தென்னாப்பிரிக்காவிற்கான உத்தியோகபூர்வ விஜயத்தை முடித்துக்கொண்டு சீனா திரும்பும் வழியில், இன்று காலை கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் தங்கியிருந்த சீன வெளிநாட்டு அமைச்சர் வாங் யீ (Wang Yi) அவர்களை, இலங்கை வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் விஜித ஹேரத் சந்தித்து வரவேற்றார்.
இந்தச் சந்திப்பு குறித்து கருத்து வெளியிட்ட அமைச்சர் விஜித ஹேரத், ‘டிட்வா’ (Ditwah) சூறாவளியைத் தொடர்ந்து இலங்கைக்கு சீனா வழங்கிய தாராளமான உதவிகளுக்காக சீன அரசாங்கத்திற்கும் அந்நாட்டு மக்களுக்கும் தனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்வதாகக் குறிப்பிட்டார்.
சூறாவளியால் பாதிக்கப்பட்டதாகக் கண்டறியப்பட்ட வீதிகள், புகையிரத பாதைகள் மற்றும் பாலங்களை புனரமைப்பது உள்ளிட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்திகளுக்கு சீன அரசாங்கத்தின் உதவியை அமைச்சர் இதன்போது விசேடமாகக் கோரியுள்ளார்.
இந்தக் கோரிக்கை தொடர்பாக தனது தனிப்பட்ட தலையீட்டை வழங்குவதாக உறுதியளித்த அமைச்சர் வாங் யீ, இலங்கை விரைவான மீட்சியை நோக்கிச் சரியான பாதையில் பயணிப்பதாகத் தனது நம்பிக்கையை வெளியிட்டதுடன், சீன அரசாங்கத்தின் முழுமையான ஆதரவையும் மீண்டும் உறுதிப்படுத்தினார்.
அமைச்சர் வாங் யீ உள்ளிட்ட 17 பேர் கொண்ட தூதுக்குழுவினர், தென்னாப்பிரிக்காவின் டர்பன் (Durban) நகரிலிருந்து திரும்பும் வழியிலேயே இலங்கையில் இந்தச் சிறு இடைத்தங்கல் விஜயத்தை மேற்கொண்டிருந்தனர்.
