வக்ஃபு சொத்துக்கள் மீதான வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பு: சீர்திருத்தத்தின் ஒளிக்கீற்று

Date:

N.M.M மிஃப்லி (நளீமீ)
ஓய்வுபெற்ற பிரதி ஆணையாளர் நாயகம்
தேசிய இறைவரித் திணைக்களம்
mifly1234@gmail.com

முஸ்லிம் தொண்டு நிறுவனங்களில் பொறுப்புக்கூறல் மற்றும் சீர்திருத்தத்தின் புதிய சகாப்தத்தைக் குறிக்கும் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க ஒரு நடவடிக்கையாக கடந்த ஏப்ரல் 30, 2025 அன்று ஒரு முக்கிய உத்தரவை இலங்கை வக்ஃபு சபை பிறப்பித்துள்ளது.

கல்எளியவில் அமைந்துள்ள 65 ஆண்டு பழமையான முஸ்லிம் மகளிர் அரபுக் கல்லூரியின் (MLAC)  நிர்வாகம் தொடர்பில் ஏற்பட்டுள்ள சர்ச்சையை முடிவிற்கு  கொண்டுவரும் முகமாக, கல்லூரியின் நிர்வாகத்துடன் சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினரிடமிருந்தும் வாய்மொழி மற்றும் எழுத்துப்பூர்வ சமர்ப்பிப்புகள் மூலம் மேற்கொள்ளப்படட விவாதங்களைத் தொடர்ந்து அக்கல்லூரி இனி வக்ஃபு சட்டத்தின் விதிகளின் கீழ் முறையாகப் பதிவு செய்யப்பட்டு நிர்வகிக்கப்பட வேண்டும் என வக்ஃபு சபை உத்தரவிட்டுள்ளது.

வக்ஃப் சபை என்றால் என்ன?

இலங்கை வக்ஃபு சபையானது பாராளுமன்றத்தால் இயற்றப்பட்ட (திருத்தங்களுக்கு அமைய) 1956 ஆம் ஆண்டு 51 ஆம் இலக்க வக்ஃபு சட்டத்தின் கீழ் நிறுவப்பட்ட ஒரு சட்டப்பூர்வ அமைப்பாகும் என்பதை பலரும் அறிவர்.

மேற்படி சட்டத்தின் பிரிவு 32 (1) இல் குறிப்பிடப்பட்டுள்ள நோக்கங்களுக்காக உருவாக்கப்படும் முஸ்லிம் மதத் தளங்கள் மற்றும் தொண்டு அறக்கட்டளைகளை (வக்ஃபுகள்) பதிவு செய்வதற்கும் மேற்பார்வையிடுவதற்கும் ஒரு சட்ட கட்டமைப்பை இது வழங்குகிறது.

வக்ஃப் நடைமுறை என்பது இஸ்லாமிய பொதுநல அமைப்புக்களில் இருக்க வேண்டிய ஒரு முக்கிய நியதியாகும், அல்லாஹ்வின் திருப்தியை மட்டுமே நாடி ஒரு முஸ்லிம் பொது நலனுக்காக பணம், நிலம், கட்டடம் அல்லது வருமானம் போன்றவற்றை பிற்காலத்தில் எவராலும் மாற்ற முடியாத விதத்தில் அர்ப்பணிபுச் செய்வதை வக்ஃபு செய்தல் எனப்படும். இதன் முக்கிய அம்சங்களாவன:

• நிரந்தர அர்ப்பணிப்பு: ஒரு சொத்து வக்ஃப் என்று அறிவிக்கப்பட்டதன் பின் அதனை விற்கவோ அல்லது அதன் வாரிசுகளுக்கு உரிமை மாற்றவோ முடியாது. அது வக்ஃபு செய்யப்பட்டவுடன் அதன் தொண்டு நோக்கங்களுடன் நிரந்தரமாக பிணைக்கப்பட்டு விடும்.

• முஸ்லிம் பொதுமக்களுக்கான நன்மை: வக்ஃபுகளின் முதன்மை குறிக்கோள் மஸ்ஜிதுகளை, முஸ்லிம் பாடசாலைகளை அமைப்பது, முஸ்லிம்கள் செரிந்து வாழும் பகுதிகளில் சாலைகள் அமைப்பது, தண்ணீர் வசதிகள் செய்து கொடுப்பது போன்றவை மூலம் முஸ்லிம் சமூகத்திற்கு சேவை செய்வதாகும். ஆனால் ஏனைய சமூத்தினருக்கும் வக்ஃபு சொத்துக்கள் மூலம் உதவிகள் செய்ய அனுமதி உண்டு.

