இலங்கைக்கான துருக்கி தூதுவர் கலாநிதி செமிஹ் லுட்ஃபு துர்குட் (Semih Lütfü Turgut) மற்றும் பேராசிரியர் ஏ.எச்.எம்.எச். அபயரத்ன ஆகியோருக்கு இடையிலான உத்தியோகபூர்வ சந்திப்பொன்று கடந்த ஜனவரி 20ஆம் திகதி ஸ்ரீ ஜயவர்தனபுர நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்றது.
இந்தச் சந்திப்பின் போது முக்கியமாகப் பேசப்பட்ட விடயங்கள் வருமாறு,
‘டிட்வா’ (Ditwa) சூறாவளியினால் புத்தளம் மாவட்டத்தில் சேதமடைந்த பாடசாலைகளை மீண்டும் கட்டியெழுப்புவதற்கு துருக்கி அரசாங்கத்தின் உதவியை அமைச்சர் கோரினார்.
இந்தக் கோரிக்கைக்கு சாதகமான பதிலை வழங்கிய தூதுவர், குறித்த பாடசாலைகளின் கட்டுமானப் பணிகளுக்கு துருக்கி அரசு முழுமையான ஆதரவை வழங்கும் என உறுதியளித்தார்.
மேலும், சேதமடைந்த பகுதிகளை நேரில் பார்வையிட்டு நிலைமைகளைக் கண்டறிவதற்காக விரைவில் அங்கு விஜயம் செய்யவுள்ளதாகவும் தூதுவர் தெரிவித்தார்.
குடிநீர் தட்டுப்பாட்டை எதிர்நோக்கும் பகுதிகளில் வாழும் மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண துருக்கி அரசாங்கம் ஒத்துழைப்பு வழங்கத் தயாராக இருப்பதாகவும் இச்சந்திப்பில் தெரிவிக்கப்பட்டது.
இரு நாடுகளுக்கும் இடையிலான கல்விசார் உறவுகளை மேம்படுத்துவதற்காக, இலங்கை மற்றும் துருக்கியின் கல்வி நிறுவனங்களுக்கு இடையே கூட்டுத் திட்டங்களை முன்னெடுப்பது குறித்து கருத்துக்கள் பரிமாறப்பட்டன.
அத்துடன், இரு நாடுகளினதும் பொருளாதார, சமூக மற்றும் கலாசார அபிவிருத்திக்காக ஒன்றிணைந்து செயற்பட வேண்டியதன் அவசியம் குறித்தும் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.
இந்த நிகழ்வில் துருக்கி தூதரகத்தின் மூன்றாம் செயலாளர் செல்வி ருமேய்சா அக்சின் (Rumeysa Akcin) அவர்களும் கலந்துகொண்டார்.

