காசா மோதலின் போது ஊடகவியலாளர்கள் கொல்லப்படுவதையும் பலஸ்தீனக் குரல்கள் அடக்கப்படுவதையும் இலங்கையின் சுதந்திர ஊடக இயக்கம் (FMM) வன்மையாகக் கண்டித்துள்ளது.
காசா நகரத்தின் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஐந்து அல் ஜசீரா பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டதைக் கண்டித்து FMM அறிக்கை வெளியிட்டுள்ளது. அல்-ஷிஃபா மருத்துவமனை அருகே சமீபத்தில் நடந்த தாக்குதலைச் செய்தி சேகரிப்பதற்காக சென்ற போது கொல்லப்பட்ட ஊடகவியலாளர்களில் பிரபல ஊடகவியலாளர் அனஸ் அல்-ஷெரிபும் அடங்கியிருந்தார்.
விமர்சன அறிக்கையிடலை முடக்குவதை நோக்கமாகக் கொண்ட “வேண்டுமென்றே மேற்கொள்ளப்பட்ட, முன்கூட்டியே திட்டமிடப்பட்ட” செயல் என இந்தத் தாக்குதலை FMM விவரித்துள்ளது.
இத்தகைய தாக்குதல்கள் பத்திரிகை சுதந்திரத்தை மீறுவதாகவும், காசாவில் மனிதாபிமான நெருக்கடி குறித்த முக்கியமான தகவல்களை உலகிற்குப் பகிர்வதை தடுப்பதாக அமைவதாகவும் அந்த அமைப்பு ஆழ்ந்த கவலையை வெளிப்படுத்தியுள்ளது.
பத்திரிகையாளர்கள் கொல்லப்படுவதும் ஊடகவியலாளர்கள் குறிவைக்கப்படுவதும் மிகக் கடுமையான வார்த்தைகளில் கண்டிக்கப்பட வேண்டும் என்றும் அது எச்சரித்துள்ளது..
பத்திரிகையாளர்களைப் பாதுகாப்பதற்கான குழுவின் (CPJ) கூற்றுப்படி, அக்டோபர் 2023 முதல் பாலஸ்தீனத்தில் 186 பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர். மோதலைச் செய்தி சேகரிக்கும் போது BBC, Associated Press, Agence France-Presse போன்ற சர்வதேச ஊடக நிறுவனங்கள் அழுத்தங்களுக்கு அல்லது தணிக்கைக்கு உட்படுத்தப்பட்ட சமீபத்திய சம்பவங்களையும் FMM குறிப்பிட்டுக் காட்டியுள்ளது.
பலஸ்தீன பத்திரிகையாளர்களுடனான தனது நட்புறவையும், கருத்துச் சுதந்திரத்திற்கான உரிமையைப் பாதுகாப்பதற்கான அதன் உறுதிப்பாட்டையும் மீண்டும் வலியுறுத்திய சுதந்திர ஊடக இயக்கம், ஊடகக் குரல்களை அடக்குவது பாலஸ்தீன மக்களுக்கு எதிரான “இனப்படுகொலை” யாக விவரிக்கப்படுபவற்றின் யதார்த்தங்களை மறைக்கும் பரந்த முயற்சியின் ஒரு பகுதியாகும் எனவும் குறிப்பிட்டுள்ளது. .