மதங்களுக்கு இடையிலான நல்லிணக்கத்தைப் பேணுவதில் முன்மாதிரியாகத் திகழும் புத்தளம்.

Date:

நேற்று நடைபெற்ற அருட்தந்தை திலங்க அவர்களுக்கான பிரியாவிடை நிகழ்வு!

புத்தளம் மாவட்ட சர்வ மத அமைப்பு கடந்த பல வருடங்களாக இப்பிரதேசத்தில் இன நல்லிணக்கத்தையும் சமாதானத்தையும் கட்டியெழுப்புவதில் தன்னால் இயலுமான பங்களிப்பைச் செய்து வருவது எல்லோரும் அறிந்த உண்மை.

இந்த வகையில் ஏனைய மாவட்டங்களோடு ஒப்பிடுகின்ற பொழுது, பல்வேறு தளங்களில் இந்த அமைப்பானது தொடர்ச்சியாக இந்த நல்ல பணியைச் செய்து வருவதை அனைவரும் அறிவார்கள்.

இந்த வகையில் கடந்த மூன்று வருடங்களுக்கு மேலாக புத்தளம் பிரதேசத்தின் கத்தோலிக்க திருச்சபைக்கான பொறுப்பாளராகக் கடமையாற்றிய அருட்தந்தை நிர்மால் பெரேரா அவர்கள் பதவி உயர்வு பெற்று குவைத் நாட்டிலுள்ள கிறிஸ்தவ தேவாலயத்தில் பணியாற்றுவதற்காக செல்வதை முன்னிட்டு, புத்தளம் மாவட்ட சர்வ மத அமைப்பின் ஏற்பாட்டில் புத்தளம் காசிமிய்யா அரபுக் கல்லூரி மண்டப கேட்போர் கூடத்தில் ஒரு சிறப்பான பிரியாவிடை நிகழ்வு நடைபெற்றது.

காலை 9:30 மணியளவில் ஆரம்பிக்கப்பட்ட இந்தப் பிரியாவிடை நிகழ்வில், புத்தளம் மாவட்ட சர்வ மத அமைப்பின் இணைத்தலைவர்களான நான்கு மதங்களையும் பிரதிநிதித்துவப்படுத்துதும் மதத்தலைவர்கள், இன்னும் பல பௌத்த, இந்து, கிறிஸ்தவ மற்றும் இஸ்லாம் சமயத் தலைவர்கள், இந்த அமைப்பின் முக்கிய உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

நிகழ்வு சமய வழிபாடுகளோடு ஆரம்பிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் திருமதி முஸ்னியா வரவேற்புரை நிகழ்த்தினார்.

அதனைத் தொடர்ந்து நான்கு மதங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தி கருத்துரைகள் இடம்பெற்றன.

பௌத்த மதத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி கருத்துரை ஆற்றிய கண்ணியத்திற்குரிய சுதஸ்ஸி தேரர் அவர்கள், பௌத்த சமயத்தின் அடிப்படையிலே தன்னுடைய கருத்தை முன்வைத்தார்.

இப்பிரதேசத்தில் சமய நல்லிணக்கத்திற்காக சிறந்த பணியாற்றிய அருட்தந்தை நிர்மால் அவர்களுக்குத் தன்னுடைய வாழ்த்துக்களைத் தெரிவித்ததோடு, அவருடைய கடந்த கால சேவைகளையும் நினைவுபடுத்தினார்.

இதனைத் தொடர்ந்து இந்து மதத்தின் சார்பில் கருத்துரையாற்றிய அமைப்பின் இணைத் தலைவர்களில் ஒருவரான சுந்தரராம குருக்கள் அவர்கள், இப்பிராந்தியத்தில் கடந்த மூன்று வருடங்களுக்கு மேலாக சர்வ மத அமைப்போடு இணைந்து பணியாற்றுகின்ற ஒருவர் என்ற வகையில் அருட்தந்தை நிர்மால் ஆற்றிய பணிகளை நினைவுபடுத்தினார்.

அனுபவரீதியாக அவரிடம் இருக்கின்ற சிறந்த பண்புகளையும் எடுத்துக்காட்டான பல உதாரணங்களையும் முன்வைத்து உரையாற்றினார்.

இதனைத் தொடர்ந்து இஸ்லாம் சமயத்தின் சார்பாக உரையாற்றிய அமைப்பின் மற்றொரு இணைத்தலைவரான அஷ்ஷேக் அப்துல் முஜீப் சாலிஹ் அவர்கள், அருட்தந்தை நிர்மால் அவர்களின் நல்ல பண்புகளை விதந்துரைத்தார்.

