பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் உடல்நிலை மோசமடைந்து வருவதாக வெளியாகும் தகவல்களை அடுத்து, அவருக்குத் தேவையான உரிய மருத்துவ சிகிச்சைகளை வழங்குமாறு பாக்கிஸ்தான் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்து இலங்கை முஸ்லிம் சிவில் சமூக அமைப்புகள் பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராலயத்திடம் கடிதம் ஒன்றை கையளிக்கவுள்ளன.
அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிப முன்னணிகளின் சம்மேளனம் உள்ளிட்ட பல சிவில் அமைப்புகள் இணைந்து இந்த முயற்சியை முன்னெடுத்துள்ளன.
சிறைச்சாலையில் உள்ள முன்னாள் உலகப் புகழ்பெற்ற கிரிக்கெட் வீரரும் பாகிஸ்தான் தலைவருமான இம்ரான் கான், பார்வைக் குறைபாடு உள்ளிட்ட கடுமையான உடல்நலச் சிக்கல்களால் பாதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ள நிலையில், இது குறித்து உலகளாவிய ரீதியில் பெரும் கவலை வெளியிடப்பட்டுள்ளது.
குறிப்பாக, இலங்கைக்கு சர்வதேச ரீதியில் அழுத்தம் ஏற்பட்ட பல சந்தர்ப்பங்களில் அவர் இலங்கைக்கு ஆதரவாக செயற்பட்டதை இக்கடிதத்தில் சிவில் அமைப்புகள் சுட்டிக்காட்டியுள்ளன.
கடந்த கால கோவிட்-19 பெருந்தொற்று காலத்தில், இலங்கையில் ஜனாசாக்களை தகனம் செய்வது கட்டாயமாக்கப்பட்டபோது, இஸ்லாமிய முறைப்படி அடக்கம் செய்ய அனுமதிக்குமாறு இலங்கை அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுத்த முக்கிய சர்வதேச தலைவர்களில் இம்ரான் கானும் ஒருவராவார்.
அவரது தலையீடு காரணமாகவே அன்று அந்த விவகாரத்தில் ஒரு நியாயமான தீர்வு எட்டப்பட்டதாக அவர்கள் நினைவு கூர்ந்துள்ளனர்.
இந்த கோரிக்கையானது அரசியல் நோக்கங்களுக்காக அல்லாமல் முற்றிலும் மனிதாபிமான அடிப்படையில் முன்வைக்கப்படுவதாகவும், இலங்கைக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான நீண்டகால சகோதரத்துவ உறவின் அடிப்படையில் இம்ரான் கானுக்காக குரல் கொடுப்பது இலங்கை முஸ்லிம் சமூகத்தின் கடமையாகும் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
தற்போது இலங்கை அரசாங்கம் பாகிஸ்தானுடன் மிகவும் நெருக்கமான உறவைப் பேணி வரும் நிலையில், இந்த மனிதாபிமான விவகாரத்தில் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தலையீடு செய்ய வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நாட்டின் அனைத்து சிவில் சமூக அமைப்புகளின் கையொப்பத்துடன் கூடிய இந்த மகஜர் விரைவில் பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராலயத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிப முன்னணிகளின் சம்மேளனத் தலைவர் எம்.என்.எம். ஷாம் நவாஸ் தெரிவித்துள்ளார்.
