ஸகாதுல் பித்ருடன் புனித ரமழானை நிறைவு செய்வோம்!

Date:

-முஹம்மத் பகீஹுத்தீன்

ஸகாதுல் பித்ர் என்பது வசதியுள்ள அனைவர் மீதும் ரமழானில் கடமையாகும் ஒரு வணக்கமாகும்.

பெருநாள் தினத்தில் தன் தேவையை பூர்த்தி செய்யக்கூடிய அளவு வசதியிருந்தால் ஏழை பணக்காரன் என்ற பாகுபாடில்லாமல் ஸகாதுல் பித்ரை கொடுப்பபது வாஜிபாகும்.

பராமரிப்பாளர் மீதுள்ள பொறுப்பு

தன்னுடைய பராமரிப்பின் கீழுள்ள அனைவருக்குமாக ஸகாதுல் பித்ராவை நிறைவேற்றுவது, பராமரிப்பாளர்கள் மீதுள்ள கடமையாகும்.

இதனை பின்வரும் ஹதீஸ் தெளிவு படுத்துகின்றது.“நீங்கள் உணவளித்து வரும் சிறியோர், பெரியோர், சுதந்திரம் பெற்றவர் , அடிமை ஆகியோரின் ஸதகதுல் பித்ரை நீங்கள் நிரைவேற்ற வேண்டுமென நபியவர்கள் கட்டளையிட்டார்கள்.” என்று இப்னு உமர் (ரழி) அவர்கள் அறிவித்துள்ளார்கள்.(அல் பைஹகீ)

“ஒரு ஸாஃ பேரீத்தம் பழம் அல்லது கோதுமையை ஸகாத்துல் பித்ராகக் கொடுப்பதை, முஸ்லிமான அடிமையின் மீதும், சுதந்திரம் பெற்றவனின் மீதும், ஆணின் மீதும், பெண்ணின் மீதும் சிறியோர் மீதும், பெரியோர் மீதும் ரஸூல் (ஸல்) அவர்கள் கடமையாக்கினார்கள். மேலும் மக்கள் பெருநாள் தொழுகைக்காகப் புறப்படுவதற்கு முன்பு அதனை நிறைவேற்றும் படியும் உத்தரவிட்டார்கள்” என்று அப்துல்லாஹ் இப்னு உமர் (ரழி) அவர்கள் இன்னொரு ரிவாயத்தில் அறிவித்துள்ளார்கள் (புகாரி)

இந்த நபி மொழிகள் ஸகாத்துல் பித்ரை நிறைவேற்றுவது சகல முஸ்லிம்களின் மீது கடமை என்பதையும், அதனை நிறைவேற்றும் பொறுப்பு பராமரிப்பாளரின் மீது சுமத்தப்பட்டுள்ளது என்பதையும் எடுத்துக் காட்டுகின்றன.

ஸகாதுல் பித்ர் ஏன் எதற்கு?

“வீண் பேச்சுக்கள் மற்றும் ஆபாச பேச்சுக்களை விட்டும் நோன்பாளியைத் தூய்மைப் படுத்துவதற்காகவும், ஏழைகளின் உணவுக்காகவும் ‘ஸகாதுல் பித்ரை’ ரஸூல் (ஸல்) அவர்கள் கடமையாக்கினார்கள். மேலும் அதனைத் தொழுகைக்கு முன் யார் நிறைவேற்றுகின்றாரோ, அது ஏற்றுக் கொள்ளப்பட்ட ஸகாத்தாகும், எவர் அதனை தொழுகைகுப் பின்னர் நிறைவேற்றுகின்றாரோ, அது ஏனைய தர்மங்களில் ஒரு தர்மமாகிவிடும்” என்று இப்னு அப்பாஸ் (ரழி)அவர்கள் அறிவிக்கின்றார்கள்.(அபூ தாவூத்)

ஸகாதுல் பித்ரின் நோக்கத்தை இந்த ஹதீஸ் தெளிவு படுத்துகின்றது.

இதன் மூலம் நான்கு விடயங்கள் எடுத்துக் காட்டப்பட்டுள்ளன.

