யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ராமநாதன் அர்ச்சுனா இன்று (24) கோட்டை பொலிஸ் நிலையத்தில் சரணடைந்ததை அடுத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
அவர் நீதிமன்றில் ஆஜராகத் தவறியமைக்காக கொழும்பு நீதவான் நீதிமன்றினால் அவருக்கு எதிராக பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையிலேயே இந்தக் கைது இடம்பெற்றுள்ளது.
கடமையில் இருந்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவருக்கு அழுத்தம் கொடுத்தமை மற்றும் இடையூறு விளைவித்தமை தொடர்பான வழக்கு ஒன்றில் நேற்று (23) நீதிமன்றில் ஆஜராகத் தவறியமைக்காகவே அவர் மீது இந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்தது.
கொழும்பு பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரின் கடமைக்கு இடையூறு விளைவித்ததாக அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