• ஆன்மீக நோக்கம்: ஒரு சொத்தையோ அல்லது வருவாயையோ வக்ஃபு செய்பவர் இதற்காக எவ்வித உலக ரீதியான பிரதிபலனையும் எதிரபாரப்பதில்லை. மாறாக அவர் தனது மறுமை தேவைகளுக்காகவே அதை அர்ப்பணிக்கின்றார்.

கல்எலிய முஸ்லிம் மகளிர் அரபுக் கல்லூரியின் வரலாற்றுப் பின்னணி
சமூகப் பொதுநல நோக்கம் கொண்ட ஐந்து முஸ்லிம் தனவந்தர்களால் 1956 ஆம் ஆண்டுகல்எளியவில் முஸ்லிம் மகளிருக்காக மேற்படி அரபுக் கல்லூரி ஆரம்பிக்கப்பட்டது.

கல்எளிய என்பது மேல் மாகானத்தில் கம்பஹா மாவட்டத்தில் மீரிகம பிரதேச செயலகப்பிரிவில் அமைந்துள்ள முஸ்லிம் பெரும்பான்மையைக் கொண்டதொரு கிராமமாகும். மூன்று முக்கிய நோக்கங்களைக் கருத்தில் கொண்டே இந்த கல்லூரி நிறுவப்பட்டது:

• இலங்கையில் முஸ்லிம் மகளிரிடையே அரபு மற்றும் இஸ்லாமிய போதனைகளை ஊக்குவித்தல்;

• தாருல் அய்தம் (முஸ்லிம் அனாதை சிறுமிகள் இல்லம்) மற்றும் தாருல் அத்ஃபால் (சிறார் இல்லம்) என்ற இரு இல்லங்களை அமைத்து அவற்றை பராமரித்து நிர்வகித்து வருதல்;

• இந்த நோக்கங்களை பூர்த்திய செய்வதற்கு அவசியமான மற்றும் உகந்த நடவடிக்கைகளை மேற்கொள்ளல்

முதலில் 27 பகுதி நேர முஸ்லிம் மாணவிகளை வைத்தே கல்எலிய முஸ்லிம் மகளிர் அரபுக் கல்லூரி ஆரம்பிக்கப்பட்டது. அம்மாணவிகள் அனைவரும் அருகில் அமைந்திருந்த கல்எலிய அரச பாடசாலைக்கு கல்வி கற்க வருபவர்களாகவே இருந்தனர்.

இம்மாணவிகளுக்கு மாலையில் இஸ்லாமிய மார்க்க கல்வி மற்றும் அரபு மொழியை கற்பிப்பது மேற்படி அரபுக் கல்லூரியின் நோக்கமாக இருந்தது. கல்லூரியை கட்டுவதற்காக மேலே குறிப்பிட்ட ஐந்து ஸ்தாபகர்களுள் ஒருவர் இரண்டு ஏக்கர் காணியை வழங்கினார்.

முஸ்லிம் சமூகத்தின் நலன் கருதி அவர்கள் செய்த அர்ப்பணத்திற்காக முழு முஸ்லிம் சமூகமும் அவர்களுக்குக் கடன்பட்டுள்ளது என்றே கூற வேண்டும்.

1961 ஜூலை 23 அன்று கல்லூரியை நிறுவிய 5 தனவந்தர்களும் இலங்கை வாழ் முஸ்லிம் சமூகத்திடம் ஒரு பொதுவாக வேண்டுகோளை விடுத்தவர்களாக, அவர்களில் ஒருவர் நன்கொடையாக வழங்கிய ரூபாய் 10,000 பெருமதியுள்ள வக்ஃப் நிலத்தில் கல்லூரிக்குத் தேவையான சில கட்டிடங்களை கட்டுவதற்கு நன்கொடைகள் வழங்குமாறு கேட்டுக்கொண்டனர்.