1) நோன்பு நோற்றிருக்கும் போது நோன்பாளியிடமிருந்து ஏற்பட்ட சிறு தவறுகளுக்கு ஸகாதுல் பித்ர், பிராயச்சித்தமாக அமைகின்றது.

2) அது பெருநாள் தினத்தில் ஏழைகளுக்கு உணவாக அமைகின்றது.

3) ஸகாதுல் பித்ர் பெருநாள் தொழுகைக்கு முன் நிறைவேற்றப்படுவது அவசியமாகும்.

4) பெருநாள் தினத்தில் செல்வந்தர்கள் மாத்திரமின்றி ஏழைகள், வசதியற்றோர் என்ற பாகுபாடின்றி சகலரும் மகிழ்ச்சியுடன் இருக்க வேண்டிய ஒரு தினமாகும்.

எனவேதான் ஸஹாபாக்கள் பெருநாள் தினம் வரும் வரையில் காத்திருக்காமல் ஓரிரு தினங்களுக்கு முன்னர் அதனை நிறைவேற்றி விடுவார்கள், என்று இப்னு உமர் (ரழி) அவர்கள் அறிவித்துள்ளார்கள். (புகாரி)

நோன்பின் ஆரம்பத்தில் இருந்தே இதனை நிறைவேற்றுவது ஆகுமானதாக இருந்தாலும் ஸஹாபாக்களின் நடைமுறைக்கு ஏற்ப பெருநாளுக்கு ஓரிரு தினங்களுக்கு முன்னர் கொடுப்பதே மிகவும் பெருத்தமானது.

எமது தாய் நாடான இலங்கையில் ஸகாதுல் பித்ராக, பிரதான உணவாக உட்கொள்ளக் கூடிய அரிசியிலிருந்து தலா ஒரு நபருக்கு நவீன கால அளவையின் படி கிட்டத்தட்ட 2.5 Kg அரிசி கொடுப்பதே வழமையில் உள்ளது.

இது சம்பந்தமாக அகில இலங்கை ஜம்இய்யதுல் உளமா வெளியிட்டுள்ள பத்வாவின் சுருக்கத்தை இங்கு தருகின்றோம்:

“ஸகாதுல் பித்ரை நிறைவேற்றும் விடயத்தில் மார்க்க அறிஞர்களிடையே கருத்து வேற்றுமைகள் நிலவுகின்றன என்றும் இமாம் அபூஹனீபா றஹிமஹுல்லாஹ் அவர்கள் ஸகாத்துல் பித்ரை நிறைவேற்றும் பொழுது அதன் பெறுமதியைக் கொடுக்கலாம் என்று கூறியுள்ளார்கள்’
‘இமாம் மாலிக், இமாம் ஷாபி, இமாம்; அஹ்மத் இப்னு ஹன்பல் போன்ற பெரும்பான்மையான மார்க்க அறிஞர்கள் பிரதான உணவாக உட்கொள்ளக்கூடிய தானிய வகையில் இருந்தே இது வழங்கப்பட வேண்டும் என்றும், இதற்கு மாற்றமாக அதன் பெறுமதியைக் கொடுப்பது கூடாது என்றும் கூறுகின்றனர்’
‘இவ்வடிப்படையில், ஸகாத்துல் பித்ரை நிறைவேற்றும் போது பிரதான உணவாகக் கொள்ளப்படும் தானிய வகையில் இருந்து கொடுத்தல் வேண்டும். இதனை நிறைவேற்றும் போது ஒவ்வொருவரும் ஒரு ஸாஃ அளவு வீதம் கொடுத்தல் வேண்டும். ஒரு ஸாஃ என்பது 2.4 கிலோ கிராமாகும்’ என ஜம்இய்யாவின் பத்வா கூறுகிறது.

ஸகாதுல் பித்ரை பணமாக கொடுக்கலாகுமா?

