வடக்கு முஸ்லிம்களின் வெளியேற்றத்தின் 35ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்புக் குழு விடுத்துள்ள அறிக்கை.

Date:

வடக்கு முஸ்லிம்களின் வெளியேற்றத்தின் 35ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்புக் குழு விடுத்துள்ள அறிக்கை பின்வருமாறு,

இலங்கையின் வடக்கு கிழக்கு பிரதேசங்கள் தமிழ் மக்களுக்குப் போன்றே இங்குள்ள முஸ்லிம் மக்களுக்கும் பாரம்பரிய வாழ்விடமாகும். வரலாற்று ரீதியாக இரு இனங்களும் (மதங்கள், கலாச்சார நடைமுறைகள் வேறுபட்டிருப்பினும்) தமிழ் மொழியை தாய்மொழியாகக் கொண்டு வாழ்ந்து வருகின்றனர். இது வடக்கு கிழக்கு பிரதேசத்தின் கலாசார பன்முகத்தன்மையின் சிறப்பம்சமாகும்.

இலங்கை அரசின் தமிழர் மீதான இனவாத அடக்குமுறையும், அதற்கெதிராக வடக்கு கிழக்கு தமிழ் மக்கள் மேற்கொண்ட போராட்டங்களும், இலங்கை அரசின் தொடர்ச்சியான உரிமை மறுப்புகளும், இறுதியில் தமிழ் மக்கள் தனியரசு அமைக்கும் அரசியல் தீர்மானத்தை மேற்கொள்ளும் நிலையை உருவாக்கியது (1976 வட்டுக் கோட்டை தீர்மானம்).

மறுபுறம், தமிழ் தேசிய விடுதலைக்கான ஆயுதப் போராட்டம் தோற்றம் பெற்று 1983களுடன் தீவிரமடைந்தது. இக்காலப் பகுதியில் பிரதானமான விடுதலைப் போராட்ட அமைப்புகள் ஐந்தும் இன்னும் பல ஆயுத அமைப்புகளும் இயங்கி வந்தன.

முஸ்லிம் மக்களும் தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்டத்துக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் ஆதரவு வழங்கினர். முஸ்லிம் இளைஞர்கள் சில பிரதான தமிழ் போராட்ட அமைப்புகளில் முக்கிய பங்கு வகித்தனர். முஸ்லிம் இளைஞர்கள் தமிழ் தேசிய விடுதலைக்காக உயிர்த்தியாகம் செய்துள்ளதை வரலாறு மறக்காது.

மறுபுறம், குறிப்பாக கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம் மக்களை சில தமிழ் ஆயுத அமைப்புகள் துன்புறுத்தத்தொடங்கின.

தமிழ் – முஸ்லிம் உறவுகளில் பிளவு ஏற்படலானது. முரண்பாடுகள் வளர்ந்து தமிழ் முஸ்லிம் உறவு பகைமை உறவானது. எனினும், வட மாகாண முஸ்லிம் மக்களின் இயல்பு வாழ்வு பாதிக்கப்படவில்லை. தமிழ் – முஸ்லிம் உறவும் சுமுகமாகவே இருந்தது.

இந்த நிலையில், 1990ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் அச்சமயம் யாழ் மாவட்டத்தை தமது கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருந்த தமிழீழ விடுலைப்புலிகள் வடமாகாண முஸ்லிம் மக்களை இரண்டு மணித்தியாலங்களுக்குள் வெளியேறுமாறு கட்டளை பிறப்பித்தனர்.

தமது பாரம்பரிய வாழ்விடத்தை, இருப்பிடங்களை, சொத்துக்களை, வாழ்வாதாரங்களை கைவிட்டு “சொப்பிங்” பையில் உடைகளுடன் வடமாகாணத்திலிருந்து வெளியேறினர்.

அவர்களின் சொத்துக்கள் சூரையாடப்பட்டன. இந்த துயரம் நடந்து இவ்வருடத்துடன் 35 வருடங்களாகிறது.

வட மாகாண முஸ்லிம் மக்கள் வலிந்து வெளியேற்றப்பட்டமை சர்வதேச மனித உரிமைகள் நியமங்களுக்கு அமைய ஒரு “பாரிய மனித உரிமை மீறலாகும்” (Gross Human Rights Violation) (Commission of Human Rights, Resolution 1993/77).

இந்த மனித உரிமை மீறல் நடைபெறுகையில் தமிழ் சமூகம் அமைதியாயிருந்தது. அந்த வகையில் தமிழ் மக்கள் ஒரு சமூகமாக இதற்கு பொறுப்பேற்க வேண்டியவர்களாக உள்ளனர்.

தமிழ் முஸ்லிம் உறவை மீள கட்டியெழுப்பும் கடப்பாடு தமிழர்களுக்கு உள்ளது. அதன் முதற்படி தமிழர்கள் முஸ்லிம்களிடம் அரசியல் மன்னிப்பு கோருவதாகும். வட மாகாண முஸ்லிம் மக்கள்

வலிந்து வெளியேற்றப்பட்டதற்காக பிற்காலத்தில் விடுதலைப்புலிகள் அவர்களிடம் மன்னிப்புக் கோரியிருந்தாலும், தமிழ் மக்களான நாம் முறையான அரசியல் மன்னிப்பைக் கோருவது எமது வரலாற்றுக் கடமையாகும்.

