காசாவில் இப்போது இஸ்ரேல் மீண்டும் தாக்குதலைத் தீவிரப்படுத்தியுள்ளது. காசாவை முழுமையாகக் கட்டுப்படுத்த இஸ்ரேல் தாக்குதல்களை நடத்தி வருகிறது.
அதன்படி காசா நகரில் உள்ள அல்-ஷிஃபா மருத்துவமனை அருகே இஸ்ரேல் மிகப் பெரிய தாக்குதல் ஒன்றை நடத்தியுள்ளனர்.
அதில் சர்வதேச ஊடகமான அல்ஜசீராவில் வேலை செய்யும் ஐந்து பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இந்தச் சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்துவதாக இருக்கிறது.
உயிரிழந்த செய்தியாளர்கள் அனாஸ் அல்-ஷெரிஃப், முகமது குரேய்கே மற்றும் ஒளிப்பதிவாளர்கள் இப்ராஹிம் ஜாஹர், மொமென் அலிவா, முகமது நௌஃபால் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
அல்-ஷிஃபா மருத்துவமனையின் பிரதான வாயிலுக்கு வெளியே ஊடகங்களுக்குக் கூடாரம் ஒன்று அமைக்கப்பட்டிருந்தது. அந்தக் கூடாரத்தில் செய்தியாளர்கள் இருந்த நிலையில், அங்குத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த மோசமான தாக்குதலில் தான் 5 செய்தியாளர்கள் உட்பட ஏழு பேர் கொல்லப்பட்டுள்ளனர். இந்தச் சம்பவம் அங்குப் பதற்றத்தை அதிகரிப்பதாகவே இருக்கிறது.
இந்நிலையில் 28 வயதே ஆன அல் ஜஸீரா செய்தியாளர் அனஸ் கொல்லப்படுவதற்கு ஒரு மணி நேரத்துக்கு முன்பு, தங்களது முகாமுக்கு அருகே இஸ்ரேல் நடத்திய மிகத் தீவிரமான குண்டுவீச்சுகளின் விடியோக்களை பகிர்ந்திருந்தார்.