கடமையான ஸகாதுல் பித்ருக்கு தானியம் கொடுப்பதற்கு பகரமாக அதன் பெறுமதியை கொடுப்பது பற்றி அன்றும் இன்றும் இஸ்லாமிய அறிஞர்கள் மத்தியில் கருத்துவேறுபாடு நிலவுகிறது.

முஸ்லிம் அறிஞர்களுக்கான சர்வதேச ஒன்றியத்தின் பொதுச் செயலாளர் அஷ்ஷெய்க் அலி அல் கரதாகி அவர்கள் பெறுமானத்தை கொடுப்பது தொடர்பாக எழுதியுள்ள ஆய்வின் சுருக்கத்தை இங்கு தருகின்றோம்.

இஸ்லாமிய சட்டப்பரப்பில் இது குறித்து மூன்று வகையான சிந்தனைப் பிரிவுகளை நாம் காணலாம்.

ஒன்று:

எத்தகைய நிலையிலும் பெறுமதியை வழங்கவே முடியாது என்று கூறும் சிந்தனைப் போக்கு. நாட்டின் பிரதான உணவுப் பொருளில் இருந்து மாத்திரமே இது வாஜிபாகும்.
இமாம்களான மாலிக், ஷாபி, ஹன்பலி ஆகிய மூன்று சிந்தனை முகாம்களின் பிரதான கருத்து அந்தந்த நாட்டில் பிரதான உணவாகக் கொள்ளக் கூடிய தானியங்களில் இருந்து மாத்திரமே ஸகாதுல் பித்ர் வழங்கப்பட வேண்டும். ழாஹிரி சிந்தனையைக் கடைப்பிடிப்போரும் இதே கருத்தையே குறிப்பிடுவர். (ழாஹிரி என்போர் சட்ட வசனத்தின் வெளிப்படையான, நேரடிக் கருத்தை மாத்திரம் நோக்கும் அணுகுமுறை கொண்டோர்)

இரண்டு:

பெறுமதியை எந்த நிலையிலும் எதுவித நிபந்தனைகளும் இன்றி தாராளமாக கொடுக்கலாம்.

இது ஹனபி மதஹபின் கருத்தாகும். இந்த கருத்தை இமாம் சுப்யானுஸ்ஸெளரி, ஐந்மதாம் கலீபா என வர்ணிக்கப்படும் கலீபா உமர் இப்னு அப்துல் அஸீஸ், ஹஸனுல் பஸரி போன்ற பல மூத்த ஆரம்பகால அறிஞர்கள் கூறியுள்ளனர்.

பெரும்பான்மையான நவீன கால உலமாக்கள் இக்கருத்தையே ஆதிரித்துள்ளனர். முன்னைநாள் ஷெய்குல் அஸ்ஹர் மஹ்மூத் ஷல்தூத் போன்ற பல அறிஞர்களும் இதே பத்வாவை தான் வழங்கியுள்ளனர்.

அவ்வாறே சர்வதேச ஸகாத் அமைப்பு, பெறுமானம் கொடுக்க முடியும் என்ற தீர்மானத்தையே கூட்டுப் பிரகடனமாக அறிவித்துள்ளது.

மூன்று:

அந்தந்த நாட்டில் பிரதான உணவாக உட்கொள்ளக் கூடிய தானியத்திருந்து கொடுப்பதே அடிப்படையானது. எனினும் மக்கள் தேவை கருத்தில் கொண்டும் நலன்கள் அடிப்படையிலும் பெறுமதியை வழங்கலாம்.

தானியங்களை கொடுப்பதை விட பணத்தை கொடுப்பது பயனுள்ளது என்ற நிலை இருந்தால் பொருளாக கொடுக்காமல் பெறுமதியை கொடுப்பதே மிகவும் சிறந்தது என்ற கருத்தை மூன்றாவது தரப்பினர் கூறியுள்ளனர்.

