உள்நாட்டு இறைவரித் திணைக்களம் (IRD) இந்த ஆண்டு அதன் வரலாற்றில் மிக உயர்ந்த வரி வருவாய் வசூலை அடைந்துள்ளது.
அதன்படி நவம்பர் 17 ஆம் திகதி நிலவரப்படி, இறைவரித் திணைக்களத்தின் மொத்த வருவாய் வசூல் சுமார் 2,002 பில்லியன் ரூபாவாக உள்ளதாக திணைக்களம் தெரிவித்துள்ளது.
2024 ஆம் ஆண்டில் இறைவரித் திணைக்களம் 1,942,162 மில்லியன் ரூபா வரிகளை வசூலித்துள்ளது.
இந்த நிலையில் கடந்த திங்கட்கிழமை நிலவரப்படி, இந்த ஆண்டுக்கான மொத்த வருவாய் வசூல் 2,002,241 மில்லியன் ரூபாவாக உள்ளது.
2024 ஆம் ஆண்டின் மொத்த வருவாயுடன் ஒப்பிடும்போது இது 60,079 மில்லியன் ரூபா அதிகமாகும்.
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள இறைவரித் திணைக்களத்தின் ஆணையாளர் ஜெனரல் ஆர்.பி.எச். பெர்னாண்டோ, 2,002 பில்லியன் ரூபாவுக்கும் அதிகமான வரிகளை வசூலிப்பதன் மூலம் அரசாங்கத்தின் நிதி நிலையை வலுப்படுத்துவதில் திணைக்களம் கணிசமான பங்களிப்பைச் செய்துள்ளது என்றார்.
இதற்கிடையில் கடந்த வாரம் இலங்கை சுங்கத் திணைக்களம், 2025 ஆம் ஆண்டுக்கா நிர்ணயிக்கப்பட்ட 2,115 பில்லியன் ரூபா வாருவாய் இலக்கினை விஞ்சியுள்ளதாக அறிவித்தது.
அதன்படி, நவம்பர் 12 ஆம் திகதி நிலவரப்படி, 2025 ஆம் ஆண்டுக்கான வருவாய் 2,117.2 பில்லியன் ரூபாவை இலங்கை சுங்கத் திணைக்களம் ஈட்டியுள்ளது.
