‘அனுர மீட்டர்’ (Anura Meter) தேர்தல் விஞ்ஞாபன கண்காணிப்பானின் சமீபத்திய புதுப்பிப்பின்படி, ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க 2025 நவம்பர் மாதத்திற்குள் தனது முக்கிய தேர்தல் வாக்குறுதிகளில் 10 வாக்குறுதிகளை நிறைவேற்றியுள்ளார்.
அதேவேளை, மேலும் 10 வாக்குறுதிகள் முன்னேற்றத்தில் உள்ளன, 9 வாக்குறுதிகளில் முன்னேற்றம் இல்லை, மற்றும் ஒரு வாக்குறுதி தோல்வியடைந்துள்ளது.
இந்த மதிப்பீடானது 2024 ஜனாதிபதித் தேர்தல் விஞ்ஞாபனத்தில் வழங்கப்பட்ட 30 முக்கிய வாக்குறுதிகளைக் கண்காணித்துள்ளதுடன், 2026 வரவு-செலவுத் திட்டத்தையும் உள்ளடக்கியுள்ளது; எனினும், இது ‘டிட்வா’ (Ditwah) சூறாவளிக்கு முன்னதாகவே பூர்த்தி செய்யப்பட்டது.
அனுர மீட்டரினால் கண்காணிக்கப்படும் வாக்குறுதிகள் பொதுமக்களின் அதிக ஆர்வம் மற்றும் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த விடயங்களின் அடிப்படையிலேயே தெரிவு செய்யப்பட்டுள்ளன.
இவை பொருளாதார சீர்திருத்தம், ஆளுமை, ஊழல் எதிர்ப்பு, சட்டமும் ஒழுங்கும் மற்றும் சமூகப் பாதுகாப்பு போன்ற முக்கிய கொள்கைப்பரப்புகளை உள்ளடக்கியுள்ளன.
தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவது தொடர்பான வெளிப்படைத்தன்மையை மேம்படுத்துவதற்காக Manthri.lk முன்னெடுக்கும் ஒரு சிறந்த முயற்சியே இந்த ‘அனுர மீட்டர்’ ஆகும். இதற்கு முன்னதாக முன்னாள் ஜனாதிபதிகளான மைத்திரிபால சிறிசேன மற்றும் கோட்டாபய ராஜபக்ஷ ஆகியோரின் தேர்தல் விஞ்ஞாபனங்களை முறையே ‘மைத்திரி மீட்டர்’ (Maithri Meter) மற்றும் ‘கோட்டா மீட்டர்’ (Gota Meter) ஊடாக Manthri.lk கண்காணித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
