ஊடகத்துறையில் தனித்துவமான தடம் பதித்து வரும் பஹன மீடியா நிறுவனத்தின் ஏற்பாட்டில், வருடாந்த இப்தார் நோன்பு துறக்கும் நிகழ்வும் “தற்போதைய உலக நிலையும் இலங்கையில் அதன் தாக்கமும் ” கலந்துரையாடலும் நேற்று (17) கொழும்பில் சிறப்பாக நடைபெற்றது.
இதன்போது சர்வதேச அரசியல் மாற்றங்கள், பொருளாதார நெருக்கடிகள் மற்றும் மத்திய கிழக்கு உள்ளிட்ட பிராந்தியங்களில் நிலவும் போர்ச் சூழல்கள் குறித்து சிறப்பான முறையில் கருத்துப் பரிமாற்றங்கள் செய்யப்பட்டன.
கொழும்பு பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் கலாநிதி அப்துல் ஹக்கீம், ஈரானுக்கான இலங்கையின் முன்னாள் தூதுவர் என். எம். சஹீட், ஜனநாயக சூழலை விரிவுபடுத்துவற்கான நிறுவனத்தின் திட்ட இயக்குநர் சமன் செனவிரத்ன ஆகியோர் இக் கலந்துரையாடலில் பங்கேற்று, உலகளாவிய நெருக்கடிகள் குறித்த முக்கிய கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டனர்.
இந்நிகழ்வில் அமரபுர நிகாயவின் மகாநாயக்கரும் தர்ம சக்தி அமைப்பின் தலைவருமான கௌரவ மாதம்பகம அஸ்ஸாஜி திஸ்ஸ தேரர் மற்றும் ஓய்வுபெற்ற ஆயர் ஆசிரி பி. பெரேரா ஆகியோரும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
மேலும், இந்த இப்தார் நிகழ்வில் பல்லின சமூகத்தைச் சேர்ந்தவர்கள், சிவில் சமூகப் பிரதிநிதிகள் மற்றும் புத்திஜீவிகள் எனப் பலர் கலந்துகொண்டு தமது மத நல்லிணக்கத்தை வெளிப்படுத்தினர்.
சிறப்பான இந்நிகழ்வு newsnow ஊடாக நேரடியாக ஒளிபரப்புச் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

