(தேசிய சூரா சபையின் (NSC) பொதுச் செயலாளர் சட்டத்தரணி ரஷீத் எம். இம்தியாஸ் அவர்களால் 14 அமைப்புகளின் சார்பாக வெளியிடப்பட்ட ஊடக அறிக்கை.)
தேசிய அளவிலான பதினான்கு முஸ்லிம் சமூக அமைப்புகள் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவிற்கு எழுதியுள்ள கூட்டுக் கடிதத்தில், உத்தேசிக்கப்பட்டுள்ள ‘பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும்’ (PSTA) சட்டமூலமானது தற்போதைய பயங்கரவாதத் தடைச் சட்டத்தை (PTA) விட மிகவும் கொடியது எனத் தெரிவித்துள்ளன.
தற்போதைய சட்டத்தை எந்தவொரு மாற்றுச் சட்டத்தையும் குறிப்பிடாமல் முற்றிலுமாக ஒழிப்பதாக தேசிய மக்கள் சக்தி (NPP) தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் உறுதியளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது!
நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் ஹர்ஷ நாணயக்காரவுக்குப் பிரதியிடப்பட்டு, ஜனாதிபதிக்கு அனுப்பப்பட்ட 28.02.2026 தேதியிட்ட கடிதத்தில் பின்வருமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது: “பொருளாதார வீழ்ச்சி, காலநிலை அனர்த்தங்கள், ஊழல் மற்றும் இன-மத பதட்டங்களில் இருந்து மீண்டு வரப் போராடும் அதேவேளை, தன்னிறைவு, வெளிநாட்டு முதலீடுகள், சுற்றுலா, ஏற்றுமதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டை ஊக்குவிப்பதற்காக உழைக்கும் ஒரு நாட்டில், உத்தேசிக்கப்பட்டுள்ள இந்தப் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் உலகளாவிய ரீதியில் இலங்கைக்கு ஓர் அச்சமூட்டும் பிம்பத்தை ஏற்படுத்தும்.
எனவே, தேசிய நலன் கருதி இது கைவிடப்பட வேண்டும்.”
நாட்டின் தேசியப் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் சட்டங்களின் அவசியத்தை NSC தலைமையிலான அமைப்புகள் ஏற்றுக்கொண்டுள்ளன. எனினும், பயங்கரவாதத்தைக் கையாள்வதற்குப் போதுமான வகையில் பாதுகாப்புத் துறைக்குப் பரந்த அதிகாரங்களை வழங்கும் பல புதிய சட்டங்கள் ஏற்கனவே இயற்றப்பட்டுள்ளதை அவை சுட்டிக்காட்டியுள்ளன. அத்துடன், எந்தவொரு அவசரநிலையையும் கையாள்வதற்குப் பொதுப் பாதுகாப்புச் கட்டளைச்சட்டம் ஜனாதிபதிக்கும் படைகளுக்கும் அபரிமிதமான அதிகாரங்களை வழங்கியுள்ளது.
இலங்கையின் தேசிய நலனை எந்தவொரு வெளிநாட்டுச் சக்திக்கும் அல்லது நிழல் அரச (deep state) நிறுவனங்களுக்கும் அடிபணியச் செய்ய வேண்டாம் எனவும் சிவில் சமூக அமைப்புகள் அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளன.
இந்தக் கூட்டுக் கடிதத்தில், புதிய சட்டமூலம் PTA-ஐ விட ஏன் மிகவும் கொடியது என்பதற்கான காரணங்களாக PSTA-வில் உள்ள ஒன்பது சரத்துகளை அந்த அமைப்புகள் சுட்டிக்காட்டியுள்ளன.
கீழே குறிப்பிடப்பட்டுள்ளவை இதற்கான சில காரணங்களாகும்:
வெளிநாட்டு அரசாங்கங்கள் அல்லது சர்வதேச நிறுவனங்களுக்கு எதிரான நியாயமான போராட்டங்களுக்கு PSTA இன் கீழ் இடமில்லை: PSTA இலங்கையின் அரசாங்கத்தை மட்டுமன்றி “வேறு எந்தவொரு அரசாங்கம் அல்லது சர்வதேச அமைப்பையும்” பாதுகாப்பதையே நோக்கமாகக் கொண்டுள்ளது.
