கல்வி என்பது எமது வாழ்க்கையை வளப்படுத்தும் ஓர் ஊடகமே அன்றி, அது ஓர் ஆயுதம் அல்ல என முன்னாள் அதிபரும் கல்வியியலாளரும் உளவளத்துறை ஆலோசகருமான முஸ்தபா அன்ஸார் தெரிவித்தார்.
கஹட்டோவிட்டாவில் அமைந்துள்ள கல்விக்கும் அபிவிருத்திக்குமான அல் இமாம் ஷாபிஈ நிலையம் வசதி குறைந்த மாணவர்களுக்கு வருடாந்தம் கற்றல் உபகரண பொதிகளை விநியோகம் செய்து வருகின்றது.
இந்தவகையில் இவ்வருடத்துக்கான கற்றல் உபகரண பொதிகள் விநியோக நிகழ்வு நேற்று முன்தினம் (24) ஷாபிஈ நிலைய கேட்போர்கூடத்தில் நடைபெற்றது.
இதில், கமுரகல்ல சிங்கள மகா வித்தியாலயம், ஊராபொல மத்திய கல்லூரி கஹட்டோவிட்ட முஸ்லிம் பாலிகா மகா வித்தியாலயம், கஹட்டோவிட்ட அல் பத்ரியா மகா வித்தியாலயம், அல் இமாம் ஷாபிஈ நிலைய மாலைநேர அல் குர்ஆன் பாடசாலை, என்பவற்றின் 100 மாணவர்கள் பயன்பெற்றனர்.
அல் இமாம் ஷாபிஈ நிலையத்தின் பணிப்பாளர் சபைத் தலைவரும் பஹன மீடியா நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளருமான அஷ்ஷெய்க் எம்.எஸ்.அப்துல் முஜீப் கபூரி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் விசேட பேச்சாளராக கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார். அவர் மேலும் கூறியதாவது,
நாட்டில் இவ்வருடம் அரச பாடசாலைகளில் அறிமுகம் செய்துள்ள புதிய கல்விச் சீர்திருத்தம் மாணவர்களின் நடத்தை மாற்றத்தில் முக்கிய கவனம் செலுத்துகின்றது. வெறுமனே தகவல்களை நிரப்பிக் கொள்வதும், பரீட்சையில் சித்தியடைவதும் மட்டுமல்ல கல்வி என்பது. மாறாக இதனுடன் சேர்ந்து ஆன்மீகமும் கட்டியெழுப்பப்பட வேண்டும்.
இதற்கான அடிப்படையை புதிய கல்விச் சீர்திருத்தம் உள்வாங்கியுள்ளது. பிள்ளைகள் என்ன படித்தார்கள் என்று கேட்கும் யுகம் மாறி, ஏன் ஒரு விடயத்தைப் படித்தார்கள். அதனால் அவர்களது வாழ்க்கையில் ஏற்பட்ட மாற்றம் என்ன என்று கேட்கும் யுகம் உருவாக வேண்டும். அதற்கான ஒரு பாதையை இப்புதிய கல்விச் சீர்திருத்தம் அமைக்கும் என்று தான் நம்புவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
இந்நிகழ்வில் அல்பத்ரியா மகா வித்தியாலய அதிபர் எம்.ஏ.எம்.எம். அஸ்மீர், முஸ்லிம் பாலிகா மகா வித்தியாலய அதிபர் எம்.எம்.ஸர்ஜூன், ஓய்வு நிலை தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் எம்.எம்.முஹம்மத், கஹட்டோவிட்டாவின் கிராமசேவை உத்தியோகத்தர்கள், சமுர்த்தி அதிகாரிகள் மற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.
மேலும் பாடசாலை ஆசிரியர்கள், மாணவர்களின் பெற்றார்கள் ஆகியோர் கலந்து பயனடைந்த இந்நிகழ்வில், கஹட்டோவிட்டாவின் அயல் கிராமத்தைச் சேர்ந்த சகோதர சிங்கள சமூகத்தின் மாணவர்களும் அவர்களது பெற்றோர்களும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

