டெல்லி குண்டு வெடிப்பு: வெளிப்படையான, உயர் மட்ட விசாரணை நடத்தப்பட வேண்டும்- ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் அகில இந்தியத் தலைவர் வேண்டுகோள்

Date:

செங்கோட்டை வெடிச் சம்பவம் குறித்து வெளிப்படையான விசாரணை தேவை. குற்றவாளிகள் தண்டிக்கப்படவேண்டும் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு தரப்பட வேண்டும் என்று ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் அகில இந்திய தலைவர் சையத் சஆதத்துல்லாஹ் ஹுசைனி  வேண்டுகோள் விடுத்துள்ளார்.

டெல்லியில் செங்கோட்டைக்கு அருகில் நடந்த பயங்கர வெடிச் சம்பவம் குறித்து ஜமாஅத் தலைவர் ஆழ்ந்த வேதனையைத் தெரிவித்துள்ளார்.

மேலும் இந்தத் துயரச் சம்பவம் குறித்து வெளிப்படையான, உயர் மட்ட விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் பாதுகாப்புக் குறைபாடுகளுக்குக் காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் பாதிக்கப்பட்டவர்களுக்கும் அவர்களின் குடும்பத்தாருக்கும் தக்க இழப்பீடு தரப்பட வேண்டும் என்றும் ஜமாஅத் தலைவர் வலியுறுத்தியிருக்கின்றார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில்,

‘டெல்லியில் திங்கள் மாலையில் செங்கோட்டைக் அருகில் நடந்த ஆட்கொல்லி வெடிச் சம்பவத்தில் விலைமதிப்பற்ற உயிர்களை இழந்திருக்கின்றோம். ஏராளமானோர் காயமுற்றிருக்கின்றார்கள்.

இது மிகுந்த வேதனையைத் தருகின்றது. இதயத்துக்கினியவர்களை இழந்து தவிக்கும் மக்களுக்கு எம்முடைய ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவிக்கின்றோம். காயமுற்றோரின் துயர் துடைப்பதில் பக்கபலமாக நிற்கின்றோம்.

அவர்கள் மிக வேகமாகயும் முழுமையாகவும் குணமடைவதற்காகவும் பிரார்த்திக்கின்றோம். இந்தத் துயரமும் துக்கமும் கவலையும் நிறைந்த இந்தத் தருணத்தில் தில்லி வாழ் மக்களோடு நாங்கள் நிற்கின்றோம்.

‘இது பயங்கரவாதச் செயலாக இருக்கும் என தொடக்கக்கட்ட ஊடகச் செய்திகள் சொல்கின்றன.

விசாரணை ஏஜென்சிகள் இதனை உறுதிப்படுத்துமேயானால் இந்தக் கொடூரமான நிகழ்வை நாங்கள் கண்டிக்கின்றோம். வெகுவிரைவாக குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு நீதி நிலைநிறுத்தப்பட வேண்டும் என்றும் கோருகின்றோம். நாட்டின் தலைநகரத்தில் இது போன்ற நிகழ்வுகள் நடப்பது பாதுகாப்புக் குறைபாட்டைத்தான் வெளிப்படுத்துகின்றது.

மக்களின் பாதுகாப்புக்குப் பொறுப்பானோர் பதில் சொல்லக் கடமைப்பட்டவர்களாவர். நாட்டு குடிமக்களின் வாழ்வும் பாதுகாப்பும் மிக மிக இன்றியமையாததவை. அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்கின்ற பொறுப்பை அரசாங்கம் நிறைவேற்ற வேண்டும்’ என்றும் ஜமாஅத் தலைவர் குறிப்பிடடிருக்கின்றார்.

‘ஊடகங்களின் ஒரு குறிப்பிட்ட சாராரும் சமூக ஊடகத்தார் சிலரும் இந்த நிகழ்வு தொடர்பாக தவறான தகவல்களையும் மதரீதியான நரேட்டிவ்களையும் பரப்புவதில் ஈடுபட்டிருக்கின்றார்கள். அவர்களின் இந்தப் பொறுப்பற்ற நடத்தையை ஜமாஅத் தலைவர் கண்டித்தார்.