தற்போதுள்ள பதிவுகளின்படி, கல்எலிய மகளிர் கலலூரிக்கு வழங்கப்பட்ட முதலாவது நன்கொடை அக்காணியாகும். அதன் பிறகு மேற்படி முன்னெடுப்பின் உயரிய நோக்கங்களால் கவரப்பட்ட இலங்கை மற்றும் வெளிநாட்டு முஸ்லிம்கள் பலர் பலதரப்பட்ட நன்கொடைகளையும் வருமானம் ஈட்டும் சொத்துக்களையும் கல்லூரிக்கு வழங்கினர். இவற்றின் பெறுமதி தற்போது பல கோடி ரூபாய்களாக ஆகியிருப்பது குறிப்பிடத்தக்கது.

சட்டபூர்வ அறக்கட்டளையாக அங்கீகாரம் பெறல்

பொதுமக்களின் அமோக ஆதரவின் காரணமாக, மார்ச் 28, 1964 தேதியிட்ட எண் 13998 வர்த்தமானி அறிவிப்பு மூலம் அதிகாரப்பூர்வமாக ‘அங்கீகரிக்கப்பட்ட தொண்டு நிறுவனம்’ என கல்எலிய முஸ்லிம் மகளிர் அரபுக் கல்லூரியை அரசு ஏற்றது.

அங்கீகரிக்கப்பட்ட தொண்டு நிறுவனம் என்பது 2017 ஆம் ஆண்டு எண். 24 ஆம் தேதி உள்நாட்டு வருவாய் சட்டத்தின் ஐந்தாவது அட்டவணையின் பிரிவு 1(ய) இன் படி, தொடர்புடைய அமைச்சரால் முறையாக அறிவிக்கப்பட்டதொரு பொது தொண்டு அறக்கட்டளை அல்லது நிறுவனத்தைக் குறிக்கின்றது.

அத்தகைய நிறுவனங்களுக்கு பணமாக வழங்கப்படும் நன்கொடைகள் நன்கொடையாளரின் வரி மதிப்பீடு செய்யப்படட வருமானத்திலிருந்து கழிவு பெரும் கொடுப்பனவுகளாகும் தகுதியை பெறுகின்றன. அது மட்டுமன்றி, அதன் மூலம் உருவாக்கப்படும் வருமானத்திற்கு குறைந்த வரி விகிதத்திலேயே வரி விதிக்கப்படுகின்றது.

MLAC: முஸ்லிம்களின் ஒரு பொது நிறுவனமா அல்லது தனியார் சொத்தா?

உள்ளூர் மற்றும் சர்வதேச நன்கொடையாளர்களின் தாராளமான பங்களிப்புகள் மூலம் நிறுவப்பட்ட கல்எலிய முஸ்லிம் மகளிர் அரபுக் கல்லூரியின் நிர்வாகச் சங்கம், 1991 ஆம் ஆண்டு 46 ஆம் எண் சட்டத்தின் (MLAC சட்டமூலம்) கீழ் பாராளுமன்றத்தால் முறையாக இணைக்கப்பட்டது.

இந்த ஒருங்கிணைப்பானது பல புகழ்பெற்ற சமூக நலன் விரும்பிகள் மற்றும் சட்ட வல்லுநர்கள் பங்களிப்புச் செய்த ஒரு ‘சர்ச்சைத் தீர்வு’ முன்னெடுப்பின் ஒரு வெளிப்பாடேயாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

MLAC சட்டமூலமானது, அதனுடன் இணைந்த விதிகளுடன் சேர்ந்து, ஜனநாயக மேற்பார்வை மூலம் கல்லூரிக்கு சிறந்த நிரவாகத்தை உறுதி செய்வதற்காக வடிவமைக்கப்பட்டதாகும்.

விதிகளின் பத்தி 04 இன் படி, 21 வயதுக்கு மேற்பட்ட முஸ்லிம் ஆண்களை உறுப்பினர்களாகக் கொண்ட ஒரு சங்கம் உருவாக்கப்பட வேண்டும் எனவும், பத்தி 09 ஒரு வருடாந்திர பொதுக் கூட்டத்தை (AGM) நடத்த வேண்டும் எனவும் அங்கு கணக்காய்வு செய்யப்பட்ட கணக்கு விபரம் சமர்ப்பிக்கப்பட வேண்டும் மற்றும் நிர்வாக சபையின் அங்கத்தவர்கள் மூன்று வருடங்களுக்கு ஒரு தடவை தெரிவு செய்யப்பட வேண்டும் எனவும் நியதிகளை அமைத்தது.

