பிரித்தானியாவின் வளர்ச்சியடைந்து வரும் நாடுகளுக்கான வர்த்தகத் திட்டத்தின் (DCTS) கீழ், இலங்கையின் ஆடை ஏற்றுமதித் துறைக்கு பாரிய சலுகை அளிக்கும் வகையில் புதிய சீர்திருத்தங்கள் 2026 ஜனவரி 01 முதல் அமுலுக்கு வந்துள்ளன.
இந்த புதிய விதிகளின் கீழ், இலங்கை உற்பத்தியாளர்கள் முன்னெப்போதும் இல்லாத வகையில் உலகளாவிய சந்தையை அணுகும் வாய்ப்பு கிடைத்துள்ளதாக இலங்கையிலுள்ள பிரித்தானிய உயர் ஸ்தானிகராலயம் அறிவித்துள்ளது.
முக்கிய மாற்றங்கள் மற்றும் சலுகைகள்,
இந்த புதிய ஏற்பாட்டின் கீழ், இலங்கை உற்பத்தியாளர்கள் பின்வரும் சலுகைகளைப் பெற்றுக்கொள்ள முடியும்:
* 100% உலகளாவிய மூலப்பொருள் பயன்பாடு: உற்பத்தியாளர்கள் தமது ஆடைகளுக்கான மூலப்பொருட்களை உலகின் எந்தவொரு நாட்டிலிருந்தும் 100% வரை பெற்றுக்கொள்ள முடிவதுடன், பிரித்தானிய சந்தையில் தொடர்ந்தும் பூச்சிய வரிச் சலுகையை (Zero Tariffs) அனுபவிக்க முடியும்.
* எளிமைப்படுத்தப்பட்ட உற்பத்தி விதிகள்: இரண்டு குறிப்பிட்ட உற்பத்திச் செயல்முறைகள் இலங்கையிலேயே நடைபெற வேண்டும் என்ற முந்தைய கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டு, தற்போது குறைவான செயலாக்கத் தேவைகளே நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன.
* வலுவூட்டப்பட்ட பிராந்திய ஒத்துழைப்பு: ஆசிய பிராந்தியக் கூட்டமைப்பை உள்ளடக்கிய 18 நாடுகளிலிருந்து மூலப்பொருட்களைப் பெற்றுக்கொள்வதற்கும், முன்னுரிமை வரிச் சலுகைகளைப் பேணுவதற்கும் இந்தத் திட்டம் வழிவகுக்கின்றது.
இலங்கையிலிருந்து பிரித்தானியாவுக்கு மேற்கொள்ளப்படும் மொத்த ஏற்றுமதிகளில் 60 சதவீதத்திற்கும் அதிகமான பங்களிப்பை ஆடைத் துறை வழங்குகின்றது. அத்துடன், நாடு முழுவதும் சுமார் ஒரு மில்லியன் மக்களின் வாழ்வாதாரத்திற்கு இத்துறை ஆதரவளிக்கின்றது.
பிரித்தானியாவிற்கான இலங்கையின் ஆடை ஏற்றுமதியின் தற்போதைய மதிப்பு சுமார் 675 மில்லியன் அமெரிக்க டொலர்கள் ஆகும். இது இலங்கையின் இரண்டாவது பெரிய சந்தையாக விளங்கும் நிலையில், புதிய சீர்திருத்தங்கள் காரணமாக இந்த ஏற்றுமதி அளவு கணிசமாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இலங்கைக்கான பிரித்தானிய உயர் ஸ்தானிகர் ஆண்ட்ரூ பட்ரிக் இது குறித்துத் தெரிவிக்கையில்,
”உற்பத்திப் பிறப்பிட விதிகளை எளிமைப்படுத்துவதன் மூலம் இலங்கையின் பொருளாதார வளர்ச்சிக்கு பிரித்தானியா ஆதரவளிப்பதாகக்” குறிப்பிட்டார்.
இதேவேளை, ஆடை உற்பத்தியாளர்கள் சங்கங்களின் ஒன்றிணைந்த கூட்டமைப்பின் (JAAF) பொதுச் செயலாளர் யோஹான் லாரன்ஸ்,
”இந்த மாற்றங்கள் இலங்கை உற்பத்தியாளர்கள் உலகளாவிய விநியோகச் சங்கிலிகளுடன் சமமான முறையில் போட்டியிட உதவும்” என வரவேற்புத் தெரிவித்துள்ளார்.
மேலும், பிரித்தானியாவுடனான வணிகப் பேரவையின் (CBB) தலைவர் மார்க் சார்ஜனர், ”90 சதவீதத்திற்கும் அதிகமான தயாரிப்புகளுக்குப் பூச்சிய வரிச் சலுகை பெறத் தகுதியுள்ளதால், ஏனைய துறை சார்ந்த ஏற்றுமதியாளர்களும் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்” என வலியுறுத்தியுள்ளார்.
இலங்கை அரசாங்கம் மற்றும் வர்த்தக அமைப்புகளின் நீண்டகாலக் கோரிக்கைகளுக்குப் பதிலளிக்கும் வகையிலேயே இந்த சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