இதே சிந்தனையை தான் இமாம் அபூ இஸ்ஹாக், இமாம் இப்னு தைமியா போன்ற அறிஞர்களும் கொண்டுள்ளனர். (ஸுப்யானுஸ் ஸவ்ரி பிக்ஹ் கலைக்களஞ்சியம் ப:473)

பணப் பொறுமானம் கொடுப்பது செல்லுபடியாகாது என்பதற்கு முதல் தரப்பினர் முன்வைக்கும் ஆதராரம் வருமாறு:

நபி (ஸல்) அவர்கள் ஒரு ஸாஃ அளவு பேரீச்சம் பழத்தை அல்லது ஒரு ஸாஃ அளவு வாற் கோதுமையை ஸகாத்துல் பித்ராகக் கடமையாக்கினார்கள் என்ற செய்தியை இப்னு உமர் (ரழி) அவர்கள் அறிவித்துள்ளார்கள். (புகாரி)

இந்த ஹதீஸில் அதன் பெறுமதியை கொடுப்பது பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை. பெறுமானத்தை கொடுப்பது ஆகும் என்றிருந்தால் நிச்சியமாக இறை தூதர் (ஸல்) அதனை தெளிவாக கூறியிருப்பார்கள். எனவே பெறுமானத்தை வழங்குவது ரஸுல் (ஸல்) அவர்கள் ஏவியதை நிறைவேற்றியதாக அமையாது. இது முதல் தரப்பினர் முன்வைக்கும் நியாயமாகும் .

அவ்வாறே ஸகாதுல் பித்ர் ஒரு இபாதத். அதில் மாற்றங்கள் மற்றும் திருத்தங்கள் பற்றி ஆய்வு செய்யாமல், உள்ளதை உள்ளவாறே பின்பற்றுவதே அடிப்படை விதியாகும். இதுவும் முதல் தரப்பினர் முன்வைக்கும் மற்றொரு நியாயமாகும்.

இந்த ஆதரத்தை மறுதளிக்கும் எதிர் தரப்பு அறிஞர்கள், மேலே குறிப்பிட்ட ஹதீஸில் நபி (ஸல்) அவர்கள் நேரடியாக பேரீச்சம் பழம் அல்லது கோதுமையை ஸகாதுல் பித்ராக கொடுப்பதை கடமையாக்கவில்லை என்றும் அது நபித் தோழரான இப்னு உமரின் கூற்றாகவே உள்ளது என்றும் குறிப்பிடுவர்.

மேலும் குறிப்பிட்ட தானியங்கள் மாத்திரம் தான் கொடுக்க வேண்டும் அதற்கு பகரமாக வேறு எந்த தானியமும் கொடுக்கலாகாது என நபி (ஸல்) தெளிவாகவும் நேரடியாகவும் கூறியதாக எந்த ஒரு ஹதீஸ் வசனத்தையும் சுன்னாவில் காணமுடியாது என்ற நியாயத்தையும் மறுதளிப்போர் முன்வைத்துள்ளனர்.

அவ்வாறே முதல் தரப்பினர் கூறும் ஹதீஸின் அடிப்படையில் நோக்கும் போது அந்தந்த நாட்டு தானியங்களைக் கூட கொடுக்க முடியாது. காரணம் இந்த ஹதீஸில் அரிசி போன்ற தானியம் குறித்து நபி (ஸல்) பேசியதே கிடையாது.

இருந்தும் பெறுமதியை கொடுக்க முடியாது என மறுக்கும் அறிஞர்கள் கோதுமைக்கு பகரமாக பிராதான உணவாக கொடுக்கும் தானியங்களை கொடுப்பதற்கு அனுமதி கொடுத்துள்ளார்கள்.

இதுவும் ஹதீஸின் நேரடிக் கருத்துக்கு முரணானதே. கோதுமை அல்லது பேரீத்தம் பழத்துக்கு பகரமாக குறித்த ஒரு நாட்டில் அரிசி கொடுப்பது பொருத்தமானது என ஒப்பீட்டு அடிப்படையில் சிந்திக்க முடியுமாயின், அரிசி கொடுப்பதற்கு பதிலாக பெறுமானம் கொடுப்பதையும் அங்கீகரிக்க வேண்டும் என்பதே அடுத்த தரப்பினரின் வாதாமாக உள்ளது.