இருப்பினும், 30 ஆண்டுகளுக்கும் மேலாக, இந்த விதிகள் எதுவும் கடைபிடிக்கப்படாமல் முற்றாக புறக்கணிக்கப்பட்டுள்ளன. வருடாந்த பொதுக் கூட்டங்கள் எதுவும் நடத்தப்படவில்லை என்பதோடு சங்கம் ஒருபோதும் செயற்படவுமில்லை.

நிர்வாகக் குழு உறுப்பினர்கள் பல ஆண்டுகளாக தொடர்ந்து பதவிகளை ஏகபோகமாகமாக வகித்து வருகின்றனர்.

கல்லூரியின் கடடுப்பாடு, தற்போது அதை நிறுவிய அங்கத்தவர்களில் ஒரே ஒருவருடைய குடும்பத்தினர் வசமே இருப்பதுடன் ஏனைய அங்கத்தவர்களின் குடும்ப அங்கத்தவர்களுக்கு அது மறுக்கப்பட்டுள்ளது.

இக்கட்டுரையின் ஆசிரியர் கல்லூரியின் சட்ட நியதிகளுக்கு ஏற்ப பல சீர்திருத்தங்களை கொண்டு வர முயற்சித்து அவை வெற்றியளிக்காத நிலையில் 2020 செப்டெம்பர் தனது செயலாளர் பதவியை இராஜினாமா செய்தார். இந்த இராஜினாமாவை சபை ஏற்கவோ அல்லது மறுக்கவோ இல்லை.

மாறாக, மறைந்த சபைத் தலைவர் 2021 ஆண்டில் இக்கட்டுரையின் ஆசிரியர் தொடர்ந்தும் சபையின் செயலாளராக இருப்பதாக உறுதிப்படுத்தும் ஒரு பிரமாணப் பத்திரத்தை சமர்ப்பித்தார்.

2021 மற்றும் 2022 ஆம் ஆண்டுகளில் சபையில் மேற்படி குடும்பத்தைச் சேர்ந்த மேலும் இருவர் உறுப்பினர்களாக சேர்க்கப்பட்டதுடன் நிலைமை இன்னும் மோசமடைந்தது. நிர்வாகம் மற்றும் மாணவிகள், ஆசிரியர்கள், பெற்றோர்கள், முன்னாள் மாணவிகள், நலன் விரும்பிகள், ஊர்வாசிகள், சீர்திருத்த எண்ணம் கொண்ட சபை உறுப்பினர்கள் மற்றும் அக்கரையுள்ளவர்களை தொடர்ந்து ஓரங்கட்டுவது குறித்த பொதுமக்களிடையே கடும் விசனம் எழுந்தது.

கல்லூரியின் முகாமைத்துவம் MLAC ஐ ஒரு தனியார் சொத்தாக அறிவித்ததைத் தொடர்ந்து முஸ்லிம சமூகத்தின் எதிர்ப்பை மேலும் பெற்றுக்கொண்டது மாத்திரமில்லாமல் MLAC மாணவிகளுக்கு பரீட்சை திணைக்களத்தால் நீண்ட காலமாக வழங்கப்பட்டு வந்த பரீடசைக் கட்டண விலக்கையும் அத்திணைக்களம் நீக்கிக்கொண்டது.

அதன் பின் அகில இலங்கை ஜமியத்துல் உலமா, தேசிய சூரா சபை போன்ற முன்னணி இஸ்லாமிய அமைப்புகள் மேற்கொண்ட சமரச முயற்சிகளும் தோல்வியுற்றன. இந்நிலை, நிர்வாகச் சபையின் சட்டபூர்வ தன்மையை மீட்டெடுக்கவும், கல் – எளிய முஸ்லிம் மகளிர் அரபுக் கல்லூரி ஒரு பொதுவான முஸ்லிம் தொண்டு அறக்கட்டளை என்ற அந்தஸ்தை மீட்டெடுக்கவும் நீதிமனற் நடவடிக்கை எடுக்க பங்குதாரர்களை தூண்டியது.

