பிரபல ஊடகவியலாளர் இக்பால் அதாஸ் இயற்கை எய்தியுள்ளார். 81 வயதான அவர் நோய் நிலைமைகளால் வைத்தியசாலையில் குறுகிய காலம் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில் மரணித்துள்ளதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
இலங்கையில் கௌரவமிக்க ஊடகவியலாளராக கருதப்படும் அவர் புலனாய்வு ஊடகவியலாளராக தனது தொழிற் துறை வாழ்க்கையை முன்னெடுத்திருந்தார்.
அத்துடன் பாதுகாப்பு சார்ந்த புலனாய்வாளராகவும் அவர் பணியாற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது. தேசிய பாதுகாப்பு, அரச நிர்வாகம், அரசியல் அதிகாரம் மற்றும் சமூகத்தில் தாக்கம் செலுத்தும் பிரதான விடயங்கள் அவரது ஊடக தலைப்புகளில் முக்கிய இடம்பிடித்துள்ளன.
பலரும் பேசுவதற்கு அஞ்சிய விடயதானங்கள் குறித்து சாட்சிகள், தகவல்கள் மற்றும் புலனாய்வுகளுக்கமைய துணிச்சலாக பேசுவது இக்பால் அதாஸ் அவர்களின் சிறப்பம்சமாகும்.
இதேவேளை அவரது ஜனாசா நல்லடக்கம் இன்று பிற்பகல் தெஹிவளை முஸ்லிம் பெரிய பள்ளிவாசலுக்கு சொந்தமான பொது மயானத்தில் இடம்பெறவுள்ளது. தெஹிவளை, ஹில் வீதியிலுள்ள அவரது வீட்டில் பூதவுடல் மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.
