உணவுத் திட்டங்களுக்கு ஆதரவு அளிப்பதற்காக, உலகளாவிய ஆடை வடிவமைப்பு நிறுவனமான மைக்கேல் கோர்ஸ் (Michael Kors), ஐக்கிய நாடுகள் சபையின் உலக உணவுத் திட்டத்திற்கு 2.7 மில்லியன் அமெரிக்க டொலர்களை இலங்கைக்கு ஆதரவாக வழங்கியுள்ளது.
மைக்கேல் கோர்ஸின் நீண்டகால ‘Watch Hunger Stop campaign’ பிரசாரத்தின் மூலம் இந்த நிதி, உலக உணவுத் திட்டத்தின் “வீட்டுப் பயிர் பாடசாலை உணவுத் திட்டத்தை” (Home-Grown School Feeding – HGSF) விரிவுபடுத்துவதற்குப் பங்களிக்கிறது.
இந்த நிதியுதவியின் மூலம், அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு 250,000 சிறுவர்கள் தினசரி சத்தான உணவைப் பெறுவார்கள்.
மேலும், 1,500 உள்ளூர் விவசாயிகள் மற்றும் உணவு வழங்குநர்கள் இத்திட்டத்திற்குப் புதிய மற்றும் உள்ளூரில் விளைந்த விளைபொருட்களை வழங்குவதன் மூலம் பயனடைவார்கள்.
இத்திட்டம் தற்போதுள்ள எட்டு மாவட்டங்களிலிருந்து பத்து மாவட்டங்களுக்கு விரிவுபடுத்தப்பட உள்ளது. 30 பாடசாலைகள் சூரிய சக்தியில் இயங்கும் சமையலறைகளைப் பெறுவதன் மூலம் உள்கட்டமைப்பு மேம்பாட்டைப் பெறும்.
இது செலவுகளைக் குறைப்பதுடன், சுற்றுச்சூழல் மாசுபாட்டைக் குறைத்து, நிலைத்தன்மையை ஊக்குவிக்கும்.
உலக உணவுத் திட்டத்தின் இலங்கைக்கான நாட்டின் பணிப்பாளரான பிலிப் வார்ட், “இலங்கையின் பாடசாலை உணவுத் திட்டத்தை மேம்படுத்துவதில் மைக்கேல் கோர்ஸின் அர்ப்பணிப்பு மற்றும் கூட்டுப் பங்களிப்பை நாங்கள் ஆழமாகப் பாராட்டுகிறோம்” என்று தெரிவித்துள்ளார்.
பசியுடன் போராடும் பகுதிகளில் உள்ள சிறுவர்களுக்கு பாடசாலையில் உணவளிக்க வேண்டும் என்ற நோக்குடன் 2013 ஆம் ஆண்டு முதல் மைக்கேல் கோர்ஸ் உலக உணவுத் திட்டத்துடன் இணைந்து செயல்பட்டு வருகிறது.
