துருக்கி தலைநகர் அங்காராவில் நிகழ்ந்த பயங்கர விமான விபத்தில், லிபியா நாட்டின் இராணுவ தளபதி முகம்மது அலி அகமமது அல் ஹதாத் உள்ளிட்ட நான்கு பேர் உயிரிழந்தனர். இந்தத் தகவல் சர்வதேச அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
லிபியா நாட்டின் இராணுவ தளபதியான முகம்மது அலி அகமமது அல் ஹதாத், துருக்கிக்கும் லிபியாவுக்கும் இடையிலான பாதுகாப்பு ஒத்துழைப்பு குறித்து ஆலோசிப்பதற்காக அங்காரா சென்றிருந்தார்.
அங்கு நடைபெற்ற உயர்மட்ட பாதுகாப்பு குழுக் கூட்டத்தில் பங்கேற்றுவிட்டு, தனது பணிகளை முடித்துக்கொண்டு லிபியா திரும்புவதற்காக விமானத்தில் புறப்பட்டார்.
அங்காரா விமான நிலையத்திலிருந்து இராணுவ தளபதி மற்றும் அவரது குழுவினர் பயணித்த தனியார் விமானம் வானில் ஏறிய சில நிமிடங்களிலேயே கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது.
இந்த கோர விபத்தில் விமானத்தில் பயணித்த இராணுவ தளபதி அல் ஹதாத் மற்றும் அவருடன் இருந்த மற்ற 3 அதிகாரிகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
இந்தத் துயரச் செய்தியை லிபிய பிரதமர் அப்துல் ஹமித் டெபிபா தனது அதிகாரப்பூர்வ சமூக வலைதளப் பக்கத்தில் உறுதிப்படுத்தியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், “அங்காராவிற்கு அலுவல் பூர்வமாக பயணம் மேற்கொண்டு விட்டு லிபியா திரும்பிய போது, இராணுவ தளபதி உள்ளிட்டோர் பயணித்த விமானம் விபத்தில் சிக்கியது என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த சோகமான விபத்தில் நமது ராணுவ தளபதி உயிரிழந்துள்ளார். இது லிபியாவிற்கு ஈடு செய்ய முடியாத மிகப்பெரும் பேரிழப்பு” என்று உருக்கமாகக் குறிப்பிட்டுள்ளார்.
விமானம் விபத்துக்குள்ளானதற்கான சரியான காரணம் குறித்து துருக்கி நாட்டு வான்வழி பாதுகாப்பு அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தொழில்நுட்பக் கோளாறு காரணமா அல்லது மோசமான வானிலை காரணமா என்பது குறித்து விரிவான ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது.
லிபியாவின் முக்கிய இராணுவத் தூணாக விளங்கிய அல் ஹதாத்தின் மறைவு அந்த நாட்டு மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
