அமெரிக்க நாடாளுமன்றத்தில் அரசு நிர்வாகத்துக்கு நிதி ஒதுக்கும் செலவீனங்கள் தொடர்பான மசோதாவுக்கு ஒப்புதல் கிடைக்கவில்லை.
இதன்காரணமாக, அத்தியாவசியப் பணிகளை மேற்கொள்ளும் ஊழியர்களைத் தவிர, மற்ற அரசு ஊழியர்கள் அனைவரும் கட்டாய விடுப்பில் அனுப்பப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.
அமெரிக்காவின் செலவீனங்கள் தொடர்பான மசோதாவை அந்நாட்டு நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்து ஒப்புதல் பெற்றால் மட்டுமே அடுத்த ஆண்டுக்கான அரசின் செலவீனங்களுக்கு நிதி அங்கீகரிக்கப்படும்.
இந்த நிலையில், அமெரிக்காவின் மேலவையில் செலவீனங்களுக்கான மசோதா தாக்கல் செய்யப்பட்டு தோல்வி அடைந்துள்ளது.
மசோதாவுக்கு ஆதரவாக 55% வாக்குகளும், எதிராக 45% வாக்குகளும் பதிவாகியுள்ளன. இந்த மசோதா நிறைவேற 60% வாக்குகள் தேவை.
எதிர்க்கட்சியான ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த உறுப்பினர்கள் மசோதாவுக்கு எதிராக வாக்களித்துள்ள நிலையில், அமெரிக்க அரசு நிர்வாகம் முடங்கியுள்ளது.
இதனால், அமெரிக்க நேரப்படி புதன்கிழமை ( 1) நள்ளிரவு 12.01 மணிமுதல், அத்தியாவசியமற்ற அனைத்து சேவைகளும் நிறுத்தப்படும். விமானப் போக்குவரத்து தொடங்கி சிறு வணிக கடன் அலுவலகங்களை வரை அனைத்தும் பாதிக்கப்படும்.
இந்த மசோதா நிறைவேறாததால், அத்தியாவசியமற்ற பணிகளில் இருக்கும் அரசு ஊழியர்கள் 7.50 இலட்சம் பேர் கடுமையாக பாதிப்படுவார்கள். இவர்களை டிரம்ப் அரசு பணிநீக்கம் செய்யும் அல்லது கட்டாய விடுப்பில் அனுப்பும். பல அலுவலகங்கள் நிரந்தரமாக மூடக்கூடும்.
கல்வி மற்றும் சேவைத் துறைகளைச் சார்ந்த 90 சதவிகித அரசு ஊழியர்கள் கட்டாய விடுப்பில் அனுப்பப்படுவார்கள்.
இராணுவ வீரர்கள், எல்லைப் பாதுகாப்பு முகமை அதிகாரிகள், விமானக் கட்டுப்பாட்டு மைய ஊழியர்கள் உள்ளிட்டோர் அத்தியாவசியப் பணியாளர்களாக கருதப்படுவர். இவர்கள் தங்களின் பணிகளை தொடர்ந்து செய்வார்கள்.
இருப்பினும், செலவீன மசோதா நிறைவேறும் வரை இவர்களுக்கு ஊதியம் வழங்கப்படாது.
ஏழை மக்களுக்கு செயல்படுத்தப்பட்டு வரும் சமூக நலத் திட்டங்கள் மற்றும் மருத்துவக் காப்பீட்டு நிதி உள்ளிட்டவை தொடர்ந்து வழங்கப்படும்.
ஜனநாயகக் கட்சியினரும் வாக்களித்தால் மட்டுமே செலவீனங்களுக்கான மசோதாவை டிரம்ப் அரசால் நிறைவேற்ற முடியும்.
இந்த நிலையில், செலவீன மசோதாவில் அதிபருக்கு அளிக்கப்பட்டுள்ள கூடுதல் அதிகாரத்தை நீட்டிக்கக் கூடாது என்று ஜனநாயகக் கட்சியினர் வலியுறுத்தி வருகின்றனர்.
மேலும், ஏழை மக்களுக்கு மருத்துவக் காப்பீட்டு மானியம் வழங்கும் சட்ட மசோதா இந்தாண்டுடன் நிறைவுபெறுகிறது. இதனை நீட்டிக்க ஜனநாயகக் கட்சியினர் வலியுறுத்திய நிலையில், டிரம்ப் ஏற்றுக் கொள்ளவில்லை. இதன்காரணமாக செலவீன மசோதாவை தோல்வியடைய செய்துள்ளனர்.