ஏப்ரல் 21 பயங்கரவாதத் தாக்குதலுக்கு முன்னதாக கிடைத்த புலனாய்வு தகவல்களின் அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்கத் தவறியமைக்காக, அரச புலனாய்வு சேவையின் முன்னாள் பிரதானி சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் நிலந்த ஜயவர்தனவை பொலிஸ் சேவையிலிருந்து நீக்குவதற்கு தேசிய காவல்துறை ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.
இந்த தீர்மானம், அவருக்கு எதிராக ஆணைக்குழுவினால் மேற்கொள்ளப்பட்ட ஒழுக்காற்று விசாரணையின் அடிப்படையில் எடுக்கப்பட்டுள்ளது.
இந்த விசாரணையில், நிலந்த ஜயவர்தன குற்றவாளி என கண்டறியப்பட்டார்.
அதனைத் தொடர்ந்து, தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் தலைவரான லலித் ஏகநாயக்க தலைமையில் நேற்று நடைபெற்ற கூட்டத்தில், அவரை காவல்துறை சேவையிலிருந்து நீக்குவது குறித்து இறுதி முடிவு எடுக்கப்பட்டது.
நிலந்த ஜயவர்தன, ஏப்ரல் 21 பயங்கரவாதத் தாக்குதல் இடம்பெற்ற வேளையில் அரச புலனாய்வு சேவையின் பிரதானியாக பணியாற்றி இருந்தார்.