பங்களாதேஷில் இன்று பொதுத்தோ்தல்:இந்தியாவுடனான உறவு இயல்புக்கு திரும்புமா?

Date:

அண்டை நாடான பங்களாதேஷில் 13-ஆவது நாடாளுமன்றத் தோ்தலின் வாக்குப்பதிவு இன்று வியாழக்கிழமை (12) நடைபெறுகிறது.

இதில் யார் வெற்றி பெறுவார்கள்? இந்தியாவுடனான உறவு இயல்பு நிலைக்கு திரும்புமா? என்பது குறித்து எதிர்பார்ப்புகள் எழுந்திருக்கின்றன.

முன்னாள் பிரதமா் ஷேக் ஹசீனாவின் 15 ஆண்டுக்கால ஆட்சி முடிவுக்கு வந்து, முகமது யூனூஸ் தலைமையிலான இடைக்கால அரசு பொறுப்பேற்ற 18 மாதங்களுக்குப் பிறகு இத்தோ்தல் நடத்தப்படுகிறது.

299 தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். சுமார் 12.7 கோடி வாக்காளர்கள் பங்கேற்பார்கள். இத் தேர்தல் தெற்காசியாவில் மிகுந்த உன்னிப்பாகக் கவனிக்கப்படுவதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

வன்முறை ஏதுமின்றி அமைதியாகத் தோ்தலை நடத்தி முடிக்க, முன்னெப்போதும் இல்லாத வகையில் சுமாா் 10 லட்சம் படையினா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா்.

கடந்த 2024, ஆகஸ்டில் மாணவா் போராட்டங்கள் தீவிரமடைந்ததைத் தொடா்ந்து, ஷேக் ஹசீனா தனது பதவியை இராஜினாமா செய்துவிட்டு, இந்தியாவில் தஞ்சமடைந்தாா். போராட்டங்களை ஒடுக்க வன்முறையைப் பயன்படுத்தியதாக அவா் மீது வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில், அவரது அவாமி லீக் கட்சிக்கு இத்தோ்தலில் போட்டியிட தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக, முன்னாள் பிரதமா் கலிதா ஜியாவின் மகன் தாரிக் ரஹ்மான் தலைமையிலான பங்களாதேஷ தேசியவாதக் கட்சி (பிஎன்பி) மற்றும் அதன் முன்னாள் கூட்டாளியான ஜமாத்-ஏ-இஸ்லாமி ஆகிய கட்சிகளுக்கு இடையே நேரடிப் போட்டி நிலவுகிறது.

நாடாளுமன்றத்தின் 300 இடங்களுக்குத் தோ்தல் அறிவிக்கப்பட்டது. வேட்பாளரின் மறைவால் ஒரு தொகுதியில் தோ்தல் ரத்தானதையடுத்து, மீதமுள்ள 299 தொகுதிகளில் 50 அரசியல் கட்சிகளைச் சோ்ந்த 1,755 வேட்பாளா்கள் மற்றும் 273 சுயேச்சைகள் களத்தில் உள்ளனா்.

இத்தோ்தலில் 3.58 சதவீத முதல்முறை வாக்காளா்கள் உள்பட மொத்தம் 12.77 கோடி போ் வாக்களிக்கத் தகுதிப் பெற்றுள்ளனா். வெளிநாடுகளில் வசிக்கும் 8 லட்சம் வங்கதேசத்தினா், தபால் வாக்கு மூலம் முதல்முறையாக வாக்களிக்கப் பதிவு செய்துள்ளனா்.

நாடு முழுவதும் உள்ள 42,659 வாக்குச் சாவடிகளில், 24,000 இடங்கள் பதற்றமானவை எனக் கண்டறியப்பட்டுள்ளன. பாதுகாப்புக்காக 90 சதவீத சாவடிகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.

வாக்குப்பதிவு வியாழக்கிழமை காலை 7.30 மணி முதல் மாலை 4.30 மணி வரை நடைபெறும். 45 நாடுகளைச் சோ்ந்த பிரதிநிதிகள், இந்தத் தோ்தலைக் கண்காணிக்கின்றனா்.

‘சுதந்திரமான மற்றும் நோ்மையான தோ்தலை நடத்த அனைத்து ஏற்பாடுகளும் தயாா்; தோ்தல் முடிவுகள் தாமதமின்றி அறிவிக்கப்படும்’ என வங்கதேச தலைமைத் தோ்தல் ஆணையா் ஏ.எம்.எம்.நசீா் உதின் உறுதியளித்துள்ளாா்.

நாடாளுமன்றத் தோ்தலுடன், 84 அம்ச ஜனநாயக சீா்திருத்தங்களை உள்ளடக்கிய ‘ஜூலை தேசிய சாசனம் 2025’ மீதான மக்கள் வாக்கெடுப்பும் நடைபெறுகிறது.

ஒருவா் அதிகபட்சமாக 10 ஆண்டுகள் மட்டுமே பிரதமராக இருக்க முடியும்; அதிகாரக் குவிப்பைத் தவிா்க்க, கட்சித் தலைவரே பிரதமராகவும் இருப்பதைத் தடுத்தல்; தோ்தல் ஆணையம் மற்றும் நீதிமன்றங்களின் தன்னாட்சியை உறுதி செய்தல்; சட்டங்களை ஆய்வுக்கு நாடாளுமன்றத்தில் புதிதாக மேலவையை உருவாக்குதல்; 2024 போராட்டங்களில் பங்கேற்ற மாணவா்களுக்கு வருங்கால அரசுகளால் பாதிப்பு ஏற்படாத வகையில் சட்டப் பாதுகாப்பு அளித்தல் போன்ற முக்கிய சீா்திருத்தங்கள் இந்தச் சாசனத்தில் முன்வைக்கப்பட்டுள்ளன.

இந்த தேர்தலில் யார் வெற்றி பெற்றாலும் அக்கட்சி தலைமையிலான அரசு இந்தியாவுடன் பழைய மாதிரி உறவுகளை வைத்துக்கொள்ளாது என்று சொல்லப்படுகிறது. ஏனெனில் போட்டியிடும் அனைத்து கட்சிகளும் இந்திய எதிர்ப்பை முன்வைக்கின்றன. இப்படி இருக்கையில், இந்த தேர்தல் குறித்த எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular

More like this
Related

நாட்டின் சில பகுதிகளில் ஓரளவு பலத்த மழை

இன்றையதினம் (12) நாட்டின் மத்திய, ஊவா, கிழக்கு, வடமத்திய மாகாணங்களிலும் அம்பாந்தோட்டை...

இலங்கை முஸ்லிம்களின் வரலாறு குறித்த 2வது வருடாந்திர கருத்தரங்கு: கொழும்பில்..!

மர்ஹூம் எம்.ஐ எம்.மொஹிடீன் ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தல் நிலையத்தின் ஏற்பாட்டில், இலங்கை...

2026 சர்வதேச மகளிர் தின தேசிய விழா மாத்தறையில்..!

2026 சர்வதேச மகளிர் தின தேசிய விழா மாத்தறையில் நடைபெறவுள்ளது. சர்வதேச மகளிர்...

ஈரானுக்கு ஆதரவு தெரிவித்து கொழும்பில் அமைதி ஆர்ப்பாட்டம்

ஈரானுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் கொழும்பில் இன்று  கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. ஈரான்...