இலங்கைக்கான பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர், பாகிஸ்தானில் அண்மையில் தமது கல்வியை நிறைவு செய்து நாடு திரும்பிய இலங்கை பழைய மாணவர்களுக்காக கடந்த வெள்ளிக்கிழமை பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராலயத்தில் விசேட வரவேற்பு நிகழ்ச்சி ஒன்றினை நடத்தினார்.
2019 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டு, இளங்கலை முதல் கலாநிதி பட்டம் வரை 1,000 முழுமையான புலமைப்பரிசுகளை வழங்கும் ‘அல்லாமா இக்பால் புலமைப்பரிசு திட்டத்தின்’ கீழ் பயின்ற மாணவர்களின் சாதனைகளைக் கொண்டாடும் வகையில் இந்நிழ்வு அமைந்ததுடன், இரு நாடுகளுக்கும் இடையிலான ஆழமான கல்வி உறவுகளையும் இது உறுதிப்படுத்தியது.
நிகழ்வில் உரையாற்றிய உயர்ஸ்தானிகர், இலங்கையும் பாகிஸ்தானும் நீண்டகால நட்புறவைக் கொண்டிருப்பதாகக் குறிப்பிட்டதுடன், மாணவர்களை இரு நாடுகளுக்கும் இடையிலான “பாலமாகவும்”, கல்வி வாய்ப்புகளை ஏனையோருக்கு எடுத்துச் செல்லும் “தூதுவர்களாகவும்” செயல்படுமாறு கேட்டுக்கொண்டார்.
தகுதியுள்ள மாணவர்கள் கல்வி வாய்ப்புகளைத் தவறவிடாமல் இருப்பதை உறுதிசெய்யும் பொறுப்பு பழைய மாணவர்களுக்கு உண்டு என வலியுறுத்திய அவர், மக்கள் இடையிலான உறவுகளை வலுப்படுத்த உயர்ஸ்தானிகராலயத்துடன் இணைந்திருக்குமாறு அழைப்பு விடுத்தார்.
இந்த நிகழ்வு, மாணவர்கள் தமது பாகிஸ்தானிய கல்வி அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டதைத் தொடர்ந்து, பாரம்பரிய பாகிஸ்தானிய இரவு உணவுடன் இனிதே நிறைவுற்றது.