இது இலங்கை மக்கள் பின்வரும் செயற்பாடுகளில் ஈடுபடுவதைத் தடுக்கிறது: உதாரணமாக, (அ) இலங்கைக்கு தீங்கு விளைவிக்கும் வகையில் மோசமான காலநிலை மாற்றத்தை ஏற்படுத்தும் சுற்றுச்சூழல் மாசுபாட்டைத் தொடர்வதிலிருந்து சீனா, அமெரிக்கா அல்லது இந்தியா போன்ற வெளிநாட்டு அரசாங்கங்களை நிர்ப்பந்திக்கக் கோரி ஆர்ப்பாட்டம் செய்தல், அல்லது (ஆ) இலங்கையர்களின் வாழ்க்கைச் செலவைப் பாதிக்கும் வகையில் வல்லரசு நாடுகள் தன்னிச்சையாக விதிக்கும் கட்டணங்களுக்கு எதிராகப் போராடுதல்.
இலங்கையர்களின் இத்தகைய செயற்பாடுகள் PSTA இல் முன்மொழியப்பட்டுள்ளபடி “பயங்கரவாதச் செயல்களாக” கருதப்படும்.
இது ஜனநாயக விரோதமானதுடன், கொடூரமான PTA சட்டத்தில் கூட காணப்படாத ஒன்றாகும்!
PSTA இன் கீழ் விளக்கமறியல் அல்லது தடுப்புக்காவல் காலம் குறைக்கப்படுவதற்குப் பதிலாக இரட்டிப்பாக்கப்பட்டுள்ளது: விசாரணையின்றி ஒரு வருட காலம் விளக்கமறியலில் அல்லது தடுப்புக்காவலில் வைக்கப்படுவது அரசியலமைப்பின் 13(4) ஆம் உறுப்புரையின் விதிவிலக்குகளுக்கு முரணான ஒரு தண்டனையாகும் என மேன்முறையீட்டு நீதிமன்றம் PTA இன் கீழான பல வழக்குகளில் தீர்ப்பளித்துள்ளது.
ஆனால் அரச காவலில் வைக்கும் காலத்தை அதிகபட்சம் மூன்று மாதங்களாகக் குறைப்பதற்குப் பதிலாக, PSTA புதிய வரைவானது அரச காவலின் குறைந்தபட்ச காலத்தை PTA இல் உள்ள 1 வருடத்திலிருந்து (2022 இன் 12 ஆம் இலக்க திருத்தம்) 2 வருடங்களாக நீட்டித்துள்ளது.
நீதித்துறை பிணை வழங்குவதற்கான இந்த இரண்டு வருட காலப்பகுதியை, நிறைவேற்று அதிகாரியான பாதுகாப்புச் செயலாளரின் தடுப்புக்காவல் உத்தரவின் (Detention Order) மூலமாக இல்லாமலாக்க முடியும்!
வெகுஜன ஊடகங்கள் மீண்டும் ஒருமுறை பயங்கரவாத வலையின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளன: அச்சு ஊடகங்கள், இலத்திரனியல் ஊடகங்கள், இணையம், தனிப்பட்ட கடிதங்கள் மற்றும் சமூக ஊடகங்கள் உள்ளிட்ட எங்கும் வெளியாகும் காட்சிகள் மற்றும் எழுத்துக்கள் “பயங்கரவாத வெளியீடு” என PSTA இல் விவரிக்கப்படும் பயங்கரவாத வலையின் கண்காணிப்பின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளன.
இதனை மீறுபவர்களுக்கு அதிகபட்சமாக 15 வருட சிறைத்தண்டனை மற்றும்/அல்லது 15 மில்லியன் ரூபாய் அபராதம் விதிக்கப்படலாம்! PTA சட்டத்திலும் பயங்கரவாத தொடர்பான விசாரணைகள் அல்லது செய்திகளை வெளியிடுவதைத் தடைசெய்யும் ஏற்பாடு அதிகபட்சம் ஐந்து வருட சிறைத்தண்டனையுடன் இருந்தது, ஆனால் இது 2022 இன் 12 ஆம் இலக்க திருத்தம் மூலம் ரத்து செய்யப்பட்டது.
PSTA சட்டமானது PTA ஐ விட மிகவும் கொடூரமானதாகும். மக்களின் கருத்துச் சுதந்திரத்தின் மீதான தாக்குதலுக்கான தளமாக PSTA அமைவதற்கு இது பல உதாரணங்களில் ஒன்றாகும்!
நீதித்துறையின் மீது நிறைவேற்று அதிகாரம் ஆதிக்கம் செலுத்துகிறது; பாதுகாப்புச் செயலாளரின் தடுப்புக்காவல் உத்தரவுகளை நீதவான்கள் அல்லது மேல் நீதிமன்ற நீதிபதிகளால் மீற முடியாது: சந்தேக நபர்களை அரச காவலில் தடுத்து வைப்பதற்கு “நிறைவேற்று அதிகாரிக்கு”, அதாவது பாதுகாப்புச் செயலாளருக்கு (முன்னர் ஜனாதிபதியால் பிரயோகிக்கப்பட்டது) மற்றும் பொலிஸ் அத்தியட்சகர்களுக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தை முழுமையாக இரத்துச் செய்து, அதனை “நீதித்துறையில்” உள்ள நீதவான்களுக்கு வழங்குவதற்குப் பதிலாக, அமைச்சுச் செயலாளர் ஒருவரால் PSTA இன் கீழ் ‘தடுப்புக்காவல் உத்தரவுகளை’ பிறப்பிக்க முடியும்.
