இலங்கைக்கு வடக்கே குறைந்த அழுத்தம்: நாட்டின் பல பகுதிகளில் மழை

Date:

இலங்கையின் வடக்கு கரையோரப் பகுதியை அண்டியதாக நிலை கொண்டுள்ள குறைந்த அழுத்த பிரதேசம் மேலும் வலுவடைந்து மேற்கு – வடமேற்குத் திசையில் நகரக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக, வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

அது இன்று (22) மாலையளவில் வட தமிழ்நாடு மற்றும் தென் ஆந்திரப் பிரதேச கரையோரப் பிரதேசங்களுக்கு மேலாக ஒரு தாழமுக்கமாக விருத்தியடையக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

இத்தொகுதியின் தாக்கம் காரணமாக இன்றையதினம் (21) நாட்டின் மேல், சப்ரகமுவ, வடமேல் மற்றும் தென் மாகாணங்களிலும் யாழ்ப்பாணம் மற்றும் மன்னார் மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

இப்பிரதேசங்களில் சில இடங்களில் 75 மி.மீ அளவான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுவதாக திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பி.ப. 1.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகளிலும் மேல், வடக்கு, வடமத்திய, வடமேல் மற்றும் தென் மாகாணங்களிலும் திருகோணமலை மாவட்டத்திலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 30-40 கிலோ மீற்றர் வரையான வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசக் கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

மழையுடன் கூடிய தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் காரணமாக ஏற்படும் ஆபத்துகளைக் குறைக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

மேற்படி தாழமுக்க நிலை தொடர்பில் நாட்டைச் சூழவுள்ள ஆழம் கூடிய மற்றும் ஆழம் குறைந்த கடற்பரப்புகளில் கடல்சார்ந்த நடவடிக்கைகளில் ஈடுபடுவோரும் கடலில் பயணம் செய்வோரும் மீனவ சமூகமும் இவ்விடயம் தொடர்பாக அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

திருகோணமலையிலிருந்து காங்கேசந்துறை, மன்னார், கொழும்பு, காலி மற்றும் அம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

 

நாட்டைச் சூழவுள்ள ஏனைய கடற்பரப்புகளில் பல இடங்களில் மழை, இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

 

நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது தென்மேற்கு திசையிலிருந்து அல்லது மாறுபட்ட திசைகளிலிருந்து வீசக் கூடிய சாத்தியம் காணப்படுவதுடன், காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 30-40 கிலோ மீற்றர் வரை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Popular

More like this
Related

நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகள் அதிகரிப்பு

இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் இன்று (21) நள்ளிரவு 12.00 மணி முதல்...

உலக நாடுகளின் எரிபொருள் விலையேற்றம்

அண்மையில் வெளியான உலக எரிபொருள் விலையேற்றத்திற்கமைய பல நாடுகளில் 20 வீதத்திற்கும்...

இலங்கைக்கான சவூதி அரேபியத் தூதுவரின் பெருநாள் வாழ்த்துச் செய்தி

புனித ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாளை முன்னிட்டு, இலங்கைக்கான சவூதி அரேபியத்...

ஜனாதிபதியின் ஈகைத் திருநாள் வாழ்த்துச் செய்தி!

உலகெங்கிலும் உள்ள முஸ்லிங்கள் ஒரு மாதம் முழுவதும் நோன்பு நோற்று, அதன்...