அதைத் தொடர்ந்து, விரிவான மதிப்பாய்வுகளின் பின் வக்ஃப் சட்டத்தின் பிரிவு 32 இன் கீழ் கல் – எளிய முஸ்லிம் மகளிர் அரபுக் கல்லூரியை ஒரு வக்ஃப் சொத்தாகப் பதிவு செய்யுமாறு முஸ்லிம் மத விவகாரத் திணைக்கள  பணிப்பாளர் பரிந்துரைத்தார். அதன் விளைவாக ஏப்ரல் 30, 2025 அன்று, வக்ஃப் சபை கல் – எளிய கல்லூரியை ஒரு முஸ்லிம் அறக்கட்டளையாக அதிகாரப்பூர்வமாக அறிவித்து, ஒரு வரலாற்று முக்கியத்துவமிக்க தீர்ப்பாக பிரகடனப்படுத்தியது.

வக்ஃப் சட்டத்தின் கீழ் கல் – எளிய முஸ்லிம் மகளிர் அரபுக் கல்லூரி பதிவு செய்யப்பட வேண்டிய அவசியம் மற்றும் தகுதி குறித்த வக்ஃப் சபை தீர்மானத்தின் ஒரு பகுதி பின்வருமாறு.

‘கல்லூரியின் செயற்பாட்டு கட்டமைப்பு இச்சட்டப்பூர்வ அளவுகோல்களுடன் துல்லியமாக இசைவாவதை காட்டுகின்றது. குறிப்பாக முஸ்லிம் மகளிரின் கல்வி அறிவை மேம்படுத்தும் அதன் முதன்மை பணி ஊடாக, தற்போதுள்ள பதிவு மற்றும் ஜகாத் உள்ளிட்ட மத நிதி வழிமுறைகளை சார்ந்திருத்தல் மூலம் இது மேலும் ஊர்ஜிதமாகின்றது.

‘வக்ஃப் சட்டம் வெளிப்படையாக பின்வரும் நோக்கங்களுக்காக அமைக்கப்பட்ட நிறுவனங்களை உள்ளடக்கியதாகும்:

(i) முஸ்லிம்களுக்கான கல்வி மேம்பாட்டிட்கான நிறுவனங்கள்;
(ii) முஸ்லிம் சமூகத்திற்கு நன்மை பயக்கும் நோக்கங்களுக்கான நிறுவனங்கள்; மற்றும்
(iii) முஸ்லிம் சட்டத்தின் கீழ் மத ரீதியாக தகுதியானதாக அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்கள்;

கல்லூரியை நிறுவிய நோக்கங்கள், செயற்பாட்டு கட்டமைப்பு, சொத்துக்கள் மற்றும் நிதி ஆதாரங்கள், உள்நாட்டு மற்றும் சர்வதேச தொண்டு அமைப்புக்களின் பங்களிப்புகள் உட்பட, வக்ஃப் சட்டத்தின் நிர்ணயிக்கப்பட்ட அளவுகோல்களுடன் கல்லூரி துள்ளியமான விதத்தில் இசைவாவதை சபையின் விரிவான மதிப்பாய்வு உறுதி செய்துள்ளது.

‘முஸ்லிம் மகளிருக்கான கல்வி வாய்ப்புகளை மேம்படுத்துவதே இந்த நிறுவனத்தின் அடிப்படை குறிக்கோளாவதோடு இது வக்ஃப் சட்டத்தின் மூலம் ஊக்குவிக்கக்கடும் தொண்டு நோக்கங்களை பிரதிபலிக்கின்றது.

இவ்விசைவானது, கல்லூரி தற்போது ஒரு தொண்டு நிறுவனமாக தொடர்புடைய அரசு நிறுவனங்களுடன் பதிவு செய்யப்பட்டுள்ளதன் மூலம் மேலும் உறுதியாகின்றது. கல்லூரியின் கல்வி நடவடிக்கைகள் மூலமாகவும், முறையான அதன் சட்டப்பூர்வ நிலை மூலமாகவும் இரட்டை அங்கீகார தகுதிக்கான மறுக்க முடியாத ஒரு நிலைப்பாட்டை இது உருவாக்குகிறது.

‘தொடர்புடைய அனைத்து காரணிகள் மற்றும் ஆதாரங்களை மிக கவணமாக ஆராய்ந்த வகையில், வக்ஃப் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்படுவதற்காக மேற்படி அரபுக் கல்லூரி எவ்வித மறுப்பிட்கிடமில்லாமால் தகுதி பெறுவதாக சபை கருதுகின்றது.