பிணை அல்லது விளக்கமறியல் குறித்து திறந்த நீதிமன்றத்தில் இரு தரப்பினரையும் விசாரிக்கும் நீதவான்கள் மற்றும் மேல் நீதிமன்ற நீதிபதிகளைப் போலன்றி, சந்தேக நபர்களை விசாரிக்காமலேயே அவர்களது சுதந்திரத்தைப் பறிக்க இது வழியமைக்கிறது.
வழக்கு விசாரணை முடியும் வரை பாதுகாப்புச் செயலாளரால் தடுப்புக்காவல் உத்தரவுகள் (DO): வரைவுச் சட்டத்தின் 58 ஆம் பிரிவானது, பாதுகாப்புச் செயலாளர் ஊடாக ஒரு சந்தேக நபரை கைது செய்யப்பட்ட நாளிலிருந்து விசாரணை முடியும் வரை தடுத்து வைக்க அனுமதிக்கிறது.
இது குற்றம் நிரூபிக்கப்படும் வரை குற்றமற்றவர் என்ற அனுமானத்தை கேலிக்கூத்தாக்குவதுடன், சந்தேக நபருக்கு நியாயமான விசாரணைக்கான உரிமையையும் பறிக்கிறது.
நீதிமன்றக் காவலில் உள்ள PSTA சந்தேக நபரை சிறைத்துறை கண்காணிப்பின்றி மீண்டும் பொலிஸ் காவலுக்கு எடுக்க புலனாய்வுப் பொலிஸாருக்கு அதிகாரம்: வரைவுச் சட்டத்தின் 58(2) பிரிவானது, தடுப்புக்காவல் உத்தரவை (DO) பிறப்பிப்பதன் மூலம் விளக்கமறியல் காவலிலிருந்து சந்தேக நபரை நீக்கி, சிறைச்சாலை அதிகாரிகளின்றி பொலிஸ் காவலில் வைக்க பாதுகாப்புச் செயலாளருக்கு அதிகாரம் அளிக்கிறது.
குற்றவியல் விசாரணைகளின் வரலாற்றில் கேள்விப்படாத வகையில், விசாரணை நடைபெற்றுக்கொண்டிருக்கும் போதே சந்தேக நபர்களை அச்சுறுத்தும் சூழ்நிலையில் வைப்பதும், எதிரிக்கு நியாயமான விசாரணையை மறுப்பதும் இதன் மூலம் நிகழ்கிறது! இவ்வேற்பாடானது பொலிஸ் காவலில் இருக்கும் போது சித்திரவதைக்கு உள்ளானதாகப் புகாரளிக்க சந்தேக நபர்களை அச்சுறுத்தும்!
சிவில் சமூக அமைப்புகள், தொழிற்சங்கங்கள், அரசியல் கட்சிகள் மற்றும் மத அமைப்புகளை எவ்வித உரிய நடைமுறைகளுமின்றி ஜனாதிபதியால் தடை செய்ய முடியும்: “எந்தவொரு அமைப்பும் இந்தச் சட்டத்தின் கீழ் குற்றமாக கருதப்படும் எந்தவொரு செயலிலும் ஈடுபட்டுள்ளது” அல்லது “இலங்கை அல்லது வேறு எந்தவொரு நாட்டின் தேசியப் பாதுகாப்பிற்கும் குந்தகம் விளைவிக்கும் வகையில் சட்டவிரோதமான முறையில் செயற்படுகிறது” என நம்புவதற்கு நியாயமான காரணங்கள் உள்ளதென ஜனாதிபதி கருதினால் (நீதிமன்றத்தின் மூலம் குற்றம் நிரூபிக்கப்படாமல் அல்லது எந்தவொரு உரிய நடைமுறையுமின்றி ஜனாதிபதியின் நம்பிக்கையின் அடிப்படையில் மட்டுமே), எவ்வித நீதித்துறை தலையீடும் இன்றி; உரிய நடைமுறையின்றி; விசாரணை அல்லது குறைந்தது அமைப்பிற்கு ஒரு காரணம்காட்டும் அறிவித்தலைக் கூட வழங்காமல், எந்தவொரு அமைப்பையும் தடை செய்வதற்கு PSTA ஜனாதிபதிக்கு அதிகாரம் அளிக்கிறது.