உண்மையில் ஸகாதுல் பித்ர் என்ற கடமை அறிவை பயன்படுத்தி ஆய்வு செய்வதை தடுக்கும் ஒரு வணக்க வழிபாடு அல்ல. ஸகாதுல் பித்ர் ஒரு இபாதத் போலவே அதில் சமூக நலன்களும் இணைந்துள்ளன.

எனவே அந்த வணக்கத்தை இருப்தை உள்ளவாறே பின்பற்றும் வணக்க வழிபாடாக நோக்க முடியாது. காரணம் அந்த வணக்கத்தை நிறைவேற்றுவது ஏழைகளின் தேவையோடு தொடர்பு பட்டுள்ளது.

அதனால் தான் கோதுமைக்கு பகரமாக அரிசி கொடுக்கலாம் என ஒப்பிட்டு நோக்கி அறிஞர்கள் கருத்து கூறியுள்ளனர்.

அதேபோல இன்றை சூழலில் பெறுமானம் கெடுப்பதுதான் மிகவும் பயனுள்ளதாக அமையுமாயின் அந்த முடிவுக்கு வருவதும் நியாயமானதே என சட்ட அறிஞர்கள் அபிப்பிராயப்பட்டுள்ளனர்.

அறிஞர்களின் இத்தகையை கருத்தாடல்கள் மீதான வாசிப்பு சட்டத்துறையில் உள்ள கருத்து வேறுபாடுகளை புரிந்து கொள்வதற்கும் புரிந்துணர்வோடு அடுத்தவர் கருத்துக்களை மதிப்பதற்கும் வழிவகுக்கிறது.

ஸகாதுல் பித்ரின் பிரதான நோக்கங்களில் ஒன்று பெருநாள் தினத்தில் இல்லாதோருக்கு கொடுத்துதவுவதாகும். அவர்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவு செய்வதன் மூலம் ஏழைகளின் விழியில் ஆனந்தக்க கண்ணீரை காண்பதே ஸகாதுல் பித்ரிவின் ஒரு இலக்காக உள்ளது. எல்லேரும் உணவுப் பொருட்களை அள்ளி அள்ளி கொடுப்பதன் மூலம் இலக்கை அடையவே முடியாது என்பது மிகவும் தெளிவு.

எனவே காலமற்றத்தை கருததிற் கொண்டு பணத்தை கொடுப்பதன் மூலம் அவர்களின் தேவைகள் நிறைவேறுமாயின் அது ஸகாதுல் பித்ர் கடமையின் இலக்கை நிறைவேற்றியதாகவே அமையும்.

இந்த உண்மையை புரிந்த ஸஹாபாக்கள் அன்றே பகுத்தறிவை பயன்படுத்தி இதில் பல மாற்றங்களை செய்தார்கள். உமர் (ரழி) அவர்கள், அப்துல்லா இப்னு உமர் (ரழி) அவர்கள், இப்னு மஸ்ஊத் (ரழி) அவர்கள், இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள், முஆத் பின் ஜபல் (ரழி) அவர்கள் ஆகிய மூத்த ஸஹாபாக்கள் பித்ராவுக்கு பணப்பெறுமாமனத்தை கொடுத்ததாக அபூ இஸ்ஹாக் (தாபிஈ) ரஹ் அவர்கள் அறிவித்துள்ளார்கள். (முஸன்னப் இப்னு அபீ ஷைபா 3/174, உம்ததுல் காரி 9/8)

இல்லாதோருக்கு பொருத்தமான தேவையான உணவுகளை ஹதீஸ் சொல்லாவிட்டாலும் அவர்கள் பொருத்தமானதை தேர்ந்து கொடுத்துள்ளார்கள். கொடுக்கும் அளவு போதாது என்று கருதிய போது அதன் அளவைவிடக் கூட்டியும் கொடுத்துள்ளார்கள்.