மேலும் குறிப்பிட்ட சட்ட மூலம் ஊடாக வலியுறுத்தப்படும் அனைத்து தகுதிகளையும் கல்லூரி பூர்த்தி செய்கின்றதுடன் அதனை பதிவு செய்வதை மறுக்கக்ககூடிய எந்த சட்ட பூர்வ காரணமும் தென்படவில்லை.

‘பதிவு நோக்கங்களுக்காக வக்ஃப் சபையின் அதிகார வரம்பிற்குள் இந்த நிறுவனம் வருகிறது என்பதையும் சபை உறுதி செய்கின்றது. முஸ்லிம் மஸ்ஜிதுகள் மற்றும் தொண்டு அறக்கட்டளைகள், அதாவது 1956 ஆம் ஆண்டு வக்ஃப் சட்டத்தின் கீழ் நிறுவப்பட்டதற்கு அமைய இலங்கையில் உள்ள முஸ்லிம் தொண்டு அறக்கட்டளைகள் மற்றும் மஸ்ஜிதுகளை மேற்பார்வையிடுவதற்குப் பொறுப்பான சட்டப்பூர்வ நிர்வாக அமைப்பாக வக்ஃப் சபை செயல்படுகிறது.

வக்ஃப் சபையின் உத்தரவு வரலாற்று முக்கியத்துவம் பெறுவது ஏன்?

வக்ஃப் சபையின் மேற்படி உத்தரவு உண்மையிலேயே வரலாற்றுச் சிறப்புமிக்கதென்றால் அது மிகையாகாது. மத மற்றும் சிவில் சட்ட கட்டமைப்புகளை பொருட்படுத்தாது நீண்ட காலமாக ஒருதலைப்பட்சமாக செயற்பட்டு வந்த ஒரு முஸ்லிம் தொண்டு அறக்கட்டளைக்கு வெளிப்படைத்தன்மை, பொறுப்புக்கூறல் மற்றும் உள்ளடக்கத்தை மீட்டெடுப்பது போன்ற விடயங்களில் இவ்வுத்தரவானது ஒரு முக்கிய தருணத்தைக் குறிக்கின்றது.

நமது முன்னோர்களால் உன்னத நோக்கங்களுடன் நிறுவப்பட்ட பல முஸ்லிம் தொண்டு அமைப்புக்கள் மற்றும் அதன் சொத்துக்கள் -பெரும்பாலும் அதை நிறுவியவர்களின் சந்ததியினராலேயே- துஷ்பிரயோகம் செய்யப்படும் அல்லது அவற்றின் அசல் நோக்கங்களிலிருந்து திசைதிருப்பப்படும் ஒரு கவலைக்கிடமான கால கட்டத்தில் வக்ஃப் சபையின் மேற்படி ஆணை நிச்சயம் ஒரு முக்கிய திருப்பு முணையே.

சட்டத்தில் உள்ள சில குறைபாடுகள் அல்லது ஒருவர் தனது வாரிசுகள் மீது வைக்கும் அளவு கடந்த நம்பிக்கை உள்ளிட்ட நியாயமான பல காரணங்களால் நம் நாட்டில் பல தொண்டு நிறுவனங்கள் வக்ஃப் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்படாமல் இருக்கலாம்.

1956 ஆண்டில் இயற்றப்பட்ட வக்ஃப் சட்டம் குறைபாடுகள் உள்ளது மற்றும் பல அவசர சீர்திருத்தங்கள் தேவைப்படக் கூடியது என்பதும் பரவலாக ஒப்புக் கொள்ளப்படட ஒரு விடயமாகும்.

ஆயினும் கூட, வக்ஃப் சட்டத்தின் கீழ் ஒரு முஸ்லிம் தொண்டு அறக்கட்டளையைப் பதிவு செய்வதன் நன்மைகள் அவ்வாறு செய்யாததால் ஏற்படும் தீமைகளை விட மிக அதிகமே.

தொண்ணூறு ஆண்டுகளை விடப் பழமையான கஃபூரியா அரபுக் கல்லூரி வக்ஃபின் கீழ் பதிவு செய்யப்படாததால் அன்மைக் காலத்தில் அந்நிறுவனம் எதிர்கொண்டு வரும் சவால்கள் போன்றன, வக்ஃபு சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்படாத நிறுவனங்களின் பாதிப்புகளை எடுத்துக்காட்டுகின்றது.

