முஸ்லிம் சிவில் அமைப்புகளுக்கும் அரசாங்கத் தரப்புக்கும் இடையிலான மூன்றாவது சுற்று சந்திப்பு திட்டமிட்டபடி செவ்வாய்க்கிழமை (26) நடைபெற்றது.
இந்தச் சந்திப்பில் 15 சிவில் அமைப்புக்களைச் சேர்ந்த 30 பேர் முஸ்லிம்கள் சார்பில் கலந்து கொண்டுள்ளனர்.
அமைச்சர் விஜித ஹேரத்தின் தலைமையில் அவரது வெளிநாட்டமைச்சு அலுவலகத்தில் நடைபெற்ற இந்தச் சந்திப்பில் அரச தரப்பிலிருந்து பிரதி அமைச்சர் முனீர் முழப்பர், பாராளுமன்ற உறுப்பினர்களான முஹம்மது அஸ்லம், அர்கம் இல்யாஸ், பஸ்மின் க்ஷரீப் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை நடைபெறும் இந்தச் சந்திப்பில் கடந்த சந்திப்பின் போது பேசப்பட்ட பல விடயங்கள் பல இந்தச் சந்திப்பிலும் மீட்டப்பட்டுள்ளன.
மஹர சிறைச்சாலை பள்ளிவாசல் விவகாரம் தொடர்பில் இந்த முறையும் பேசப்பட்ட போது, அதற்கு மாற்றீடாக காணி ஒதுக்கித் தருவதற்கு அரசாங்கம் தயாராக இருப்பதாகவும், ஊர் மக்களிடம் இருந்து கோரிக்கையை எதிர்பார்த்திருப்பதாகவும் அரச தரப்பிலிருந்து சொல்லப்பட்டது.
ஏக்கல பள்ளிவாசலை மீளத் திறப்பது தொடர்பில் மீண்டும் பேசப்பட்ட போது, அங்கு முஸ்லிம்களே இல்லை, நிர்வாக சபை மட்டுமே இருக்கிறது. அதனால் அங்குள்ள விமானப்படை முகாமிலுள்ளவர்கள் பயன்படுத்தும் வகையில் அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகிறது எனச் சொல்லப்பட்டுள்ளது.
கடந்த சந்திப்பின் போது பேசப்பட்ட ஜனாஸாக்களை பிரேத பரிசோதனை செய்யும் நடைமுறைகள் விவகாரம் தொடர்பில் கருத்து வெளியிட்ட அமைச்சர், இது தொடர்பில் 2023 இல் வெளியிடப்பட்ட சுற்றறிக்கை நைமுறைப்படுத்தப்படாமல் புறக்கணிக்கப்பட்டு வருதாகவும் இன்னும் மூன்று வாரங்களில் பழைய சுற்றறிக்கையை மீண்டும் வெளியிட நடவடிக்கை எடுப்பதாகவும் தெரிவித்தார்.
முஸ்லிம் மாணவத் தாதியர்களின் ஆடை விவகாரம் தொடர்பில் இந்தச் சந்திப்பிலும் ஞாபகப்படுத்தப்பட்ட போது, சுகாதார அமைச்சு மற்றும் திணைக்களங்களுடன் பேசி, பிரச்சினைக்குத் தீர்வு பெற்றுத் தர அரசாங்கம் தொடர்ந்தும் முயற்சி செய்வதாக அரசாங்கத் தரப்பில் சொல்லப்பட்டது.
அல்குர்ஆன் தர்ஜூமா இறக்குமதி தொடர்பில் இந்தச் சந்திப்பின் போதும் பேசப்பட்டது. அதற்குப் பதிலளித்த அமைச்சர், இந்த விவகாரத்தில் அரச தரப்பில் எந்தத் தடையுமில்லை.
இது தொடர்பில் பரிசீலிப்பதற்கு நியமிக்கப்பட்ட 35 பேர் கொண்ட குழுவில் நிலவும் கருத்து முரண்பாடுகளே தாமதத்துக்குக் காரணமாக உள்ளது. உள்ளக முரண்பாடுகளுக்கு அரசாங்கம் பொறுப்பாக முடியாது. முஸ்லிம் சமூகமே அதனைத் தீர்த்துக் கொள்ள வேண்டும் என்றார்.
இம்முறைய சந்திப்பில் சூபி தரப்பிலிருந்து கலந்து கொண்டவர்களால் சில பிரதேசங்களில் மீலாத் விழா நடத்துவதற்கு தடைகள் ஏற்படுத்தப்படுவதாகச் சுட்டிக் காட்டப்பட்ட போது, இது அரசாங்கத் தரப்பால் ஏற்படுத்தப்படும் தடையல்ல, எனவே இதில் அரசாங்கம் தலையிட முடியாது, நீங்களே தீர்த்துக் கொள்ளுங்கள் எனச் சொல்லப்பட்டது.
தப்லீக் ஜமாஅத்தினர் வெளிநாடுகளில் இருந்து வருவதில் வீசா நடைமுறைகளில் உள்ள சிக்கல்கள் தொடர்பிலும் அரசாங்கத்தின் கவனத்துக்குக் கொண்டுவரப்பட்டது.
இதற்குப் பதிலளித்த அமைச்சர் விஜித ஹேரத், இந்த விடயம் மிகவும் சிக்கலானது, இஸ்ரேலியர்களும் சுற்றுலா வீசாவில் நாட்டுக்குள் வந்தே மத நடவடிக்கைகளில் சட்டவிரோதமாக ஈடுபடுகின்றனர்.
எனவே வெளிநாட்டு தப்லீக் ஜமாத்தினருக்கு சுற்றுலா வீசா வழங்குவதை பரீசீலிக்கும் விடயத்தில் அவசரமாகத் தீர்மானம் எடுக்க முடியாது எனத் தெரிவித்தார்.
முஸ்லிம் சிவில் அமைப்புக்கும் அரச தரப்புக்கும் இடையிலான அடுத்த சந்திப்பு ஒக்டோபர் மாதம் நடைபெறும்.