முஆவியா (ரழி) அவர்கள் மதீனாவின் பேரித்தம் பழத்தின் நிறையானது ஷாமின் கோதுமைக்கு நிகரா இருக்க வேண்டுமானால் அளவை கூட்ட வேண்டும் என்று கருதியபோது அபூ ஸஈத் குத்ரி (ரழி) அவர்களுக்கு அந்த மாற்றத்தை செய்ய அனுமதித்தார்கள். இது வணக்க வழிபாட்டை நடைமுறைப்படுத்தும் போது சமூகக் காரணிக்கும் இடம் கொடுத்தே யோசித்துள்ளார்கள் என்பதை காட்டுகிறது.

இங்கு அவர்கள் அறிவுக்கு வேலை கொடுத்து கடமையை நிறைவேற்றியுள்ளர்கள்.

ஒரு முறை ஸகாத் பொருட்களை வசூலிப்பதற்காக யமன் தேசத்திற்கு முஆத் ரழி அவர்கள் அனுப்பிவைக்கப்பட்ட போது தானியங்களுக்கு பதிலாக அதன் பெறுமதிக்குரிய ஆடைகளை தருமாறு கேட்டார்கள்.

அது சுமப்பதற்கும் இலகுவானது. மதீனா வாழ் மக்களுக்கும் தேவையாக உள்ளது. இத்தகைய பொருள் பரிமாற்றத்தை நபிகளார் அங்கீகரித்துள்ளாகள். பணப் பெறுமானம் பார்க்காமல் இதனை செய்ய முடியாது. (பத்ஹுல் பாரி)

எனவே இன்றைய எமது தேவைக்கு ஏற்ப அதன் பெறுமானத்தை கொடுப்பது ஸஹாபாக்களின் சிந்தனையுடன் ஒத்துப் போகும் முறையாகவும் உள்ளது.

இது தவிர நல்லாட்சி புரிந்த நான்கு கலீபாக்களும் கடமையான ஸகாத் பொருட்களை வசூலிக்கும் போது பணப் பெருமானங்களை கணித்து பரிமாற்றம் செய்த வரலாற்று நிகழ்வுகள் ஏராளமாக உள்ளன.

உதாரணமாக ஒட்டகத்தின் ஸகாதை பெறும்போது அதன் வயது வித்தியாசத்தை சரி செய்வதற்காக பணப் பெறுமானம் பெறப்பட்டுள்ளது. அல்லது அதற்கு நிகராக ஆடுகள் பெறப்பட்டுள்ளன.

இந்த நிகழ்வுகள் மிகவும் பிரபல்யமானவை. மேற்கூறிய வரலாற்று நிகழ்வுகள் மற்றும் ஸஹாபாக்களின் நடைமறை உதாரணங்களை நோக்கும் போது ஸகாதுல் பித்ரை பெறுமானமாக கொடுப்பது புதிய ஒரு விடயமல்ல. அப்படி சிந்திப்பதும் புதுமையல்ல.

மூன்றாம் தரப்பினர் முன்வைத்த சிந்தனையும் நல்லதொரு அணுகுமுறையாகவே தோன்றுகிறது.

அதாவத பெருளாக கெடுப்பது அடிப்படையானது. தேவை என்று வரும்போது அல்லது பணப் பெறுமானம் மிகவும் பயனுள்ளது என்ற நிலை நிலவும் போது பெறுமானத்தை கொடுப்பதே சிறந்தது. இந்த சிந்தனையின் படி தானியமாக கொடுக்க வேண்டும் என்ற கருத்தை முற்றாக மறுக்காமல் தேவையின்போது பெறுமானத்தையும் கொடுக்கலாம் என்ற சிந்தனை முன்வைக்கப்படுகிறது.

அறிஞர்களின் கருத்தாடல்களை அவதானிக்கும் போது ஸகாதுல் பித்ரை பெறுமானமாகக் கொடுக்க முடியும் என்பதும் ஒரு தெளிவான சிந்தனையாகவே இருந்துள்ளது. வரலாற்றில் வலுவான கருத்தாகவும் அது நிலவுகிறது.

