ku2L0LXl56
— ilmfeed (@IlmFeed) May 7, 2025
செய்தியாளர் எழுப்பிய கேள்விகளுக்கு நோஸ் கட் கொடுக்கும் வகையில் சிறுவன் பேசிய கருத்துகளுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
குறிப்பாக, பல்வேறு தரப்பினரும் போருக்கு ஆதரவு தெரிவித்து வரும் நிலையில், மனித நேயத்திற்கு எடுத்துக்காட்டாக திகழ்ந்து போர் வேண்டாம் என சிறுவன் சொன்னது பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.