நாட்டில் வருடாந்தம் சராசரியாக 900 சிறுவர் புற்றுநோயாளர்கள் அடையாளம் காணப்படுவதோடு, 2022 ஆம் ஆண்டுக்கான தேசிய புற்றுநோய் பதிவேட்டுத் தரவுகளுக்கமைய 940 சிறுவர் புற்றுநோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.
அத்துடன், 2021 ஆம் ஆண்டில் 199 சிறுவர்கள் இந்நோயினால் உயிரிழந்துள்ளதாக சிறுவர் புற்றுநோய் அறுவை சிகிச்சை வைத்திய நிபுணர் மஹெந்திர சோமதிலக தெரிவித்தார்.
பெப்ரவரி 15ஆம் திகதி சர்வதேச சிறுவர் புற்றுநோய் தினத்தை முன்னிட்டு நேற்று புதன்கிழமை (11) சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விசேட ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
உலகளாவிய ரீதியில் சிறுவர்களுக்கு ஏற்படும் நோய்கள் மற்றும் உயிரிழப்புகளில் புற்றுநோய் குறிப்பிடத்தக்கக் காரணமாக உள்ளது. இது ஆண்டுதோறும் அதிகரித்து வருவதையும் அவதானிக்க முடிகிறது. உலக அளவில் வருடாந்தம் சுமார் 4 இலட்சம் புதிய புற்றுநோயாளர்கள் அடையாளம் காணப்படுவதாக உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது.
இலங்கையின் 2022 ஆம் ஆண்டுக்கான தேசிய புற்றுநோய் பதிவேட்டுத் தரவுகளுக்கமைய, அடையாளம் காணப்பட்ட 940 சிறுவர்களில் 499 பேர் ஆண் பிள்ளைகளாவதுடன், 441 பேர் பெண் பிள்ளைகளாவர். அத்தோடு, பதிவாளர் நாயகத் திணைக்களத்தின் 2021 ஆம் ஆண்டு தரவுகளின்படி உயிரிழந்த 199 சிறுவர்களில் 121 பேர் சிறுவர்கள் (ஆண்) மற்றும் 78 பேர் சிறுமிகள் (பெண்) ஆவர்.
சிறுவர்களிடையே ஏற்படும் புற்றுநோய்களில் ‘லியுகேமியா’ எனப்படும் இரத்தப் புற்றுநோய் முதலிடத்தில் உள்ளது. அதனைத் தொடர்ந்து நிணநீர் புற்றுநோய், மூளைக்கட்டி மற்றும் எலும்புப் புற்றுநோய் என்பனவும் பரவலாக அடையாளம் காணப்படுகின்றன. இவ்வாறான நோய்கள் பிரதானமாக சிறுவர்களுக்கு மாத்திரமே ஏற்படுவதைக் காணக்கூடியதாக உள்ளது.
நோயை ஆரம்பத்திலேயே இனங்கண்டு சிகிச்சைகளைத் தொடர்ச்சியாகப் பெறுவதன் மூலம், அதனை முழுமையாகக் குணப்படுத்தக்கூடிய வாய்ப்பு 80 சதவீதமாகக் காணப்படுகிறது. எனினும், இலங்கையில் துரதிஷ்டவசமாக நோய் முற்றிய நிலையிலேயே பிள்ளைகள் அழைத்து வரப்படுகின்றமை வருந்தத்தக்க விடயமாகும்.