மதத்தலைவர்கள் என்ற வகையிலே மதத்தலைவர்களுக்கான பொறுப்புக்கள் சிலவற்றை நினைவுபடுத்தி, அந்தப் பொறுப்புக்களைச் செய்பவர்களாக எல்லா மதத்தலைவர்களும் இருக்க வேண்டும் என்பதனைத் தனது உரையில் வலியுறுத்தினார்.

விசேட அம்சமாக பிரியாவிடை பெற்றுச் செல்லும் அருட்தந்தை நிர்மாலுக்கு புத்தளம் மக்கள் சார்பாக மாவட்ட சர்வ மத அமைப்பினரால் நினைவுச் சின்னம் வழங்கி வைக்கப்பட்டது.

இதே வேளை ஏனைய மதத்தலைவர்களும் அவர்கள் சார்பான அன்பளிப்புக்களையும், பரிசுகளையும் அருட்தந்தை அவர்களுக்கு தமது நினைவாக வழங்கி வைத்தனர்.

அத்துடன் அண்மையில் வெளியிட்டு வைக்கப்பட்ட சிங்கள மொழியிலான ‘அபிமானவத் இதிஹாசயக்க லாங்கேய முஸ்லிம் லகுண’ நூல் நூலும் அருட்தந்தை அவர்களுக்கு இச்சந்தர்ப்பத்தில் வழங்கி வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

நிகழ்வில் புத்தளம் மாநகர சபையின் முதல்வர் இன்ஜினியர் ரின்ஷாத் அவர்களும் கலந்து கொண்டு, இந்த அமைப்புக்கான தனது ஆதரவை வெளிப்படுத்தியதோடு, அருட்தந்தை அவர்கள் எந்தளவு தூரம் மாநகர சபையோடு இணைந்து பணியாற்றினார் என்பதையும் தனது உரையில் நினைவுபடுத்தினார்.

அமைப்பின் அங்கத்தவர்கள் சார்பிலும் கருத்துக்களும் கவிதையும் இடம் பெற்றன.
பிரியாவிடை உரையில், தனக்காக ஒத்துழைப்பு வழங்கிய அனைத்து சர்வ மத அமைப்பினருக்கும் நன்றி தெரிவித்த அருட் தந்தை நிர்மான், தான் எங்கிருந்தாலும் இந்த நல்ல பணியில் ஒத்துழைப்பாக இருப்பதாக உறுதி அளித்தார்.

தான் புத்தளத்தில் இருந்த காலங்களில் சேவை செய்வதற்கு ஒத்துழைப்பு வழங்கிய எல்லோருக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொண்டதோடு, புத்தளம் உண்மையிலேயே நல்லிணக்கத்திற்கும் சமாதானத்திற்குமான ஒரு மிகச்சிறந்த முன்மாதிரி மிக்க பிரதேசமாக இருப்பதையும் பாராட்டிப் பேசினார்.

இதனைத் தொடர்ந்து இப்பிராந்தியத்திற்கு கத்தோலிக்க திருச்சபையின் புதிய பொறுப்பாளராகப் பதவி ஏற்று வந்திருக்கின்ற அருட் தந்தை சரித் கெளசல்ய அவர்களும் இங்கு கருத்துரை வழங்கினார்.

இறுதியாக அமைப்பின் செயலாளர், ஓய்வுபெற்ற ஆசிரிய ஆலோசகர் ஜனாப் நசீர் அவர்கள் நன்றியுரை வழங்க, சிறப்பான இந்நிகழ்வு நிறைவு பெற்றது.

Popular

More like this
Related

ஹஜ் 2026: இலங்கை யாத்திரிகர்களின் நலன்களை ஆராய சவூதி சென்றடைந்தார் பிரதி அமைச்சர் முனீர் முலப்பர்!

இலங்கையின் முஸ்லிம் சமய, பண்பாட்டலுவல்கள் பிரதி அமைச்சரும், ஹஜ் தூதுவருமான கௌரவ...

தமிழ்நாடு சட்டமன்ற சபாநாயகருடன் H. அப்துர் ரகீப் அவர்கள் நேரில் சந்திப்பு: இஸ்லாமிய நூல்கள் அன்பளிப்பு!

ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் அமைப்பின் முன்னாள் மாநிலத் தலைவரும், தற்போதைய மத்திய...

மூளைக்காய்ச்சல் குறித்து பொதுமக்களை அவதானமாக இருக்குமாறு எச்சரிக்கை

தெனியாய பகுதியில் உள்ள சில பாடசாலைகளில் பதிவாகியிருந்த மூளைக்காய்ச்சல் நோய், தற்போது...

வெசாக் பண்டிகையை முன்னிட்டு தன்சல் வழங்குவோருக்கான அறிவிப்பு!

எதிர்வரும் வெசாக் பௌர்ணமி பண்டிகையை முன்னிட்டு நாடு முழுவதும் நடத்துவதற்காக இதுவரையில்...