இலங்கைக்கு தென்கிழக்கே வங்காள விரிகுடாவில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது, பிற்பகல் 2.00 மணியளவில் பொத்துவிலில் இருந்து சுமார் 250 கிலோமீட்டர் தென்கிழக்கே நிலைகொண்டுள்ளதாக வானிலை அவதானிப்பு நிலையம் தெரிவித்துள்ளது.
இது தென்மேற்கு வங்காள விரிகுடா ஊடாக மேற்கு நோக்கி நகர்ந்து, நாளை (09 ஆம் திகதி) மாலை 5.30 மணி முதல் இரவு 11.30 மணி வரையான காலப்பகுதிக்குள் ஹம்பாந்தோட்டைக்கும் கல்முனைக்கும் இடையில் இலங்கையின் கடற்கரையைக் கடக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இன்று (08) முதல் மறு அறிவித்தல் வரை நாட்டைச் சூழவுள்ள ஆழமான மற்றும் ஆழமற்ற கடல் பகுதிகளில் மீன்பிடி மற்றும் கடற்படை நடவடிக்கைகளில் ஈடுபடுவதைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மன்னாரிலிருந்து காங்கேசன்துறை, திருகோணமலை, பொத்துவில் மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாக காலி வரையான கடலோரப் பகுதிகளில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும். ஏனைய பகுதிகளில் மாலை அல்லது இரவு வேளைகளில் மழை பெய்ய வாய்ப்புள்ளது.
காற்றின் வேகம் மணிக்கு 35-45 கிலோமீட்டர் வரை காணப்படும். கடல் பகுதிகளில் இது அவ்வப்போது மணிக்கு 60-70 கிலோமீட்டர் வரை அதிகரிக்கக்கூடும்.
காங்கேசன்துறையிலிருந்து திருகோணமலை மற்றும் பொத்துவில் ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கடற்பரப்புகளில் கடல் அலைகள் சுமார் 2.5 – 3.5 மீற்றர் வரை உயரக்கூடும். இதனால் கடல் அவ்வப்போது கொந்தளிப்பாகவோ அல்லது மிகவும் கொந்தளிப்பாகவோ காணப்படும்.
மீன்பிடி மற்றும் கடற்படை சமூகத்தினர் இது தொடர்பாக வானிலை அவதானிப்பு நிலையம் வெளியிடும் அடுத்தடுத்த அறிவிப்புகள் குறித்து அவதானமாக இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