மன்னிப்பு கோரல் நல்லிணக்கத்துக்கும் சகவாழ்வுக்கும் அடிப்படையாகும். குற்றமிழைத்த தரப்பு பாதிக்கப்பட்ட தரப்பினரிடம் மன்னிப்பு கோருவதும் மனம் வருந்துவதும் அவர்களின் அரசியல், சமூகக் கடமையாகும். மறுபுறம், பாதிக்கப்பட்டோர் தமக்கு தவறிழைத்தவர்கள் மன்னிப்பு கோர வேண்டும் என எதிர்பார்ப்பது பாதிக்கப்பட்டோரின் உரிமையாகும்.

ஜனநாயக அரசியல் சூழலை உருவாக்குவதற்காகவும், சமூக மாற்றங்களுக்காகவும் செயற்படும் சிவில் அமைப்புகள், சமூக இயக்கங்கள் மற்றும் அறிவுத்துறையினர் தாம் சார்ந்த சமூக மற்றும் அரசியல் தரப்பினரால் சக சமூகங்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்காக மன்னிப்பு கோரியதை முரண்பாடுகளினால் பாதிக்கப்பட்ட பல்வேறு நாடுகளிலும் காண முடிகிறது. “அரசியல் மன்னிப்புக் கோரல்” என்பது நாகரீக மக்கள் சமூகங்களின் பண்பாகும்.

சேர்பியா, கனடா, நியுசிலாந்து, அவுஸ்திரேலியா, ஜப்பான் போன்ற அரசுகளின் தலைவர்களும் மக்களும் தமது தரப்பினரால் கடந்த காலத்தில் உரிமை மீறல்களை எதிர்கொண்ட மக்கள் சமூகங்களிடம் அரசியல் மன்னிப்பு கோரியதை சிறந்த வரலாற்று முன்மாதிரியாகக் கொள்ள முடியும்.

அரசியல் மன்னிப்புக் கோரலுடன் பாதிக்கப்பட்டோரின் உரிமைகளை மதித்து ஏற்பதும், மீள நிகழாமையை உறுதிப்படுத்துவதும் அடங்கியுள்ளது. அது மட்டுமல்ல, பாதிக்கப்பட்டத் தரப்பினர் எந்தவிதமான அச்ச உணர்வுமின்றி, சுதந்திரமான வாழ்க்கையை வாழ முடியும் எனும் நம்பிக்கையை ஊட்டுவதற்கும் அரசியல் மன்னிப்புக் கோரல் அவசியமாகும்.

வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்புக் குழுவினரான நாங்களும், எம்மோடு இணைந்து செயற்படும் மனித உரிமை செயற்பாட்டாளர்கள், சமூக அமைப்புகள் மற்றும் அறிவுஜீவிகள் ஒன்றிணைந்து தமிழ் சமூகத்தின் சார்பில், வலிந்து வெளியேற்றப்பட்ட வடமாகாண முஸ்லிம் மக்களிடம் பொதுவெளியில் மன்னிப்பு கோருகிறோம்.

ஒரு தலைமுறை கடந்தாயினும், இரண்டாம் தலைமுறையினரான நாங்கள் பாதிக்கப்பட்ட முஸ்லிம் மக்களிடம் மன்னிப்பு கோருவதை எமது வரலாற்றுக் கடமையாகக் கருதுகிறோம்.

அத்துடன், வடமாகாண முஸ்லிம் மக்களின் முறைாயன மீள்குடியேற்றம், இழப்பீடு, பொருளாதார முன்னேற்றம், அரசியல் மற்றும் கலாசார மேம்பாடு, நினைவேந்தல்கள் ஆகியவற்றுக்காக அவர்களுடன் இணைந்து பரிந்துரைகளை மேற்கொள்வதை எமது கடமையாகக் காண்கிறோம்.

தமிழ் அரசியல்வாதிகள், தமிழ் அரச அதிகாரிகள், தமிழ் அறிவுத்துறையினர் மற்றும் ஊடகவியலாளர்கள் அனைவரும் இந்த பயணத்தில் கைகோர்ப்பது அவசியமாகும். இது தமிழர்கள் முஸ்லிம்களுக்கு ஆற்ற வேண்டிய வரலாற்றுக் கடமையாகும்.

வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்புக் குழு
இலங்கை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular

More like this
Related

2025 இல் இலங்கை இறக்குமதி செய்துள்ள வாகனங்களின் விபரம்!

இந்த ஆண்டு இதுவரை இலங்கை 220,000 க்கும் மேற்பட்ட வாகனங்களை இறக்குமதி...

பெரும்பாலான பிரதேசங்களில் பிரதானமாக மழையற்ற வானிலை

இன்றையதினம் (04) நாட்டின் சப்ரகமுவ, மத்திய, ஊவா, வடக்கு மாகாணங்களிலும் திருகோணமலை...

தலைமுறை அடிப்படையில் புகையிலைக்கு தடை விதித்த மாலைதீவு

மாலைதீவு நாட்டில் 2007 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதலாம் திகதி...

இஸ்ரேலில் இருந்து 45 பலஸ்தீனர்கள் உடல்கள் ஒப்படைப்பு!

ஹமாஸிடமிருந்து 3 இஸ்ரேலிய பணயக் கைதிகள் உடல்கள் ஒப்படைக்கப்பட்டதைத் தொடர்ந்து, இஸ்ரேல்...