உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து விசாரணை நடத்துவதற்கும் இவ்வாறான சம்பவங்களைத் தடுப்பதற்கான பரிந்துரைகளை முன்வைப்பதற்கும் நியமிக்கப்பட்ட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு மற்றும் அக்காலப்பகுதியில் தேசிய பாதுகாப்பு தொடர்பான துறைசார் மேற்பார்வைக் குழுவினால் முன்வைக்கப்பட்ட பரிந்துரைகளை அமுல்படுத்துவதற்கு 2021-05-17 அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டிருந்தது.
எவ்வாறாயினும், அந்தப் பரிந்துரைகளை நடைமுறையில் அமுல்படுத்துவதை மேற்பார்வை செய்வதற்கான முறையான மற்றும் நிலையான பொறிமுறையொன்று இதுவரையில் நிறுவப்படாத காரணத்தினால், பரிந்துரைகளை அமுல்படுத்துவதில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தை மதிப்பிடுவதற்கு தற்போது எந்தவொரு வழிமுறையும் இல்லை.
எனவே, அந்தப் பரிந்துரைகளை வெற்றிகரமாக அமுல்படுத்துவதற்காக பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் தேசிய பாதுகாப்பை முன்னிலைப்படுத்திய பரந்த நிறுவனக் கட்டமைப்பைக் கொண்ட பொறிமுறையொன்றை நிறுவ வேண்டியதன் அவசியம் கண்டறியப்பட்டுள்ளது.
இதற்காக ஜனாதிபதி செயலகத்தின் மேற்பார்வையின் கீழ், சம்பந்தப்பட்ட அமைச்சுகள் மற்றும் நிறுவனங்களின் பிரதிநிதிகள் மற்றும் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகள் மற்றும் தேசிய பாதுகாப்புத் துறையில் நிபுணத்துவம் பெற்ற ஒருவரைக் கொண்ட குழுவொன்றை நியமிப்பதற்காக பாதுகாப்பு அமைச்சர் என்ற ரீதியில் கௌரவ ஜனாதிபதி அவர்கள் முன்வைத்த முன்மொழிவுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
