குற்றப் புலனாய்வுத் துறை (CID) நடத்திய தனித்தனி விசாரணைகளின் அடிப்படையில், முன்னாள் உயர் அரசு அதிகாரிகளான இலங்கை கடற்படையின் முன்னாள் தளபதி அட்மிரல் (ஓய்வு பெற்ற) நிஷாந்த உலுகேதென்ன மற்றும் முன்னாள் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் பிரியந்த ஜெயக்கொடி ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நபர் ஒருவர் காணாமல் போன விவகாரம் தொடர்பாக குற்றப் புலனாய்வுத் துறையினர் நடத்திய விசாரணையின் அடிப்படையில் முன்னாள் கடற்படைத் தளபதி நிஷாந்த உலுகேதென்ன நேற்று கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் இடம்பெற்ற காலப்பகுதியில் சந்தேகநபரான நிஷாந்த உலுகேதென்ன கடற்படையின் புலனாய்வு பிரிவின் பிரதானியாக செயற்பட்டதுடன் கடத்தப்பட்ட நபர் தடுத்து வைக்கப்பட்டிருந்ததாக கூறப்படும் சட்டவிரோத தடுப்பு முகாம் அவரது கண்காணிப்பில் செயற்பட்டுள்ளமை பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
கடத்தப்பட்ட நபர் பல நாட்களுக்கு பின்னர் சட்டவிரோத தடுப்பு முகாமிலிருந்து அனுப்பிய கடிதத்தை அடிப்படையாகக் கொண்டு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.
நிஷாந்த உலுகேதென்ன கைது செய்யப்பட்டு பொல்கஹவெல நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட பின்னர், ஜூலை 30 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.
இதற்கிடையில், முன்னாள் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் பிரியந்த ஜயகொடி குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினரால் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.
‘கெஹெல் பத்தர பத்மே’ என்ற ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல் தலைவர் தனக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக கூறி குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் பொய்யான முறைப்பாட்டை அளித்த சம்பவம் தொடர்பாக அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இன்று அவரை மஹர நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது.
இந்த இரண்டு சம்பவங்கள் குறித்தும் குற்றப் புலனாய்வுத் துறை அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.