ஒரு முஸ்லிம் தொண்டு நிறுவனம் அதன் நிறுவனரின் தனிப்பட்ட நன்கொடைகள் மூலம் மட்டுமே உருவாக்கப்பட்டால், அதன் நிர்வாகத்தின் சட்டப்பூர்வ பொறுப்பு (தார்மீக ரீதியாக அவசியமில்லை என்ற போதிலும்) நிறுவியவரின் வாரிசுகளிடம் மட்டுமே இருக்கலாம்.

ஆனால், உண்மை நிலை என்னவென்றால், இந்த நிறுவனங்களில் பெரும்பாலானவை பரந்த முஸ்லிம் சமூகத்தின் தார்மீக, நிதி மற்றும் அறிவுசார் ஆதரவின் மூலம் வளர்ந்து சாதனைகள் பல புரிற்துள்ளன என்பதே.

எனவே, எந்தவொரு தனிநபரும் அல்லது குடும்பமும் நியாயமான விதத்தில் தனி உரிமையைக் கோரவோ அல்லது வக்ஃப் சபையின் சட்டப்பூர்வ மேற்பார்வையைத் தடுக்கவோ கூடாது.

மேற்படி தெளிவுகளின் அடிப்படையில், கல் – எளிய முஸ்லிம் மகளிர் அரபுக் கல்லூரியை வக்ஃப் சட்டத்தின் கீழ் ஒரு முஸ்லிம் அறக்கட்டளையாகப் பதிவு செய்ய வக்ஃப் சபை எடுத்த முடிவு ஒரு வரலாற்று நிகழ்வாகும்.

தற்போதைய நிர்வாகத்தின் சட்டப்பூர்வத்தன்மைக்கு சவால்கள் பல இருந்த போதிலும், நிறுவனத்தின் நீண்டகால நோக்கத்தைப் பாதுகாப்பதில் சபையின் பங்கையும் இந்த முடிவையும் கல்லூரி நிர்வாகத்தினர் ஏற்று வரவேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்தப் பதிவு கல்லூரியின் நிர்வாகம் வெளிப்படையானதாகவும், பொறுப்புக்கூறலுடனும் செயற்படுவதை அதன் ஸ்தாபக பெருமானங்கள், ஆன்மீக மற்றும் தொண்டுப் பெருமானங்களுடன் இசைவாக இருப்பதையும் உறுதி செய்ய நிச்சயம் உதவும்.

அது மட்டுமன்றி, சபையின் மேற்படி உத்தரவு ஒரு முக்கிய முன்னுதாரணத்தையும் அமைக்கின்றது. நீண்டகாலமாக இருந்து வரும், ஆனால் முறைசாரா முறையில் நிர்வகிக்கப்படும் முஸ்லிம் தொண்டு நிறுவனங்கள் சட்டப்பூர்வ மேற்பார்வையின் பாதுகாப்பின் கீழ் வருவதற்கான கதவை இது திறக்கின்றது. இதன் மூலம் பொதுமக்களின் நம்பிக்கை மற்றும் நன்கொடையாளர் நம்பிக்கையும் அதிகரிக்கின்றது.

தற்காலத்தில் முஸ்லிம் சமூகம் மற்றும் மனிதகுலத்தின் முன்னேற்றத்திற்காக தாராள மனப்பான்மை கொண்ட பரோபகாரர்களால் உருவாக்கப்பட்டுள்ள பல தொண்டு அமைப்புக்கள் உள்ளன.

இவைகளில் பல வக்ஃப் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்படாமை கவலைக்குரியதே. மேலும் பல அமைப்புக்களை நிறுவ திட்டங்கள் இருந்தாலும் அவற்றை வக்ஃபு சட்டத்தின் கீழ் பதிவு செய்யும் முக்கியத்துவம் பற்றி தொடர்புடையவர்களுக்கு தெளிவு இல்லாமை இருத்தலும் கவலைக்குரியதே.

எனவே, இது போன்ற பொதுநல அமைப்புக்களின் நிர்வாகிகள், நம்பிக்கையாளர்கள் மற்றும் சமூகத் தலைவர்கள் அவ்வமைப்புக்களை வக்ஃப் சட்டத்தின் முறையான பதிவின் கீழ் கொண்டுவருவது விவேகமானது மட்டுமல்ல, அது அவர்களுடைய தார்மீக கடமையுமாகும்.

