கத்தார் மக்களின் பாதுகாப்புக்கு இஸ்ரேல் படைகளால் அச்சுறுத்தல் ஏற்பட்டிருப்பதாக கத்தார் அரசு எதிர்வினையாற்றியுள்ளது.
கத்தார் தலைநகர் தோஹாவில் இன்று (செப். 9) வான் வழியாக தீவிர தாக்குதல் நடத்தப்பட்டதால் அங்கு பதற்றம் நிலவுகிறது.
இதனையடுத்து, கத்தார் பிரதமருக்கான ஆலோசகரும் அந்நாட்டின் வெளியுறவு விவகார அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளருமான டாக்டர் மாஜெத் அல் அன்சாரி இஸ்ரேலுக்கு கண்டனம் தெரிவித்து வெளியிட்டிருக்கும் அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:
“இஸ்ரேலின் கோழைத்தனமான தாக்குதலுக்கு கத்தார் அரசு கடுமையாக கண்டனம் தெரிவிக்கிறது. தோஹாவில் ஹமாஸ் படையின் அரசியல் பிரிவு தலைமை நிர்வாகிகள் வசிக்கும் குடியிருப்பு கட்டடங்கள் மீதான இஸ்ரேலின் தாக்குதல் கோழைத்தனமானது.
இஸ்ரேலின் இத்தகைய குற்றவியல் செயலானது, அனைத்து சர்வதேச சட்டங்களையும் விதிகளையும் கடுமையாக மீறுவதாக அமைந்துள்ளது. மேலும், இது கத்தார்வாசிகளின் பாதுகாப்புக்கும் தீவிர அச்சுறுத்தல் ஏற்படுத்தியுள்ளது.
கத்தார் பாதுகாப்பு படைகளும் அதிகாரிகளும் இந்தத் தாக்குதலுக்கு உடனடியாக எதிர்வினையாற்றியுள்ளனர். தாக்குதல் நடத்தப்பட்ட பகுதிகளைச் சுற்றி வசிக்கும் மக்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய தேவையான நடவடிக்கைகளை எடுத்துள்ளனர்.
இஸ்ரேலின் இத்தகைய அநாகரிகமான நடவடிக்கையை, கத்தாரின் பாதுகாப்பையும் இறையாண்மையையும் குறிவைக்கும் நடவடிக்கையை கத்தார் பொறுத்துக்கொள்ளவே கொள்ளாது!
பிராந்திய பாதுகாப்பை சிதைக்கும் இச்செயலுக்கு கண்டனம் தெரிவிக்கும் கத்தார், உயர்நிலை அளவில் விசாரணை மேற்கொண்டுள்ளது. அதன்பின், மேலும் கூடுதல் விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும் “ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.