சிவில் சமூகம் தங்களை விசாரிக்காமலேயே தடை செய்யப்படுவதாக அச்சுறுத்தப்படக்கூடிய மிக விரிவான அதிகாரங்களை PSTA வழங்குகிறது.
ஜனாதிபதி முறைமையை முற்றாக ஒழிப்பதாக தனது விஞ்ஞாபனத்தில் உறுதியளித்த ஜனாதிபதிக்கு இது வழங்கப்படுகின்ற ஒரு கொடூரமான அதிகாரமாகும்.
இந்த ஏற்பாடு சிவில் சமூக அமைப்புகளின் சங்கச் சுதந்திரத்திற்கு மட்டுமன்றி, தொழிற்சங்கங்கள், அரசியல் கட்சிகள் மற்றும் மத அமைப்புகளுக்கும் ஒரு பாரிய அச்சுறுத்தலாகும்!
பாராளுமன்றச் சட்டம் ஒன்றின் கீழ் அவசரகால அதிகாரங்களை இயல்பாக்குதல்: ஊரடங்கு உத்தரவுகள் (பிரிவு 64), கட்டுப்பாட்டு உத்தரவுகள் (64), PSTA (24) மூலம் ஆயுதப் படைகளுக்கு அதிகாரம் அளித்தல் போன்றவை தற்போது அவசரகால நிலைமை முறையாகப் பிரகடனப்படுத்தப்படும் அசாதாரண சூழ்நிலைகளில் மட்டுமே ஜனாதிபதியால் பயன்படுத்தப்படுகின்றன! உடனடியாக அவசரகால அதிகாரங்களைப் பயன்படுத்த அரசாங்கத்திற்கு PSTA அதிகாரமளிக்கும் என்பதுடன், மக்களைப் பாதுகாப்பதாகக் கூறிக்கொண்டு மக்களின் சுதந்திரத்தை மோசமாக அச்சுறுத்தும் அசாதாரண அதிகாரங்களை ‘சாதாரண அதிகாரங்களாக’ இது இயல்பாக்கும். அத்துடன் இலங்கை ஒரு பொலிஸ் ராஜ்யமாக மாறுவதற்கும் இது வழிவகுக்கும்!
PSTA “பயங்கரவாதம்” என்பதை வரையறுக்கவில்லை, ஆனால் பலவிதமான மற்றும் தவறான வியாக்கியானங்களுக்கு இடமளிக்கக்கூடிய பெருமளவிலான செயல்களை “பயங்கரவாத செயல்கள்” என வகைப்படுத்தியுள்ளது.
PTA ஆனது 2 ஆம் பிரிவில் 10 செயல்களை மட்டுமே கொண்டிருந்ததுடன், PSTA ஐ விட தெளிவாகவும் கட்டுப்படுத்தப்பட்ட வகையிலும் அவற்றைக் குறிப்பிட்டிருந்தது. உத்தேச புதிய சட்டமானது குற்றங்களின் விரிவான பட்டியலைக் கொண்டுள்ளதுடன், அவை அனைத்தையும் “பயங்கரவாத செயல்கள்” என்று பெயரிடுகிறது!
பரவலாகக் கண்டிக்கப்பட்ட PTA ஐ விட PSTA மிகவும் கொடூரமானதாக இருப்பதையே நாங்கள் காண்கிறோம்.
தேசிய நலன் கருதியும், அண்மையில் மேம்படுத்தப்பட்ட சட்டங்கள் போதுமானவை என்பதாலும் PTA சட்டத்தை உடனடியாக ரத்து செய்து PSTA வரைவைக் கைவிடுமாறு நீதி அமைச்சையும் அரசாங்கத்தையும் நாங்கள் வலியுறுத்துகிறோம்!
- தேசிய ஷூரா சபை
- RPSL கூட்டமைப்பு
- அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிபர் முன்னணிகளின் சம்மேளனம்
- அகில பல்கலைக்கழக முஸ்லிம் மாணவர் சங்கம்
- இலங்கை மலாய் மக்களின் மாநாடு
- ஸ்ரீலங்கா ஜமாஅத்தே இஸ்லாமி
- இலங்கை கதீப்கள் மற்றும் முஅத்தின்கள் சங்கம்
- ஸலாமா சங்கம்
- அல் முஸ்லிமாத்
- இஸ்லாமிய கற்கைகளுக்கான நிலையம்
- ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம்
- அஹதிய்யா சம்மேளனம்
- அகில இலங்கை தவ்ஹீத் ஜமாஅத்
- சிலோன் முஸ்லிம் வாலிபர் சங்கம்
- ஜம்இய்யதுல் அன்ஸாரி சுன்னத்தில் முஹம்மதிய்யா
- உலக கலாசார, அபிவிருத்தி மற்றும் பயிற்சி நிலையம்.