அவ்வாறு செய்யத் தவறினால் எதிர்காலத்தில் கைசேதப்படுவது மட்டுமல்லாமல், இந்த முக்கியமான பொறுப்பை புறக்கணித்தமைக்கான பொறுப்பையும் அவர்களை மறுமையில் சுமக்க நேரிடலாம்.

ஒரு வகையில் வக்ஃப் சட்டம், முஸ்லிம் விவாக மற்றும் விவாகரத்துச் சட்டம் போன்ற முஸ்லிம்களுக்காக நாடாளுமன்றத்தால் விசேடமாக இயற்றப்பட்ட சட்டங்களில் தேவையான சீர்திருத்தங்களை கொண்டு வருவதற்காக உயரிய நோக்குடன் அவற்றை விமர்சன ரீதியாக ஆராய்ந்து வாதிடுவது சமூகத் தலைவர்கள், அறிவுஜீவிகள் மற்றும் சிவில் சமூக அமைப்புகளின் புனிதமான ஒரு கடமையாகும்.

அது மட்டுமின்றி, இச்சட்டங்களை வலுப்படுத்துவதானது, சமூகத்திடம் ஒப்படைக்கப்பட்ட வக்ஃப் சொத்துக்களை சிறப்பாகப் பாதுகாக்கும் மற்றும் அவற்றின் உன்னத நோக்கங்களை சரியாக நிறைவேற்றுவதை உறுதி செய்யவும் அவை துணை புரியும்.

வக்ஃப் சபையின் மதிப்பிற்குரிய தலைவர் மற்றும் உறுப்பினர்களின் தொலைநோக்குமிக்க வழிகாட்டலுக்கு முஸ்லிம் சமூகம் தமது உளமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றது. சரியான தருணத்தில் அவர்கள் துணிவுடன் பிறப்பிக்கும் உத்தரவுகள், முஸ்லிம் தொண்டு நிறுவனங்களைப் பாதுகாப்பதற்கும், வருங்கால சந்ததியினருக்கு தன்னலமற்ற நன்கொடையின் புனிதமான பாரம்பரியத்தைப் பாதுகாப்பதற்கும் ஒரு கூட்டு உறுதிப்பாட்டை உருவாக்கும் என்பதில் சந்தேகமில்லை.

எனவே, வக்ஃப் சபையின் மேற்படி உத்தரவானது, விரிவான சீர்திருத்தம், புதுப்பிக்கப்பட்ட பொறுப்புக்கூறல் போன்றவற்றை உறுதி செய்வதற்கும் நமது முன்னோர்களின் நம்பிக்கையை நிலைநிறுத்துவதற்கும், விரிவான பொது நன்மைக்காகச் சேவை செய்வதற்கும் நமது பகிரப்பட்ட பொறுப்பின் மறுமலர்ச்சிக்கு ஒரு திருப்புமுனையாக அமையும் என பிரார்த்திப்போமாக.

Popular

More like this
Related

நாட்டில் சில இடங்களில் ஓரளவு பலத்த மழை பெய்யலாம்

வடக்கு, கிழக்கு, வடமத்திய, மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களின் பல...

சுகாதாரத் துறையில் பணிபுரியும் முஸ்லிம் பெண்களின் ஹிஜாப் விவகாரம் தொடர்பில் ரிஷாத் பதியுதீன் அமைச்சருக்கு கடிதம்!

திருகோணமலையில்  சுகாதாரத் துறையில் பணிபுரியும் முஸ்லிம் பெண்களின் அரசியலமைப்பு உரிமைகளைப் பாதுகாக்க...

காலாவதியான பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்த முன்னணி பல்பொருள் அங்காடிக்கு அபராதம்

காலாவதியான உணவுப் பொருட்களை விற்பனை செய்ததாக குற்றத்தை ஒப்புக்கொண்டதால், முன்னணி பல்பொருள்...

உள்ளூராட்சி நிறுவனங்களின் செயற்பாடுகளில் பிரஜைகளின் பங்களிப்பை விரிவுபடுத்துவது தொடர்பில் கவனம் 

உள்ளூராட்சி நிறுவனங்களின் செயற்பாடுகளில் பிரஜைகளின் பங்களிப்பை விரிவுபடுத்துவது தொடர்பில் திறந்த பாராளுமன்ற...