எனவே பொருளாக கொடுக்க முடியும் என்பது அடிப்படையாக இருந்தாலும் கால மாற்றங்களுக்கு ஏற்ப எந்த வழிமுறை ஏழைகளுக் மிகுந்த பயனளிக்குமோ அதனை தேர்ந்தெடுப்பதே அறிவார்ந்த செயலாகும்.

மேற்கூறிய அறிஞர்களின் கருத்தாடல்களை அவதானிக்கும் போது பின்வரும் உண்மைகள் புலனாகின்றன.

1. ஸகாதுல் பித்ர் பற்றி பேசும் ஹதீஸின் நேரடிக் கருத்தை அவதானிக்கும் போது பொருளாக கொடுக்க வேண்டும் என்ற சிந்தனையை அது சுட்டுகிறது. இந்தக் கருத்தை யாருமே மறுக்க வில்லை.

2. பெறுமானத்தை கொடுப்பது ஆகும் என்ற சிந்தனை ஒரு பலமான கருத்தாகும். அன்று தொட்டு இன்று வரை நியாயமான அறிஞர்கள் அக்கருத்தை தெரிவித்துள்ளார்கள். எனவே அந்தக் கருத்தை குறைத்து மதிப்பிடவோ அல்லது புறக்கணிக்கவோ முடியாது.

அதற்காக சமூக ஊடகங்களை பயன்படுத்தி மோதல்களை உருவாக்கவும் தேவையுமில்லை. மாற்றுக் கருத்துக்களை சீரணிக்க பழகுவதே இன்றைய தேவையாகும். வித்தியசாமான சிந்தனைகளை பக்குவமாக கலந்துரையாடும் போது முன்பு புரியாத பல உண்மைகள் புரியும். அப்போது அது அருள் என்று தெரியும்.

3. இஸ்லாம் நடைமுறைக்கு இலகுவான ஒரு மார்க்கம். கடமைகளை செய்யும் போது கஷ்டத்தை நீக்குவது அதன் சிறப்பம்சாமாகும். பணப் பெறுமானத்தை அங்கீகரிப்பதானது பித்ராவை திரட்டுவதற்கும் விநியோகிப்பதற்கும் இலகுவாக அமைகிறது.

பொதுவாக எல்லோரும் அரிசை அள்ளி அள்ளிக் கொடுத்தால் பாவம் அந்த ஏழைகள் குறைந்த விலைக்கு விற்க வேண்டிய நிர்பந்தம் ஏற்படலாம். ஆனால் ஸஹாபாக்கள் இத்தகைய கடினமா போக்ககை கடைப்பிடிக்க வில்ல. எளிமைப்படுத்தினார்கள். உரியது பொருள் வடிவில் கிடைக்காத போது அதன் பெறுமானத்தை பெறுவதற்கு வழிகாட்டடினார்கள்.

4. ஸகாதுல் பித்ரின் நோக்கம் மிகவும் தெளிவானது. ஏழைகளின் தேவையை நிறைவேற்றுவதே முதன்மையான நோக்கமாகும். எனவே பணமாக கொடுக்கும் போது அவர்கள் தங்களுடைய பல்வகை தேவவைகளையும் நிறைவு செய்து கொள்வார்கள்.

5. சில போது பணப் பெறுமானம் கொடுக்க முடியும் என்பது ஹனபி அறிஞர்கள் மாத்திரம் முன்வைதத சிந்தனை என தவராக எண்ணுவதுண்டு. அதனால் அந்த சிந்தனை பெரும்பான்மை அறிஞர்களளுக்கு மாற்றமான கருத்தாக கற்பிதம் செய்யப்படுகிறது. ஆனால் உண்மை அப்படியல்ல.

ஸகாதுல் பித்ராக பணப் பெறுமானத்தை வழங்க முடியும் என்பதை ஸஹாபாக்கள், தாபியீன்கள், அவர்களை துயர்ந்து வந்த அறிஞர்கள், ஹன்பலி மத்ஹபைச் சார்ந்த ஒரு சிலர், இப்னு தீனார், இப்னு வஹப் போன்ற சில மாலிக் மத்ஹப் அறிஞர்கள் மற்றும் ஸைதீக்கள் என பலரும் இந்த கருத்தை ஆதரித்து, நடைமுறைப்படுத்தியும் காட்டியுள்ளனர்.

