இஸ்ரேலில் பணிபுரியும் இலங்கையர்களின் தொழில் பாதுகாப்பு மற்றும் உயிர் பாதுகாப்பு தொடர்பாக அரசாங்கம் காத்திரமான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
யுத்தம் உக்கிரமடைந்து அங்குள்ள இலங்கையர்களை நாட்டுக்குத் திருப்பியழைக்கும் நிலை ஏற்பட்டால் அதற்கு நாம் தயாராகவே உள்ளோம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். பாராளுமன்றத்தில் நேற்று (19) வாய்மூல விடைக்கான வினாக்கள் வேளையில் ரோஹண பண்டார எம்.பி எழுப்பிய கேள்வி ஒன்றுக்குப் பதிலளிக்கும்போது இவ்வாறு தெரிவித்த அமைச்சர் மேலும் குறிப்பிடுகையில்,
ஈரான் – இஸ்ரேல் மோதல்கள் காரணமாக இலங்கையர்கள் சில பாதிப்புகளை எதிர்கொண்டுள்ளனர். ஈரானில் 35 இலங்கையர்களே உள்ள போதிலும் இஸ்ரேலில் சுமார் 20,000 இலங்கையர்கள் உள்ளனர்.
இஸ்ரேலில் தற்போது விமான நிலையங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. எந்தவொரு விமானமும் சேவையில் ஈடுபடவில்லை. எனினும், அங்குள்ள எமது தூதுவராலயம் இலங்கையர்கள் தொடர்பாக தீவிர கவனம் செலுத்தி வருகின்றது.
அங்கு தாக்குதலில் பாதிக்கப்பட்ட இலங்கையர் மூவருக்கு பலத்த பாதிப்பு எதுவும் கிடையாது. ஒருவருக்கு ஒரு காலில் கண்ணாடி விழுந்ததில் சற்று அதிகமான பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அவரும் மற்றவர்களும் தற்போது சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
அவர்களுக்கான உணவு, உடை உள்ளிட்ட அனைத்து வசதிகளையும் பெற்றுக்கொடுப்பதற்கு 24 மணித்தியாலமும் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதற்கான நிதியை நாம் அனுப்பியுள்ளோம்.
வெளிவிவகார அமைச்சு சைப்பிரஸ் தூதுவராலயத்துடன் இணைந்து தொடர்ச்சியாக அது தொடர்பான கண்காணிப்புகளை மேற்கொண்டு வருகிறது.
இஸ்ரேலில் பணிபுரியும் இலங்கையர்கள் நாட்டுக்கு வரவேண்டும் என தெரிவிக்கவில்லை.
அங்குள்ள தூதுவராலயம் அவர்களின் பாதுகாப்பு தொடர்பாக உரிய நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. இஸ்ரேல் தூதரகம் போர் பதற்றம் தொடர்பான தகவல்களை தொடர்ச்சியாக வழங்கி வருகிறது. இத்தகைய பின்னணியில் யுத்தம் உக்கிரமடைந்து மிக மோசமான நிலை அங்கு ஏற்படுமாயின் நாம் அதற்கு அண்மித்த நாடுகளுக்கு விமானங்களை அனுப்பி இலங்கையர்களை நாட்டுக்கு கொண்டுவர நடவடிக்கை எடுப்போம்.
இது தொடர்பாக ஏனைய நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளோம். வேறு நாடுகளின் தூதரகங்களுடனும் பேச்சு வார்த்தை நடத்தி ஒத்துழைப்புடன் செயற்பட்டு வருகிறோம்.
அவர்களது ஒத்துழைப்புடன் இலங்கையர்களுக்கு போதிய பாதுகாப்பு வழங்க உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளோம். அந்தவகையில் எந்த சந்தர்ப்பத்திலும் இலங்கையர்களை நாட்டிற்கு கொண்டுவர நாம் தயாராகவே உள்ளோம்.
தற்போது இஸ்ரேலில் எந்த ஒரு அரச நிறுவனமும் செயற்படவில்லை. அரசாங்க அதிகாரிகள் தங்களது வீடுகளிலிருந்து கொண்டே பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இஸ்ரேலின் பீபா நிறுவனம் அது தொடர்பாக நடவடிக்கைகளை மேற்கொள்கிறது. இந்த விசா காலத்தை அதிகரிக்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும் என அந்த நிறுவனம் எமக்கு தெரிவித்துள்ளது.
அதன்படி, இஸ்ரேலில் பணிபுரியும் இலங்கையர்களின் தொழில் பாதுகாப்பு மற்றும் உயிர் பாதுகாப்பு தொடர்பாகவும் அரசாங்கம் உறுதியான நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளது என அவர் குறிப்பிட்டார்.