‘இது போன்ற நெருக்கடியான நேரங்களில்தான் நாட்டு மக்கள் மத்தியில் ஒற்றுமையையும் கட்டுக்கோப்பையும் கட்டிக்காப்பது மிகவும் அவசியமாகின்றது.

இந்த மாதிரியான ஈனத்தனமான நிகழ்வுகளை தங்களின் சித்தாந்தங்களைப் பரப்புவதற்காகவும் அற்ப அரசியல் ஆதாயங்களுக்காகவும் பயன்படுத்த முயல்பவர்கள் அடையாளம் காணப்பட வேண்டும்.

சட்டத்தின் ஒளியில் அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்’ என்றும் ஜமாஅத் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.

‘இந்த வெடிச் சம்பவம் குறித்து முழுமையான, வெளிப்படையான, குறித்த நேரத்துக்குள்ளான விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும்.

எந்தப் பக்கச்சார்பும் இல்லாமல் எல்லா சான்றுகளும் ஆய்வு செய்யப்படுவதை உறுதி செய்ய வேண்டும். விசாரணை முடிவுகளை மக்கள் மன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.உயிரிழந்தோரின் குடும்பத்தாருக்கு பொருத்தமான இழப்பீடு உடனடியாக வழங்கப்பட வேண்டும்’ என்றும், ‘காயமுற்றோருக்கு மருத்துவ உதவி, வாழ்வாதார உதவி என அனைத்தையும் தழுவிய உதவிகள் தரப்பட வேண்டும்’ என்றும், ‘குற்றவாளிகளுக்குக் கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும்; உயர் மட்ட அளவில் பாதுகாப்புக் குறைபாட்டுக்குக் காரணமானோர் பதில் சொல்லக் கடமைப்பட்டிருக்கின்றார்கள்’ என்றும் ஜமாஅத் தலைவர் அறிவுறுத்தினார்.

‘பயங்கரவாதத்தை எந்தவொரு மதத்தோடும் சேர்க்க ஐடயாது. அது ஒரு துரோகச் செயலாகும். எந்தக் கொடியின் கீழ் எந்தவொரு வன்செயல் நிகழ்த்தப்பட்டாலும் திட்டவட்டமான கண்டனத்துக்கு உரியவையே.

தீவிரவாதப் போக்குக்கு எதிராகவும் வெறுப்பை ஒதுக்கித் தள்ளுவதற்காகவும், பயங்கரவாதச் செயல்களுக்குக் காரணமாக இருப்பவற்றை வேரறுப்பதற்காகவும் அனைத்து மதங்களைச் சேர்ந்தவர்களும் ஒன்று சேர்ந்து இயங்க வேண்டிய தருணம் இது. ஒன்றுபட்ட சமூகத்தால்தான் நாட்டின் பன்மைத்தன்மையும், அமைதியும், எதிர்காலமும் பாதுகாக்கப்பட முடியும்’ என்றும் ஜமாஅத் தலைவர் தெரிவித்தார்.

Popular

More like this
Related

6 ஆம் வகுப்பு ஆங்கில பாடத்திட்டம் 2027 க்கு ஒத்திவைக்கப்பட்டது!

தற்போதைய கல்வி சீர்திருத்த செயல்முறையின் 6 ஆம் வகுப்பு ஆங்கில தொகுதியை...

5ம் ஆண்டு புலமைப்பரிசில் மாணவர்களுக்கு அறிவித்தல்

2025 ஆம் ஆண்டின் தரம் 5 புலமைப் பரிசில் பெறுபேறுகளுக்கமைய பாடசாலைகளில்...

நாடு திரும்பும் அமெரிக்கத் தூதுவர் ஜூலி சாங் ஜனாதிபதியுடன் சந்திப்பு!

இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவராக தனது இராஜதந்திர சேவையை நிறைவு செய்துவிட்டு, ஜனவரி...

பிரபல ஊடகவியலாளர் இக்பால் அதாஸ் மரணம்.

பிரபல ஊடகவியலாளர் இக்பால் அதாஸ் இயற்கை எய்தியுள்ளார். 81 வயதான அவர்...