அவ்வாறே ஐந்தாம் கலீபா உமர் பின் அப்துல் அஸீஸ், ஹஸனுல் பஸரீ, போன்ற ஆரம்ப கால அறிஞர்கள் என பல இமாம்கள் இந்த சிந்தனையை தான் மக்கள் மத்தியில் அறிமுகப் படுத்தியுள்ளார்கள்.

அறிஞர் அஷ்ஷெய்க் அபுல் பைழ் அஹ்மத் அல்கிமாரி (ரஹ்) அவர்கள் நபி (ஸல்) காலம் தொட்டு ஸஹாபாக்கள் காலம், தாபியீன்கள் காலம், அவர்களுக்கு அடுத்துள்ள காலங்கள் என படிமுறையாக வந்த காலங்களில் வாழ்ந்த சட்டத்துறை அறிஞர்கள் ஸகாதுல் பித்ரை பெறுமதியாக கொடுக்க முடியும் என்ற சிந்தனையை கொண்டிருந்தனர் என்ற உண்மையை தனது ஸகாதுல் பித்ர் பற்றிய நூலின் 47-48ம் பக்கங்களில் தெட்டதத் தெளிவான ஆதரங்களோடு பதிவு செய்துள்ளார்.

பெரும்பான்மையான நவீன கால அறிஞர்களும் பெறுமதியை கொடுக்க முடியும் என்ற சிந்தனையே காலத்திற்கு பொருத்தமானது என சான்று பகர்ந்துள்ளனர்.

1996ம் ஆண்டு சார்ஜாவில் நடைபெற்ற ஸகாத் தொடர்பான மாநாட்டில் அறிஞர்கள் ஒன்றினைந்து பணப் பெறுமானம் கொடுப்பது ஆகும் என கூட்டாக ஒரு தீர்மானத்தையும் பிரகடனப்படுத்தியிருந்தனர். சர்வதேச பத்வா சபைகள் பல பெறுமானத்தை கொடுக்க முடியும் என கூட்டாக பத்வா வழங்கியுள்ளன.

எனவே எந்தப் பகுதியில் எந்த நடைமுறையை பின்பற்றுவது பொருத்தமானது என்பதை அந்தந்த ஊர் தலைமைகள் தீர்மானிப்பதற்கு சட்டம் தடை அல்ல.

அறிஞர்களின் கருத்து வேறுபாடுகளை சமூகத்திற்கு அருளாகக் கண்டு எத்தகைய வழிமுறை நோக்கத்தை அடைவதற்கு மிகவும் பொருத்தமானதோ அதனை தெரிவு செய்வதே உசிதமானது.

அல்லாஹ் மிகவும் அறிந்தவன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular

More like this
Related

ஜனாதிபதியின் விசேட உரை இன்று இரவு 7.30 மணிக்கு!

நாட்டு மக்களுக்கு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க இன்று ( 17 )...

ஈரானின் பாதுகாப்புத் தலைவர் அலி லாரிஜானி கொல்லப்பட்டதாக இஸ்ரேல் அறிவிப்பு

ஈரானின் பசிஜ் எனப்படும் துணை இராணுவப் பிரிவின் தலைமைத் தளபதியைக் கொன்றதாக,...

QR முறையைத் தவிர்த்து செயல்படும் எரிபொருள் நிரப்பும் நிலையங்களுக்கு நடவடிக்கை

QR முறைமையை மீறி எரிபொருள் வழங்கும் எரிபொருள் நிரப்பும் நிலையங்கள் தொடர்பாக...

இஸ்லாமிய வெறுப்புணர்வுக்கு எதிராக ஜெனீவாவில் கைகோர்த்த OIC மற்றும் ஐநா.

ஐநா மனித உரிமைகள் பேரவையின் 61வது கூட்டத்தொடருக்கு இடையே, இஸ்லாமிய வெறுப்புணர்வை...